என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Articles"

    • சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார்.
    • வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது.

    தமிழ்க் கடவுள் முருகன் பற்றி 16 ஆயிரம் பாடல்கள் பாடியவர் அருணகிரி நாதர். 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தபோது அவர் பாடிய அந்த பாடல்கள் முருக பக்தர்களால் திருப்புகழாக பாடப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகத்துக்கு இணையான சிறப்புகள் திருப்புகழுக்கு உண்டு.

    அருணகிரி நாதர் மறைந்த பின்னர் சுமார் 400 ஆண்டுகள் கழித்து 19-ம் நூற்றாண்டில் திருநெல்வேலியில் அவதரித்தவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.

    இவரை அருணாகிரி நாதரின் மறுபிறப்பு என்றே சொல்வது உண்டு. முருகனும் ஒரு தடவை அருணாகிரி நாதரின் மறுஉருவாக வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திகழ்வதாக கூறியுள்ளார். அருணகிரி நாதர் எத்தனை முருகன் தலங்களில் பாடி இருந்தாலும் திருச்செந்தூரில் அவர் பாடிய பாடல்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதுபோல்தான் அவரது மறுபிறவியாக கருதப்படும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் திருச்செந்தூர் முருகன் மீது பாடிய பாடல்கள் மிக மிக அருமையானவை.

    திருச்செந்தூர் முருகன் தனது அடியார்களை வரவழைத்து ஆட்கொள்பவன் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளையும் திருச்செந்தூர் முருகன் வரவழைத்து ஆட்கொண்டது வரலாற்று நூல்களில் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் 1839-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிறந்தார். பிறந்த ஒரு வாரம் வரை அவர் அழவில்லை. சிரிக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். இதனால் அவரது பெற்றோர் செந்திநாயகம்- பேச்சிமுத்து அம்மாள் கவலைப்பட்டனர்.

    அன்று இரவு செந்திநாயகம் கனவில் தோன்றிய முருகன், "உன் குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயர் வை" என்று சொன்னார். அதன்படி அந்த குழந்தைக்கு சங்கரலிங்கம் என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு அந்த குழந்தை மிக மிக சிறு வயதிலேயே கவிபாடும் அளவுக்கு புலமைமிக்கதாக மாறியது.

    9 வயதுக்குள் சங்கரலிங்கம் கல்வியில் சிறந்து விளங்கினான். ஆனால் அந்த பருவத்தில் அவனது தந்தை மரணம் அடைந்தார். இதனால் சங்கரலிங்கம் சுரண்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார். 9-ம் வகுப்புக்கு பிறகு படிக்க முடியாமல் போன அந்த சிறுவன் சீதாராம நாயுடுவிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்று பாடல்கள் இயற்றும் அளவுக்கு திறமை பெற்றார்.

    அவரிடம் இருந்த பாடல் இயற்றும் திறமையை கண்ட சீதாராம நாயுடு பாராட்டி "ஓயாமாரி" என்ற பட்டத்தை வழங்கினார். ஒரு சமயம் சுரண்டையில் பூமிகாத்தாள் அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது சிறுவனாக இருந்த சங்கரலிங்கம் ஊர் பெரியவர்களிடம் பூமிகாத்தாள் என்ற பெயர் இந்த அம்மனுக்கு எப்படி வந்தது? என்று கேட்டார். ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதன் பிறகு அந்த அம்மனின் பெயர் வந்த விதத்தை சங்கரலிங்கம் அருமையாக விளக்கி கூறினார். இதை கண்டு சீதாராம நாயுடு பிரமித்துப் போனார். அவர் முருகப்பெருமானின் மந்திரங்களை சங்கரலிங்கத்துக்கு உபசேதித்தார். தினமும் சங்கரலிங்கத்தை வேல் வழிபாடு செய்ய அறிவுறுத்தினார்.

    இதன் காரணமாக சங்கரலிங்கத்துக்கு முருகப்பெருமானை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கும் சுந்தரம்மை என்ற பெண்ணுக்கும் மயிலம் முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர்.

    அதன் பிறகு சங்கரலிங்கத்தின் கவனம் முழுக்க முருகன் மீது திரும்பியது. முருகனை புகழ்ந்து ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதினார். முருகனை பாட தொடங்கி விட்டால் அவர் வாயில் இருந்து அருவி போல வார்த்தைகள் கொட்ட தொடங்கி விடும். பெரும்பாலான பாடல்கள் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டன. பல பாடல்கள் எழுதாமல் விடுபட்டு விட்டன.

