என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாகம்"

    • வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
    • கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய விழாவான வைகாசி விசாகத் திருவிழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் சாமி தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

     

    அவர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விசாகத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாராதனையும் தொடர்ந்து கோவில் சண்முக விலாசம் மண்டபத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவமும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் நீண்ட அலகு குத்தியும், பால் குடம் எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர்.

    அந்த வகையில் இன்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். அவர்களின் அரோகரா கோஷம் விண் அதிர செய்தது.

    சாமி தரிசனம் செய்ய வருகைதரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

     

    கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கண்காணித்து வந்தனர்.

    பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக நேற்று காலை 8 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி.ட.பிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க அவர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யும் வகையில் நேற்று காலை 6 மணியில் இருந்து நாளை மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகத்தில் மூத்த குடிமக்களுக்கு கை பட்டை வழங்கப்படுகிறது.

    கைப்பட்டை அணிந்த மூத்த குடிமக்கள் மட்டும் முதியோர்களுக்கான தனி வரிசையில் எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை வெகு விமர்சையாக நடக்கிறது.

    இதையொட்டி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்ச தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் வழங்கும் வைபவம் நடைபெறுகிறது.

    வைகாசி விசாக திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். தரிசனம் செய்யும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பொது சுகாதார வசதிகள் ஆங்காங்கே கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 14 ஆயிரத்து 500 சதுர அடியில் நிரந்தர நிழல் கொட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் கூடுதலாக தற்காலிகமாக 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக நிழல் கொட்கை அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புதுறையை சேர்ந்தவர்கள் தகவல் நிலையம், நாழிக்கிணறு பகுதி, தேரடித்திடல் ஆகிய 3 இடங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் ஏற்கனவே முதலுதவி மையம் செயல்படுகிறது.

    மேலும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மருத்துவர்கள் தகவல் நிலையம், உள்துறை பகுதிகளில் பக்தர்களுக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் இந்த பகுதியில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். கடலில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக பைபர் படகுகளுடன் நீச்சல் வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலில் மிதக்கும் கயிறு மிதக்கும் போயாக்கள், மூலமாக கடலில் புனித நீராடும் பக்தர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    பாதயாத்திரையாக தூத்துக்குடி மார்க்கமாக வரக்கூடிய பக்தர்களுக்கு இன்று காலை 8 மணியில் இருந்து நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி வரை வரும் பக்தர்களுக்கு ஆறுமுகநேரி டி.சி. டபிள்யூ பஸ் நிறுத்தம் அருகில் கையில் அடையாள பட்டை அணிவிக்கப்படுகிறது. இந்த அடையாள பட்டை அணிவிக்கப்பட்ட பாத யாத்திரை பக்தர்கள் கோவிலுக்கு வந்து அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட தனி வரிசையில் சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மூத்த குடிமக்களுக்கான தனி வரிசை அங்கு செயல்பட்டு வருகிறது. அந்த தனி வரிசையில் வரக்கூடிய மூத்த குடிமக்களுக்கு இன்று காலை 6 மணியில் இருந்து 10-ந்தேதி மாலை 6 மணி வரை மக்கள் தொடர்பு அலுவலர், அதிகாரிகள் அலுவலகத்தில் கைப்பட்டை வழங்கப்படுகிறது. கைபட்டை வழங்கும் முதியோர்களுக்கு தனியாக எளிதாக விரைவாக சென்று தரிசனம் செய்யும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதை மூத்த குடிமக்கள் மக்கள் தொடர்பு அலுவலரை தொடர்பு கொண்டு கைப்பட்டை வாங்கி பயன்படுத்தி பயனடையுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம்.
    • அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

    இறை வழிபாடு என்பது நம் மனதை ஒருநிலைப்படுத்தும். நம் வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து நம்மை மீட்டெடுக்கும். இதை உணர்ந்தவர்கள் இறை வழிபாட்டையும் விரத நாட்களையும் எப்போதும் தவறவிடுவதில்லை. அதிலும் முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் என்றால் சொல்லவா வேண்டும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாகம் நாளை வருகிறது. அத்தகைய சிறப்புமிக்க வைகாசி விசாகம் நாளில் விரதம் இருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழா தான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! விரும்பியது நடக்கும்! அதனால் தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் உள்ள முருகனின் திருத்தலங்களில் வைகாசி விசாக விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.



    நினைத்தது நடக்க வேண்டும், நம்முடைய வேண்டுதல்களும், வழிபாடுகளும் இரு மடங்கு பலனை அள்ளி தர வேண்டும் என்றால் வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை மனம் உருக வழிபட வேண்டும். அவருக்குரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.

    மந்திரங்களும், பதிகங்களும் தெரியவில்லையே என்று மனம் வருந்த வேண்டாம். எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'ஓம் சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையோ உச்சரித்தால் போதும். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். அனைத்து பலன்களும் உங்களை வந்து சேரும்.

    விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும். திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள் உங்கள் வீட்டு பூஜையறையில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக செய்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்யுங்கள். முடிந்தால், ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குங்கள். குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் அகலும். அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை.

    கடன் உள்ளிட்ட கவலைகளில் இருந்தும் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் நம்மை விடுவித்து அருளும் முருகனை

    வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம் பெறுவோம்.

    • மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.
    • ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை:

    வைகாசி விசாகத்தை முன்னிட்டு நாளை நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லையில் இருந்து நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (வண்டி எண்.06101) அதேநாள் காலை 10.50 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து இதே தேதியில் காலை 11.20 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06102), அதேநாள் மதியம் 12.55 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த ரெயில்களில் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 2, படுக்கை வசதி பெட்டி 9, 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 4 மற்றும் உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 18 பெட்டிகள் இருக்கும்.

    இதேபோல, திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06103), அதேநாள் இரவு 10.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக, நெல்லையில் இருந்து இதேதேதியில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் வரும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06104), நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும். இந்த ரெயில்களில் 2-வது வகுப்பு பொதுப்பெட்டி 10, உடைமைகளை கொண்டு செல்லும் பெட்டி (லக்கேஜ் பெட்டி) 2 என மொத்தம் 12 பெட்டிகள் இருக்கும்.

    இந்த ரெயில்கள் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆழ்வார் திருநகரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

    • வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.
    • தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன.

    வைகாசி விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றால், அன்றைய தினம்தான் அவர் அவதரித்தார்.

    வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று கங்கையில் புனித நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.

    வள்ளலார் ராமலிங்க அடிகளார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பை வைகாசி மாதத்தில்தான் தோற்றுவித்தார்.

    வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி, 108 பத்மராக கற்களால் ஆன மாலை அணிவித்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அம்மன் கோவில்களில் இந்த வைகாசி மாதத்தில்தான் கொடை விழாக்கள் நடைபெறுகின்றன.

    இஷ்வாகு வம்சத்திற்குரிய நட்சத்திரமாக இருப்பதால் விசாகம் அமைந்துள்ள கோள் நிலையில் ராம ராவண யுத்தம் நடந்ததாக ராமாயணம் கூறுகிறது.

    மணிபல்லவத் தீவில் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி, மணிமேகலையிடம் ''வைகாசிப் பவுர்ணமி அன்று கோமுகி என்ற பொய்கையில் அள்ள அள்ளக் குறையாத 'அமுத சுரபி' என்னும் அட்சயப் பாத்திரம் வெளிவரும். உலக மக்களின் பசிப்பிணியை போக்குவதற்காகவே இப்படிப்பட்ட அட்சயப் பாத்திரத்தை உனக்கு வழங்குகிறேன்'' என்று கூறி மறைந்தது, இதன்படியே மணிமேகலையும் புத்தர் பிறந்த வைகாசி முழுநிலவில் கோமுகி பொய்கையிலிருந்து வெளியே வந்த அட்சயப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு புகார் நகருக்குத் திரும்பினாள்.

    ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள பைராத் நகரின் எல்லையோரத்தில் ஓடும் பான் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, ராதாகிருஷ்ணன் கோவில். இங்கு ஆண்டுதோறும் வைஷாக பவுர்ணமி நாளில் பான்கா விழா நடக்கிறது. இந்நாளில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பான் கங்கா நதியில் நீராடி பூஜைகளும், யாகங்களும் செய்து ராதாகிருஷ்ணனை வழிபடுவார்கள்.

    தெய்வங்கள் மற்றும் மகான்களின் அவதாரத் தொடர்புடன் கூடிய நட்சத்திரங்கள் மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன. அவ்வகையில், வைகாசி விசாகம் பலராலும் பல தெய்வங்களுக்குரியதாகவும் கொண்டாடப்படுகிறது.

    பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகன் திருத்தலங்களில் வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    தெற்கு திசையின் அதிபதியும், மரண தேவதையுமான எம தர்மராஜனுக்குரியது வைகாசி விசாகமேயாகும். அன்று எம தர்மராஜனை வழிபடுவதால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    திருமழபாடி திருத்தலத்தில் மழுவேந்திய சிவபெருமான் திருநடனம் புரிந்த நன்னாள் வைகாசி விசாகமாகும்.

