என் மலர்
நீங்கள் தேடியது "கந்தசஷ்டி திருவிழா"
- முருகனை திருமணம் செய்வதற்காக தெய்வானை தவம் இருக்கிறாள்.
- 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார்.
கந்தசஷ்டி திருவிழாவின் 7-ம் திருநாளான, சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. அசுரனை எதிர்த்து வெற்றி பெற்றதற்காக இந்திரன், தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து தந்ததோடு தேவமயிலாகவும் மாறி சேவை செய்தார். இவர்களது திருமணம் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
சூரனை ஆட்கொண்ட தலம் என்பதால் திருச்செந்தூரிலும் கந்தசஷ்டிக்கு மறுநாள் முருகன்-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவில் திருக்கல்யாணம் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அன்று காலையில் தெய்வானை தவம் செய்வதற்கு தபசு மண்டபத்திற்கு செல்கிறாள். முருகனை திருமணம் செய்வதற்காக தவம் இருக்கிறாள். மாலையில் குமரவிடங்கர், சண்முகப்பெருமானின் பிரதிநிதியாக தபசு மண்டபத்திற்கு மயில் வாகனத்தில் சென்று தெய்வானைக்கு அருள்பாலித்து, மாலை சூட்டி நிச்சயதார்த்தம் செய்கிறார். நள்ளிரவில் இருவரும் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருள அங்கு திருமணம் நடக்கிறது.
மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதி உலா செல்கிறார். அடுத்த 3 நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருகிறார். 12-ம் நாளன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது. அப்போது சுவாமி, அம்பாள் வீதி உலா செல்லும் போது, பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி சுவாமியை குளிர்ச்சிபடுத்துகின்றனர்.
- ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன.
- அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்லும் தலமாக இருப்பது பழனியும், திருச்செந்தூர் திருத்தலமும் தான். பழனி தலத்திற்கு சென்று வழிபட்டால் தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால் திருச்செந்தூர் சென்று வழிபட்டால், முருகனின் ஆறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு மும்மூர்த்திகளின் வடிவமாக முருகப் பெருமான் காட்சி தருகிறார். அதிசயங்கள் பல நடக்கும் முருகன் கோவிலாக சித்தர்கள் பலராலும் பாராட்டப்பட்ட கோவில் என்றால் அது பழனியும், திருச்செந்தூரும் தான்.
உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது உண்டு. இருந்தாலும் கந்தசஷ்டி விழா, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவிற்கு வரும் தலம் திருச்செந்தூர் தலம் தான். இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் நடக்கும் உற்சவங்கள், அவற்றின் சிறப்புகள் பற்றி பலரும் அறியாத விஷயங்களை உள்ளது.
மாப்பிள்ளை சுவாமி
கோவில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்சவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் முருகன் கோவிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதே போல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த நான்கு உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும்.
12 நாள் சஷ்டி விழா
முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா 6 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்துடன் சஷ்டி திருவிழா நிறைவடையும். சில தலங்களில் மட்டும் 7 நாள் நடக்கும். இங்கு சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவடையும். ஆனால் திருச்செந்துாரில் மட்டும் மொத்தம் 12 நாட்கள் சஷ்டி விழா நடைபெறும். முதல் ஆறு நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும். ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.
சந்தன மலை
ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக் கோவிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோவிலே. கடற்கரையில் இருக்கும் சந்தனமலையில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, கந்தமாதன பர்வதம் என்பர். தற்போதும் இக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக இருப்பதைக் காணலாம். அதே போல் ஆறுபடை வீடுகளில் முருகன் சன்னதி தரை மட்டத்திற்கு கீழ் இருப்பதும், முருகப் பெருமான் கடலை பார்த்தவாறு அமர்ந்திருப்பதும், சிவ பூஜை செய்த நிலையில் கையில் பூ உடன் இருப்பதும் திருச்செந்தூரில் மட்டுமே.
தோஷம் போக்கும் ஞானகுரு
அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான், முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் குரு தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞான குருநாதராக முருகன் அருள்புரிகிறார்.
வெற்றிக்களிப்பில் முருகன்
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக் களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.
- முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர்.
- சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது.
பாலன் தேவராயன் என்ற கவிஞரால் எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் முருகனைப் பற்றிய தோத்திரங்களில் பெரும்புகழ் பெற்றது. பல கோடி முருக பக்தர்கள் இந்தத் தோத்திரத்தை நாள்தோறும் ஓதிப் பலன் பெற்று வருகிறார்கள். அளவற்ற சக்தியுடைய மந்திரச் சொற்கள் இந்நூலில் கலந்துள்ளன.
நாராயணீயம், சுந்தர காண்டம் போன்ற சில நூல்களை மட்டும் அதிகம்பேர் பாராயணம் செய்வதன் காரணம் என்ன? விஷ்ணு சகஸ்ரநாமம், ஆதித்ய ஹ்ருதயம், கோளறு திருப்பதிகம் போன்றவை மட்டும் பலராலும் ஓதப்படுவதன் பின்னணி என்ன?