     

    இந்த நிலையில் சங்கரலிங்கம் தல யாத்திரை செல்ல தொடங்கினார். சிதம்பரம், ஸ்ரீரங்கம் ஆலயங்களில் நீண்ட நாட்கள் இருந்து பாடல்கள் பாடினார். அவையெல்லாம் இன்றும் மிகப்பெரிய பொக்கிஷமான நூல்களாக உள்ளன.

    ஒரு முறை தென்காசி அருகில் உள்ள பைம்பொழில் என்று அழைக்கப்படும் திருமலையில் அருள் பாலிக்கும் குமாரசாமி முருகனின் புகழை பாடினார். அப்போது அவருக்கு முருகன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. முருகனை பார்த்து, "அருணகிரி நாதருக்கு காட்சி கொடுத்தது போல எனக்கும் காட்சி கொடு" என்றார்.

    ஆனால் முருகப்பெருமான் காட்சி கொடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த சங்கரலிங்கம் மலையில் இருந்து விழுந்து புரண்டார். அவரது உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டது. அந்த காயங்களுக்கு வள்ளி வந்து மருந்து போட்டதாக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அதன் பிறகு சங்கரலிங்கம் முருகன் தலங்களை தேர்வு செய்து செல்லத் தொடங்கினார். முதலில் வள்ளியூர் தலத்துக்கு சென்றார். அங்கு தனது உடைகளை கலைந்து விட்டு கோவணம் மட்டும் கட்டிக் கொண்டார். உடம்பு முழுக்க திருநீறு பூசினார். இதனால் அவரை முருக தாசர் மற்றும் தண்டபாணி சுவாமிகள் என்று அனைவரும் அழைக்க தொடங்கினார்கள்.

    வண்ணசரபத்தை அதி விரைவாக பாடும் ஆற்றல் பெற்று இருந்ததால் நாளடைவில் அவருக்கு வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அந்த திருநாமத்துடன் அவர் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். அங்கு முருகனை பார்த்து வழிபட்டு மனம் உருகினார். திருச்செந்தூர் கோவிலிலேயே தங்கியிருந்து தினமும் முருகனை வழிபட்டு மனம் குளிர்ந்தார்.

    அப்போது ஒருநாள் அவரது கனவில் முருகன் தோன்றினார். தண்டபாணி என்னைப் பற்றி 16 நூல்கள் பாட வேண்டும். நீ 11-வது நூல் பாடும் போது நான் உனக்கு கந்தலோகத்து திருநீறும் சிவகண்மணியும் தருவேன்" என்று கூறினார். இதைக் கேட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து முருகனை பாடத் தொடங்கினார்.

    10 நூல்களை பாடி முடித்த அவர் 11-வதாக கந்தமாலை எனும் பெயருடைய நூலை பாடி முடித்தார். ஆனால் அவருக்கு முருகன் சொன்னபடி திருநீறு கிடைக்கவில்லை. இதனால் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு கடும் கோபம் வந்து விட்டது. தன்னால் பாடி முடிக்கப்பட்ட 11 நூல்களையும் கையில் எடுத்தார்.

    முருகா, நீ எனக்கு திருநீறு தராததால் இந்த நூல்களை உனக்கு நான் தர மாட்டேன் என்று சொல்லியபடி 11 நூல்களையும் கிழித்து எறிந்து விட்டார். கடற்கரையோரம் சென்று உலாவியபடி இருந்தார். அப்போது அவர் மனதுக்குள் முருகன் மீது பாடிய பாடல்களை கிழித்து போட்டது தவறோ? என்ற கவலை தோன்றியது.

    வேதனையோடு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கடலோரத்தில் நடந்து கொண்டே இருந்தார். அப்போது புனித நீர் விட வந்த ஒருவர் மீது முருகப்பெருமான் இறங்கி பேசினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளை பார்த்து, "தண்டபாணி மீண்டும் என்னைப் பற்றி பாடு. நான் 16 நூல்கள் இயற்ற சொன்னேன். அதில் என்னைப் பற்றி மட்டும் 12 நூல்கள் பாடு. வள்ளிக்கு ஒரு நூல் பாடு. தெய்வானைக்கு ஒரு நூல் பாடு. வீரபாகுவுக்கு 2 நூல்கள் பாடு. மொத்தம் 16 நூல்கள் வந்து விடும். அவற்றை அரங்கேற்றம் செய்" என்று கூறினார்.

