என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அறுபடை வீடுகளில் தரிசித்த பலன் தரும் திருச்செந்தூர்
- ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
- அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.
உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.
மாப்பிள்ளை சுவாமி
கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
12 நாள் சஷ்டி விழா
முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.
சந்தன மலை
ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.
தோஷம் போக்கும் ஞானகுரு
அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.
வெற்றிக்களிப்பில் முருகன்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.