பாலன் தேவராயனே பல கவசங்களை அருளியிருந்தாலும் அவர் அருளிய கந்த சஷ்டி கவசம் மட்டும் ஏன் இத்தனை புகழோடு திகழ்கிறது?
காரணம், இவற்றை எண்ணற்ற அடியவர்கள் நம்பிக்கையோடு ஓதி ஓதி, அவற்றின் சக்திக்கு அதிக வலிமை சேர்த்திருக்கிறார்கள். இன்று அந்த நூல்கள் இறையருளை எளிதில் வாரி வழங்கும் தன்மை பெற்றிருக்கியர் இயற்றியதாகச் சொல்லப்படுகிறது. அவர் நூல்களில் புகழ்பெற்றது கந்த சஷ்டி கவசமே.
முருகன் நடந்துவரும்போது ஏற்படும் கால்கொலுசின் ஒலியை உற்றுக் கேட்கிறார் தேவராயர். அந்த ஒலியை அப்படியே தம் நூலில் ஒலிக்குறிப்புச் சொற்களாக வைக்கிறார்.
`செககண செககண செககண செகென
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
இந்தச் சொற்களெல்லாம் அளவற்ற மந்திர சக்தி நிறைந்தவை. பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலத்தையும் உள்ள நலத்தையும் ஒருங்கே தரக்கூடியவை.
சஷ்டி கவசத்தை நாள்தோறும் சொல்லிச் சொல்லி உருவேற்றும் போது மனம் அளவற்ற சாந்தி அடைகிறது. எண்ணிய எண்ணியாங்கு எய்த இந்தக் கவசம் துணை நிற்கிறது.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் வேண்டுமானால் மனத்தை மாசு தாக்காதவாறு அதற்கு ஒரு கவசம் பூட்ட வேண்டியது அவசியமல்லவா? அத்தகைய மனக் கவசமாக நிற்கும் வல்லமை படைத்தது சஷ்டி கவசமே.
*முருகன் பழந்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் கடவுள். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம், இன்னின்ன நிலங்களுக்கு இன்னின்ன கடவுளர் உண்டு என வகைப்படுத்திப் பேசுகிறது.
`மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே!'
என்பது தொல்காப்பிய நூற்பா.
திருமாலுக்குக் காடு சார்ந்த உலகமும் முருகனுக்கு மலை சார்ந்த உலகமும் இந்திரனுக்குக் கடல் சார்ந்த உலகமும் வருணனுக்கு மணல் சார்ந்த உலகமும் உண்டு என்கிறது தொல்காப்பியம்.
மலையும் மலைசார்ந்த நிலமுமான குறிஞ்சி நிலத்தின் தனிப் பெருங் கடவுள் முருகன்தான். அவன் குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருப்பவன்.
*எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகைக்குக் கடவுள் வாழ்த்து எழுதிய பாரதம் பாடிய பெருந்தேவனார், முருகனைத்தான் போற்றுகிறார்.
`தாமரை புரையும் காமர் சேவடி
பவழத்தன்ன மேனித் திகழொளி
குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏம வைகல் எய்தின்றால் உலகே!`
தாமரை மலர் போன்ற திருவடியையும் பவழம் போன்ற மேனியையும் குன்றிமணியைப் போல் சிவந்த ஆடையையும் குன்றைப் பிளக்கும்படி எறிந்த வேலையும் சேவல் கொடியையும் உடைய முருகன் காப்பதால் இந்த உலகம் துன்பமின்றி இருக்கின்றது என்பது இந்தப் பாடலின் பொருள்.
*பத்துப் பாட்டு நூல்களில் ஒன்று நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப் படை. முற்றிலும் முருகனைப் போற்றியே எழுதப்பட்ட நூல் அது. முந்நூற்றுப் பதினேழு அடிகளில் ஆன நூல். ஆசிரியப்பா என்ற பாவகையில் எழுதப்பட்டது.
முருகனைக் கண்டு திருவருள் பெற்ற ஒரு பக்தர், அவ்விதம் அருள் பெறாதவர்களை முருகனைச் சரணடைந்து அருள் பெறுமாறு ஆற்றுப் படுத்துவதே இந்த நூலின் போக்கு.
*சங்க கால நூல் போலவே, இடைக்கால நூல் ஒன்றும் முருகன் புகழ் பாடுகின்றது. `திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்` என்ற அந்நூலை இயற்றியவர் பகழிக் கூத்தர்.

திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சிபுரத்தில் இருக்கும் குமரக் கோட்டத்தில் அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார், கந்தபுராணம் முழுவதையும் தமிழில் செய்யுள் நூலாகப் படைத்துள்ளார்.
அண்மைக் காலத்தில் ஆண்டவன் பிச்சி சென்னை காளிகாம்பாள் கோயில் முருகன் சன்னிதியில் அருளிய பாடல் `உள்ளம் உருகுதையா முருகா உன்னடி காண்கையிலே` என்ற பாடல். டிஎம் செளந்தரராஜன் பாடிப் பெரும்புகழ் பெற்ற பாடல் இது.
