என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர்"

    • தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    திருச்செந்தூர்:

    வடகிழக்கு பருவமழை மீண்டும் தொடங்கி உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் உள்பட 4 மாவட்டங்களில் இன்று பரவலான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆறுமுகநேரி, ஆத்தூர், காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உட்பட்ட சிவன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அங்கு தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து இன்று காலையிலும் திருச்செந்தூர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    • திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும்
    • கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும், முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்திலும் பல அதிசயங்களை பக்தர்களின் வாழ்வில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் நடத்தி வருவதால் இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.

    திருச்செந்தூரில் உள்ள மிக முக்கியமான இடம், கோவிலுக்கு எதிரில் உள்ள நாழிக்கிணறு. இங்கு நீராடினாலே நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கோவிலுக்கு தெற்கு புறம் உள்ள நாழிக்கிணற்றில் நீராடி விட்டு, பிறகு கடலில் சென்று நீராடி விட்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் கோவிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும், பிறகு மணலால் மற்ற தீர்த்தங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது நாழிக்கிணறு மட்டுமே இங்கு உள்ளதாகவும் தல புராணம் சொல்கிறது.

    இந்த நாழிக்கிணற்றிற்கு, கந்த தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது முருகப் பெருமான் தன்னுடைய திருக்கை வேலால் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுரடி பரப்பும், 7 அடி ஆழமும் கொண்ட இந்த தீர்த்தம் பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறு இருப்பது போன்ற அமைப்பில் இருக்கும்.

    கடலுக்கு மிக அருகிலேயே இருந்தும் இந்த தீர்த்தத்தின் தண்ணீர் உப்புக்கரிப்பது கிடையாது. மிகவும் சுவை தன்மை கொண்டதாகவும், எந்த காலத்திலும் வற்றாமலும் இருக்கும் இந்த தீர்த்தம் மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்கீழ் நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
    • சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட் களால் அபிஷேகம் நடை பெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான இன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் தலையா கடல் அலையா? என கூறும் வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, விநாயகர் போன்ற வேடங்கள் அணிந்து வந்தும் வழிபாடு செய்தனர்.

    பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராத னைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாரா தனை நடைபெற்று 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், யானை, சிங்க முகத்தில் வந்த அசுரனை முருகன் வதம் செய்தார். தொடாந்து, சூரனை வேலால் முருகப் பெருமான் வதம் செய்தார்.

    பின்னர், 3வதாக தன் முகத்தோடு போரிட வந்த சூரப்மனையும் வதம் செய்தார்.

    அப்போது, விண்ணை பிளக்கும் அளவில் பக்தர்களின் அரோகரா கோஷம் இருந்தது.

    • ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
    • அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.

    உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.

    மாப்பிள்ளை சுவாமி

    கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.

    12 நாள் சஷ்டி விழா

    முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.

    சந்தன மலை

    ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.

    தோஷம் போக்கும் ஞானகுரு

    அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.

    வெற்றிக்களிப்பில் முருகன்

    திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.

    • திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்.
    • மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரே கோவில் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். படையெடுத்துச் செல்லும் வீரர்கள் தங்கும் இடம்தான் படைவீடாகும்.

    முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்வதற்காக சென்றபோது வீரர்கள் தங்கியிருந்த இடம்தான் தற்போதைய திருச்செந்தூர் கோவிலாகும்.

    திருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இவ்விடத்திற்கு 'வீரபாகு ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. வீரபாகுவிற்கு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    முருகனின் அவதார நோக்கமே அசுரனை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே, இத்தலம் தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.

    முருகப்பெருமானின் வெற்றிவேல், மாமரமாக நின்ற சூரபத்மனை பிளவுப்படுத்திய இடம் திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, 'மாப்பாடு' என்னும் இடமாகும். இந்த இடம் தற்போது 'மனப்பாடு' என்று அழைக்கப்படுகிறது.

    திருச்செந்தூரில் முருகன் சேவல் கொடியுடனும், பார்வதி தேவி கொடுத்த வேலுடனும் சூரபத்மனை கொன்று வெற்றிக்கொடியுடன் மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

     

    திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்ற 2 மூலவரும் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அளவாய்பெருமான் என்ற 4 உத்சவர்களும் உள்ளனர்.

    இக்கோவிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. அவரை வணங்கிய பிறகே முருகனை வணங்கச் செல்ல வேண்டும்.

    திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் என்று 2 லிங்கங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கம் உள்ளது. திருச்செந்தூர் முருகன் இருக்கும் இடம், 'மணியடி' என்று சொல்லப்படுகிறது. இங்கு நின்று முருகனை தரிசிப்பது சிறந்தது.

