search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister sekarbabu"

    • வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.
    • இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இணையவழியில் திட்ட அனுமதி வழங்கப்படுவதால் விண்ணப்பங்கள் விரைவாக முடிக்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு, வரலாறு காணாத வகையில் 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்கப்பட்டவை 114 ஆகும்.

    இது திட்ட அனுமதி வழங்கப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். திட்ட அனுமதி விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழி மூலமே பெறப்பட்டு கூர்ந்தாய்வு செய்து ஒப்புதல் வழங்கும் முறை செயல்பாட்டிற்கு வந்தபின், விண்ணப்பங்களின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது மற்றும் இணையவழி ஒப்புதல் வழங்கியது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் உயரமான கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதி பொறுத்தவரையில் சராசரியாக ஒரு வருடத்திற்கு 65 விண்ணப்பங்கள் பெறப்படும். இணையவழி திட்ட அனுமதி மென்பொருள் செயல்பாட்டிற்கு வந்த பிறகு, 135 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக முன்பு எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது.
    • திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆலோசனை கூட்டம் இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று திருவண்ணாமலை வந்தார். அவர் இன்று காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அமைச்சர் எ.வ. வேலு, கலெக்டர் முருகேஷ், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம், மகாதீபம் தரிசன ஏற்பாடுகள் பாதுகாப்பு குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார்கள்.

    இந்த ஆண்டு கூடுதலாக 25 சதவீதம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டுள்ளன.

    பரணி தீபம் மற்றும் கார்த்திகை தீபம் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை கோவிலில் தற்போது முழு நேர அன்னதானம் நடைபெற்று வருகிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் டிபன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கண்டிப்பாக அன்னதானம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும்.

    கார்த்திகை தீபத்தின் போது வி.ஐ.பி. பாஸ் தரிசனம் முறை அமலில் இல்லை. கட்டளைதாரர் உபயதாரர் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. கடந்த ஆண்டு பரணி தீபத்தில் 4000 பக்தர்களும் மகா தீபத்தின் போது 7500 பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக அனுமதிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

    திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதிகளில் கட்டணத்தை உயர்த்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது. சூரசம்காரம் நடைபெற உள்ளது. கோவிலில் விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும். அபிஷேக கட்டணம் ரூ.500-ல் இருந்து 2000 ஆகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உயர்த்தப்பட்டது.

    ரூ.100 தரிசன கட்டணம் எப்போதும் போல் அமலில் உள்ளது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் சிறப்பு தரிசன கட்டணத்தில் ஏமாற்றப்படுகிறார்கள்.

    இதனை தடுக்க ரூ.800 சிறப்பு தரிசன கட்டணம் அமலில் உள்ளது. இது தற்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பக்தர்களிடம் ஆட்சேபனை குறித்து முன்னறிவிப்பு விளம்பரம் செய்யப்பட்டது.

    அனைத்து முன்மொழிவுகளும் பெற்ற பிறகு சிறப்பு தரிசன கட்டணத்தில் ரூ.200 கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.

    வேறு எதையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் இந்த ஆண்டு புதிதாக திருச்செந்தூர் கோவிலில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக விஷம பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனை பக்தர்கள் நம்ப மாட்டார்கள்.

    இந்த ஆண்டு அறுபடை முருகன் கோவில் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் திமுக ஆட்சியின் மீது விஷம பிரசாரத்தை செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் இன்று கேள்வி நேரத்தின் போது புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த ஆவன செய்யுமாறு கூறினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 286 கோவில்கள் உபயதாரர்கள் மூலம் புனரமைக்கப்பட்டது.

    இதற்காக உபயதாரர்கள் ரூ.600 கோடி உதவி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று பெறப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது.
    • மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோவில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை ஆணையர் அலுவகத்தில் கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதங்களை உணவு பாதுகாப்பு ஆலோசகர்கள் தரம் உறுதி செய்து செயலி மூலம் பதிவேற்றும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய திட்டங்களும், சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டங்களும் செம்மையாக நடைபெற்று வருகிறது. இரண்டு கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நாள் முழுவதும் அன்னதானத் திட்டம், 8 கோவில்களுக்கும், 754 கோவில்களில் வழங்கப்பட்டு வந்த ஒருவேளை அன்னதானத் திட்டம் 764 கோவில்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு நாள்தோறும் சுமார் 82 ஆயிரம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தாண்டு பெரியபாளையம், மேல்மலையனூர், ஆனைமலை ஆகிய 3 கோவில்களில் முழுநேர அன்னதானத் திட்டமும், 7 கோவில்களில் ஒருவேளை அன்னதானத் திட்டமும் தொடங்கப்படவுள்ளது.

    பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு 4,000 மாணவ, மாணவியர் பயனடைந்து வருகின்றனர். அதேபோல் தைப்பூசத்திற்கு பழனிக்கு வருகைதரும் பக்தர்களுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் நபர்கள் வீதம் 20 நாட்களுக்கு 2, லட்சம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டமும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் திருவிழா நாட்களில் நாளொன்றுக்கு 500 நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 15 கோவில்களில் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மேலும் 5 கோவில்களில் விரிவுப்படுத்தப்படவுள்ளது.

    சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்தோடு இருப்பதனை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் உறுதி செய்து செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனம் ஒவ்வொரு கோவிலிலும் ஆண்டிற்கு மூன்று முறை ஆய்வு செய்து அங்கு தயாரிக்கப்படும் உணவு தரமாக உள்ளதா எனவும், சமையல் கூடம், உணவருந்தும் கூடம் சுத்தமாக பாராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்.

    மாதந்தோறும் குறைந்தபட்சம் 125 கோவில்களை ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். அதனடிப்படையில் உணவு கூடங்களை மேம்படுத்துவது, சமைக்கின்ற உணவின் தரம் குறைவாக இருப்பின் அதனை உயர்த்துவது குறித்து முடிவெடுத்து பாதுகாப்பான, தரமான உணவை பக்தர்களுக்கு வழங்குவோம். இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதியானது இருக்கின்ற குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு பேருதவியாக அமையும்.

    கோவில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்கனவே செயல்பட்டு வரும் கோவில் செயலியை இதுவரையில் 25 ஆயிரம் நபர்கள் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள். அன்னதானம் தொடர்பான குறைபாடுகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் கோவில் செயலி வாயிலாகவும், துறை இணையதளத்தில் "குறைகளை பதிவிடுக" என்ற பிரிவின் வாயிலாகவும் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும் தெரிவிக்கலாம். மேலும் அந்தந்த கோவில்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் தொலை பேசி எண்கள் வாயிலாகவும் குறைகளை தெரிவிக்கலாம்.

    ஒவ்வொரு மாதமும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் சீராய்வு கூட்டத்தில் துறையின் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டாலும் குறிப்பாக கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கும் நடவடிக்கைகள், வருவாயை பெருக்கும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இதுவரை ரூ.5,217 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் ரூ.100 கோடி மதிப்பீட்டிலான கோவில் சொத்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 2 ஆயிரம் கோவில்கள் ஒரு கால பூஜையில் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலையில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை ஒழிப்பதாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மீது நடவடிக்கை கோரி பா.ஜனதாவினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    10-ந்தேதிக்குள் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் 11-ந்தேதி அவரை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மாலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அதிக அளவில் பங்கேற்கிறார்கள்.

    இதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., தூத்துக்குடி வடக்கில் முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பா, நெல்லை தெற்கு மீனாதேவ், நெல்லை வடக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தென்காசி-நீலமுரளி யாதவ், மதுரை-ராமசீனிவாசன், திருச்சி-எச்.ராஜா, பெரம்பலூர்-தடா பெரியசாமி, மயிலாடுதுறை-ஆதவன், திருவாரூர்-முருகானந்தம், கடலூர்-அஸ்வத்தாமன் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    • தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இதுவரையில் 918 கோவில்கள் கும்பாபிஷேகம் நடை பெற்று இருக்கின்றது.
    • முதன் முதலில் இங்குதான் செப்பேடுகளில் தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மயிலாடு துறை மாயூரநாத சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறு வதை முன்னிட்டு, அங்கு நிறைவுபெற்றுள்ள திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி, சட்டநாதர் கோவிலையும் பார்வையிட்டார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

    மயிலாடுதுறை, மயூர நாதர் சுவாமி கோவிலுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 9 கோடி மதிப்பீட்டிலும், துக்காச்சி, சவுந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஆபத்ச காயேசுவரர் கோவிலுக்கு ரூ,3.66 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு கோவில்களுக்கும் வரும் மூன்றாம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றன.

    தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இதுவரையில் 918 கோவில்கள் கும்பாபிஷேகம் நடை பெற்று இருக்கின்றது.

    மேலும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கோவில்கள் கும்பாபிஷேகம்கள் நடைபெற்றுள்ளது.

    சட்டநாதர் கோவில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு பள்ளம் தோண்டிய போது பல அரிய செப்பேடுகளும், உலோக திருமேனிகளும், பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன.