    திருச்செந்தூர் முருகனின் இந்த அதிரடி உத்தரவுகளை கேட்டதும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மெய்சிலிர்த்தார். அன்றே முருகனைப் பற்றி பாட தொடங்கினார். பாடல்கள் வழக்கம் போல தண்டபாணி சுவாமிகளின் வாயில் இருந்து அருவிகளாக கொட்டின. 16 நூல்களையும் பாடி முடித்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் அரங்கேற்றம் செய்தார்.

    திருச்செந்தூர் முருகன் பற்றி அவர் பாடிய 12 நூல்களில் "திருச்செந்தூர் சிேலடை வெண்பா" என்ற நூல் மிகவும் தனித்துவம் கொண்டது. 100 வெண்பா பாடல்களை கொண்ட அந்த நூலை படிப்பவர்களுக்கு பிறவிப்பிணி நீங்கும் என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளி உள்ளார்.

    இத்தகைய சிறப்புடைய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஏராளமான முருகன் தலங்களுக்கு சென்று இருக்கிறார். அங்கு அவர் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை என்றால் அந்த பாடல்களை கோபத்தில் கிழித்து போட்டு விடுவார். அவர் முருகன் மீது ஒரு லட்சம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். ஆனால் முருகப்பெருமான் மீது கொண்ட ஊடல் காரணமாக சுமார் 50 சதவீதம் பாடல்களை கடலில் அள்ளி போட்டு விட்டார். சில பாடல்களை தீ வைத்து எரித்து விட்டார்.

    மிஞ்சியது 49 ஆயிரத்து 722 பாடல்கள் மட்டுமே.

    இப்படி முருகன் மீது உரிமையோடு சண்டை போட்ட வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது இறுதிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூருக்கு வந்தார். அங்கு கவுமார மடம் அமைத்து வாழ்ந்தார். இவரை பக்தர்கள் திருப்புகழ்க்காரர், தண்டபாணி பரதேசி, தண்டபாணி அடிகளார், திருப்புகழ் அடிகளார் என்றெல்லாம் போற்றி அழைத்தனர். இவர் தனது பாடல் தரத்தால் முருகப்பெருமானை பல தடவை நேரில் பார்த்து தரிசனம் செய்துள்ளார். 1898-ம் ஆண்டு முக்தி பெற்றார். அவர் அமைத்த திருவாமாத்தூர் மடம் இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு அவர் வழிபட்ட விநாயகரையும், முருகனின் வேலையும் இன்றும் நாம் தரிசிக்கலாம்.

    அங்கு பழனி தண்டாயுதபாணி சிலையும் இருக்கிறது. அதை வழிபட்டால் பழனிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மடத்தில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

    வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போல முருகனால் நடந்த மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
    • மாற்று புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள்காட்டினார்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி நிறுவனங்கள், இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) காரைக்கால் நிதி பங்களிப்புடன் கூடிய சர்வதேச அளவிலான கருத்தரங்கம் எதிர்கால சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த தலைப்பில் நடை பெற்றது.

    கருத்தரங்கை ஓ என் ஜி சி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ராஜசேகரன், நேதாஜி கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முனைவர் நிர்மலா ஆனந்த், இயக்குநர் விஜயசுந்தரம் , ஆலோசகர் ஜான் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சிவகுருநாதன்,ஆராய்ச்சி துறைத்தலைவர் கணேசன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் முனைவர் ரகுநாதன் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் சுமார் 63 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு 40 கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

    சக்தி அமைப்பு மற்றும் சேமிப்பு குறித்த சில முக்கிய பதிவுகளையும் எதிர் காலத்தின் சக்தி அமைப்பின் வரைகோலையும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓ எம் ஜி சின் பிரதி பொது முகாமை யாளர் ராஜசேகரன் எடுத்துரைத்தார்.

    மேலும், மாற்று புதுப்பிக்கத்தக்க எரி சக்தியின் பயன்பாட்டையும் சிறப்புற மேற்கோள் காட்டினார்.

    மேலும் கல்வி குழுமங்களின் தாளாளர் முனைவர் வெங்கட்ராஜிலு செயலர் சுந்தர்ராஜ் ஆகியோரின் உத்தரபடி விழாவின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கணேசன், அனைத்து துறை சார்ந்த துறை தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×