    மூலவருக்குப் பின்புறம் சுரங்க அறை உள்ளது. இங்கே முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு 'பாம்பறை' என்ற பெயரும் உண்டு. மூலவருக்கு மேல் ஒரு வெள்ளி பாத்திரத்தில் பால் நிரப்பி அதில் துவாரம் அமைத்து பாலை மூலவர் மீது விழச்செய்து சுமார் 3 மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் விசேஷம் வாய்ந்தது.

    இரவு 9.45 மணிக்கு சுவாமிக்கு திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்து தீபாராதனை காட்டுவர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள். உலோகத் திருமேனியான முருகப்பெருமானுக்கு ஆண்டுக்கு 36 முறையே அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    மூலவர் யோக நிஷ்டையில் உள்ளவர் என்பதால், அவருக்கு செய்யப்படும் நெய் வைத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி சேர்ப்பதுண்டு.

    தினமும் மதிய உச்சிக்கால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு, 'கங்கை பூஜை' என்று பெயர். இக்கோயிலில் தினமும் ஒன்பதுகால பூஜை நடைபெறுகிறது.

    பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் பகல் முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. செந்தில் ஆண்டவர் கோயில் பிரணவத்தை அடிப்படையாக கொண்டு வாஸ்து லட்சணத்தோடு கட்டப்பட்டுள்ளது. கோவில் வடக்கு தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு மேற்காக 214 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. கோபுரம் யாழி மண்டபத்தின் மேல் 137 அடி உயரமும் 90 அடி நீளமும் 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் 9-வது மாடத்தில் கடிகார மாளிகை உள்ளது. இத்தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங்களாக இருப்பதாக ஐதீகம். பன்னீர் இலைகளில் விபூதி வைத்து தரப்படுவதே விபூதி பிரசாதமாகும்.

    • சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
    • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.

    தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.

    அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

    இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.

    திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.

    அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.

    9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.

    அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.

    அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

     

    இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.

    ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.

    ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.

    வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.

    அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.

    10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.

    முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.

    வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.

    திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.

    திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.

    இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.

    மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.

    இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.

    அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதல்
    • சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் 6-ம் நாளான இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி சிலைக்கு நகை சாத்துவதில் சிவாச்சாரியார்கள் - திரிசுந்தரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், சப்பரத்தில் சாமி புறப்பாடு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

    இதனால் சாமி புறப்பாட்டை பார்ப்பதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே கோயில் நிர்வாகத்தினர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்

    • திருச்செந்தூரில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • தொடர் விடுமுறை நாள் என்பதால் திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கடந்த மாதம் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது மண்டல பூஜைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    மேலும் தற்போது வெள்ளி, சனி, ஞாயிறு தொடர் விடுமுறையால் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 7மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் வெயிலில் கைக்குழந்தையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது அலை இழுத்துச் சென்று பாறைகளில் மோதி, 10 பேருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கவனமாக நீராட கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    • அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடித்திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 5 மணிக்கு உகப்படிப்பு, 6 மணிக்கு கொடி பட்டம் பதியை சுற்றி வந்து கொடியேற்றம் நடக்கிறது. அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றுகிறார்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடக்கிறது. காலை 9 மணிக்கு அன்ன தர்மம், பகல் 12 மணிக்கு உச்சிப் படிப்பு, பணிவிடை, தொடர்ந்து அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப் படிப்பு,பணிவிடை 5மணிக்கு புஷ்ப வாகன பவனி, தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.

    11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை பால் அன்ன தர்மம், உச்சிப் படிப்பு, பணிவிடை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம், சர்ப்ப வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், இந்திர வாகனம், காளை வாகனம் என பல்வேறு வாகன பவனி நடக்கிறது

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 11-ம் திருவிழா தேரோட்டம் 28-ந்தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. அன்று காலை 6மணிக்கு உகப் படிப்பு, பணிவிடை, பால் அன்ன தர்மம், 9மணிக்கு அன்ன தர்மம், நடக்கிறது. அன்று இரவு அய்யா வைகுண்டர் காளை வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் கோபால் நாடார், துணை தலைவர் அய்யா பழம், இணை செயலாளர் ராஜேந்திரன் நாடார், இணை செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், வரதராஜ பெருமாள், சுதேசன், இணைத்தலைவர்கள் விஜயகுமார், செல்வின், பால்சாமி, ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
    • 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

    தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.

    இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

    அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறுகையில்," திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.

    • திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடக்கிறது.
    • தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்தநிலையில் "திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 5 முதல் 8ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும்" என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    • Tiruchendur Murugan temple Kudamuzhukku nellai to tiruchendur special train
    • மறுமார்க்கமாக திருச்செந்தூரில் இருந்து காலை 11.20 மணிக்கு புறப்படுகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி திருச்செந்தூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இதனால் சிறப்பு ரெயில் இயக்க ரெயில்வேத்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும் ரெயில் 10.50 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். மறுமார்க்கமாக காலை 11.20 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் ரெயில் 12.55 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

    தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    ×