என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஷ விதைகளை பரப்புகிறார் இபிஎஸ்- அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு
- கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
- காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை:
புளியந்தோப்பில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கோவில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவதா? என்று எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
தி.மு.க. ஆட்சியில் 46 கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். கல்வி பணியை தி.மு.க. ஆட்சி செம்மையாக நடத்தி கொண்டிருக்கிறது. கல்விக்கு சரஸ்வதி என்று குறிப்பிடுகிறோம். பசிப்பிணி போக்குதலும், கல்வி அளித்தலும் இந்து சமய அறநிலையத்துறையின் பணிகள் ஆகும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தான் கல்லூரிகளால் அதிகம் பயன்பெறுகின்றனர். 19 கோவில்களில் மருத்துவமனைகளையும் தொடங்கியுள்ளோம். கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ளது.
காமராஜர் காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சங்கிகள் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியிலும் அறநிலையத்துறை சார்பில் கல்விநிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் பழனி ஆண்டவர் கல்லூரியில் 2017-ம் ஆண்டு கட்டிடத்தை திறந்து வைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி விஷ விதைகளை பரப்பி வருகிறார் என்றார்.






