என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: விண்ணைப் பிளந்த அரோகரா கோஷம்- சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்
- திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
- சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கி பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட் களால் அபிஷேகம் நடை பெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்தி நாதர் அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருவிழாவான இன்று மாலையில் கடற்கரையில் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து பக்தர்கள், சாதுக்கள், சன்னியாசிகள் என லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலையில் இருந்தே கோவிலில் குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் தலையா கடல் அலையா? என கூறும் வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், அக்னி சட்டி எடுத்து வந்தும், முளைப்பாரி எடுத்து வந்தும், சிவன், பார்வதி, முருகன், வள்ளி, விநாயகர் போன்ற வேடங்கள் அணிந்து வந்தும் வழிபாடு செய்தனர்.
பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராத னைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு தீபாரா தனை நடைபெற்று 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடு துறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், யானை, சிங்க முகத்தில் வந்த அசுரனை முருகன் வதம் செய்தார். தொடாந்து, சூரனை வேலால் முருகப் பெருமான் வதம் செய்தார்.
பின்னர், 3வதாக தன் முகத்தோடு போரிட வந்த சூரப்மனையும் வதம் செய்தார்.
அப்போது, விண்ணை பிளக்கும் அளவில் பக்தர்களின் அரோகரா கோஷம் இருந்தது.