    பஞ்சபாண்டவரில் ஒருவரான அர்ச்சுனனுக்கு இறைவன் பாசுபதம் என்னும் ஆயுதம் வழங்கியதும் இந்நாளில்தான். இந்நாள் திருவேட்களம் என்னும் திருத்தலத்தில் பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

    ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் கோவில் கொண்டுள்ள வராக லட்சுமி நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாகம் சிறப்பான தினமாகும். சந்தனக் காப்புடன் ஆண்டு முழுவதும் காட்சிதரும் இந்த நரசிம்ம மூர்த்திக்கு வைகாசி விசாக நாளில் சந்தனப் பூச்சைக் களைவார்கள். மூல விக்கிரகத்தின் இயற்கைத் தோற்றப்பொலிவு அன்று தரிசனமாகும். பின்னர் சுமார் 500 கிலோ சந்தனம் பயன்படுத்தி சந்தனப்பூச்சு செய்வார்கள்.

    கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாக நாளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

    திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரூரிலுள்ள அவரது சமாதியில் விசேஷமாக நடைபெற்று வருகிறது.

    இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான்.

    • கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
    • விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

    • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் வரிசையில் வைகாசி விசாகத் திருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த வருடத்துக்கான திருவிழா ஜூன் 3-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சப்பரம், தந்தப்பல்லக்கு, தோளுக்கினியாள், தங்ககுதிரை, வெள்ளியானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் ஜூன் மாதம் 8-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து வைகாசி விசாகத் தேரோட்டம், மறுநாள் 9-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

    திருவிழா நடக்கும் 10 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம், இன்னிசை, வீணை இசை, நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • வைகாசி விசாக பெருந் திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • கொடிமரக் கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் ஊர்வலமாக கொண்டு வரப்படுகிறது

    கன்னியாகுமரி, மே.10-

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் விசாக பெருந்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 23-ந் தேதி மாலையில் கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மேளதாளம் முழங்க விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக நடக்கும் கொடிமரக்கயிறு கன்னியாகுமரி கிறிஸ்தவ மீனவர்களால் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரட்டு கோவிலில் ஒப்படைக்கப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந் தேதி காலை 9-௩௦ மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இந்த திருவிழா ஜூன் மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இது தவிர விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, சிறப்பு அன்னதானம், இரவு சமய சொற்பொழிவு பாட்டுக் கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, வாகன பவனி, சப்பர ஊர்வலம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 9-ம் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8-30 மணி க்குமேல் 9 மணிக்குள் திருத்தேர்வடம் தொட்டு இழுத்து தேராட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மனோதங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய்வசந்த் எம்.பி., தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், 17-வது வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ்தாமஸ் ஆகியோர் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைக்கிறார்கள்.

    10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் ஆராட்டு நிகழ்ச்சி முடிந்ததும் வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாகஅம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் வறண்ட குளத்தின் கரையில் அம்மனை வைத்து பூஜைகள் நடத்துகிறார்கள். தெப்ப திருவிழா முடிந்த பிறகு நள்ளிரவில் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த வைகாசி விசாகத் திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சிநாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் தேரிலும் கன்னியம்பலம் மண்டபத்திலும் கால் நாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • வைகாசி விசாக திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • இந்த திருவிழா ஜூன் 2-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.

    இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • வைகாசி விசாகத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அலாதிய கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகாசி விசாகத்தை யொட்டி இனிவரும் காலங்களில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாஅடுத்தமாதம் (ஜூன்)2-ந் தேதி வரை 10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை ௫ மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பாட்டுக்கச்சேரியும் 8மணிக்கு பரத நாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது . வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர் கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவி லில் ஒப்படைக்கி றார்கள்.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந்தேதி காலை 9-30மணிக்கு மேல்10-30மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திரு விழாவான 25-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 3-ம்திருவிழாவான 26-ந்தேதி காலை 7 மணிக்கு அன்னவாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 4-ம்திருவிழாவான 27-ந்தேதி காலை6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 5-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 6-ம் திருவிழாவான 29-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 7-ம்திருவிழா வான 30-ந்தேதி அதிகாலை 5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன்வீதி உலாவருதலும் பிற்பகல் 3-30மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 8ம் திருவிழாவான 31-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-30மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலாவருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம். எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சிதர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7-30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • வைகாசி விசாக வசந்த திருவிழா 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 1-ந்தேதி, 3-ந்தேதி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வருகிற 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

    முன்னதாக வைகாசி விசாக வசந்த திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்கச்சப்பரத்தில் கோவில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு வைத்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, கிரிவீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவில் சேர்கிறார்.

    10-ம் நாளான வருகிற 2-ந்தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப்பின் சுவாமி ஜெயந்திநாதர் கோவிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார்.

    அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடை பெறுகிறது.

    பின்னர் மகா தீபாராதனைக்குப் பின் தங்கச்சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோவில் சேர்கிறார்.

    இதேபோல வைகாசி விசாகத்திருவிழாவிற்கு முதல் நாளான வருகிற 1-ந்தேதி மற்றும் 3-ந்தேதி பக்தர்கள் வசதிக்காக கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×