    முதன் முதலில் இங்குதான் செப்பேடுகளில் தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ளது. இது தமிழகத்தின் வரலாறாகும். இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. செப்பேடுகளில் மொழி பெயர்க்க வேண்டிய பாடல்கள் அரிய பாடல்கள் இருப்பதால், தொல்லியல் துறையோடு கலந்தாலோசித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதில் முதலமைச்சர் தகுந்த நல்ல முடிவினை எடுப்பார். மேலும் பல செப்பேடுகள் இருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அவற்றையும் எடுப்பதற்கு முதலமைச்சரின் ஆலோசனையோடு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியானது ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிகளில் ஆணையர் முரளீதரன், மாவட்ட கலெக்டர் மகாபாரதி, செ,இராமலிங்கம், எம்.பி. மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேட்டில், வண்ணாரப்பேட்டை போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசிமேடு கடலில் படகு போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

    இதனை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் இளைய அருணா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    கிரிக்கெட் மற்றும் படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் சிவா, இயக்குனர் விக்னேஷ்ராஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.
    • கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களை இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை மிஞ்சும் அளவிற்கு 88 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் இந்த பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகின்றது.

    இந்த பஸ் நிலைய பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ள நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம், கலைஞரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டு ஜூன் மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

    இதற்காக மாதத்திற்கு 6 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சரால் திறக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்துக்கு வரக்கூடிய பயணிகளின் வாகனங்கள், பார்க்கிங் இடம், 4 தங்குமிடம், 4 உணவு கூடங்கள் அமைக்கப்படும். 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது வீட்டு வசதிதுறை மற்றும் நகர்ப்புற துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட கலெக் டர் ராகுல்நாத், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், ஒன்றிய துணைத் தலைவர் வி.எஸ். ஆராவமுதன், ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள்.
    • ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

    திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீலிவனேஸ்வரர் கோவிலில் ரூ.7 கோடியில் 5 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் கட்டப்படும்.

    விழுப்புரம் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் கோவில், கும்பகோணம் கீழப்பழையாறை சோமநாத சுவாமி கோவில், ஈரோடு, வேலாயுதசாமி கோவில், நாமக்கல் தோளூர் நாச்சியார் கோவில், வள்ளிபுரம் நல்லாயி அம்மன் கோவில் உள்பட 15 கோவில்களில் ரூ.26 கோடி மதிப்பில் ராஜகோபுரங்கள் கட்டப்படும்.

    திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் கோவில், திருவாருர் பூவலூர் சதுரங்க வல்லப நாதசாமி கோவில் ஸ்ரீவைகுண்டம் வல்லநாடு திருமூலநாத சுவாமி கோவில் உள்பட 18 கோவில்களுக்கு ரூ.9.20 கோடி மதிப்பில் புதிய மரத்தேர்கள் செய்யப்படும்.

    சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மருதமலை கோவில் உள்பட 5 கோவில்களில் ரூ.200 கோடியில் அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

    மேலும் 108 ஆன்மீக நூல்கள் வெளியிடப்படும். ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மீக பயணத்துக்கு இந்த ஆண்டு 300 பேர் அழைத்து செல்லப்படுவார்கள். கட்டணமில்லா இலவச திருமண உதவி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.4 ஆயிரத்து 262 கோடி மதிப்புள்ள 4578 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    756 கோவில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கும்பாபிஷேகம் ,கோவில் குளத்தை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளீஸ்வரர் லிங்கத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

    பின்னர் அருகில் அருமந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் தகுதி அடிப்படையில் 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளியில் பயின்று சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைப்பு நிதி தொகை ரூ.520 கோடி உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறநிலையத்துறை ஆணையர், குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன் பிரகாஷ் உடன் இருந்தனர்.

    • கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது.
    • யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

    கோவை:

    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் கூட்டமும் உண்டு. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது.

    இந்த நிலையில் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதியாக அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கோவிலுக்கு அருகே உள்ள அங்காளம்மன் கோவில் பின்பகுதியில் 5.5 ஏக்கர் நிலத்தில் யானை குளியல் தொட்டி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு, 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த யானை குளியல் தொட்டி பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது. இதனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அங்கு இருந்த பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

    கல்யாணி யானை தினமும் 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்று மண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது.

    இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரியில், பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு சாந்தலிங்க அடிகளார் சிவ தீட்சை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சிவ தீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்செந்தூருக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார்.

    சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா சேவைக்காக 4 சக்கர வாகன பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு உபயதாரர் பணிகளை ஆய்வு செய்து பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மற்றும் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சிகளில் கலெக்டர் செந்தில்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×