கண்ணதாசன், வாலி, உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் போன்ற அண்மைக்காலக் கவிஞர்கள் பலரும் முருகனைப் பற்றிய தோத்திரப் பாடல்களைப் பாடியுள்ளனர்.
கந்த சஷ்டியன்று முருகன் தோத்திரங்களை ஓதியும் முருகன் பாடல்களைப் பாடியும் கேட்டும் முருகனை வழிபட்டு அவன் அருளைப் பெறுவோம்.
- வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
- முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை. இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல், ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்.
கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினை புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவுப்படுத்துகின்றது. வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறை பொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று ெபாருதவீரன், துங்கவடிவேலன், பிரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெற்று பரலாயிற்று, ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.
வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக் கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடு என குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் ெபாருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன.
- திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள்.
- ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள்.
திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்ற போதிலும் கந்த சஷ்டி விழா அனைத்துக்கும் சிகரமாக போற்றப்படுகிறது. கந்தன் தனது பிறப்பின் நோக்கமான சூரனை வென்று அவனை ஆட்கொண்ட இடம் இத்தலம் ஆகும். சூரனுக்கும் முருகனுக்கும் யுத்தம் நடந்ததை மெய்ப்பிக்கும் வகையில் கோவில் அருகில் நீண்ட கடற்கரை பகுதி அமைந்துள்ளது.
மலைகளில் கோவில் கொள்ளும் விளக்கம் கொண்ட முருகன் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் சந்தன மலைமீது எழுந்தருளி உள்ளார். மூலவர் இருக்கும் பகுதி குடைவரை கோவிலாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதியை மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெருமாள் சன்னதியில் காணலாம். கந்தசஷ்டி கடைபிடிக்கப்படும் ஆறு நாட்களும் பக்தர்கள் பல்வேறு விதமான விரதங்களை மேற்கொள்வார்கள்.
சிலர் மவுன விரதம் இருப்பார்கள். சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்பார்கள். சிலர் பழங்கள் மற்றும் பழச்சாறு குடித்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆறு நாட்களும் கோவிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பாலசுப்பிரமணிய சுவாமி முன்பு சிறப்பு ஹோமங்கள் நடைபெறும். பின்னர் சாமி சண்முக மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.
கந்தசஷ்டி கவசம் கந்தகுரு கவசம் கோவில் வளாகத்தில் ஒலிக்கும். கந்தசஷ்டி விழா கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமையும். ஆண்டுதோறும் இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளமாக உள்ளனர். சஷ்டி விரதம் இருப்பதற்காக வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகள் என உலகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருச்செந்தூர் முருக பக்தர்கள் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு பானகம் உள்ளிட்ட பானங்களை வழங்கி மகிழ்வார்கள். சிலர் கந்த சஷ்டி கவசம் உள்ளிட்ட முருகன் பாராயண நூல்களை அச்சிட்டு பக்தர்களுக்கு வழங்குவார்கள். 24 மணி நேரமும் பக்தர்கள் முருகனின் நாமத்தை உரைத்தபடி இருப்பார்கள். செந்தூர் கடல்அலையும் ஓம் ஓம் என்று மந்திரம் இசைத்துக் கொண்டே இருக்கும். கடலில் குளித்து வந்தால் கவலைகள் எல்லாம் கரைந்து மறைந்து விடும்.
ஒருமுறை திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் தரிசனம் செய்ய தவறமாட்டார்கள். அந்த அளவுக்கு முருகன் அவர்களை ஆட் கொண்டு விடுவார். மதுரையில் சிவபெருமான் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். அதே போல திருச்செந்தூரில் முருகனின் திருவிளையாடல் பல நிகழ்ந்துள்ளன.
திருச்செந்தூர் செந்திலாண்டவன் கோவில் ஒரு அற்புதமான நிலையில் அமைந்து உள்ளது. கடலை எல்லையாகக் கொண்ட இக்கோவிலை மக்களின் பாதுகாப்பு அரண் என்றே கூறலாம்.
- திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
- கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.
திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.
வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் 18 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்து வருகிறது.
இதுதவிர யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை அடுத்தடுத்து நடந்து வருகிறது.

திருச்செந்தூரில் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சில பக்தர்கள் சிவன், பார்வதி, கிருஷ்ணர், விநாயகர், முருகர், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.
சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.
மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.
- கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள்.
- பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
முருகப் பெருமான் அருளைப் பெறுவதற்கு வைகாசி விசாகம், தைப்பூசம், மாத சஷ்டி, கிருத்திகை என எத்தனையோ விரதங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் மணி மகுடம் போல இருப்பது மகா கந்த சஷ்டி விரதம். ஆம்! தீயவை அழியும் நல்லது நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணமாக சூரபதுமன் அழிந்து தேவர்கள் வாழ்வு பெற்ற அந்த நிகழ்வினை நாம் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம்.
தற்போது நாமும் சூரபதுமன் போன்ற கொடிய, தீய குணங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அதனைப் போக்குவதற்கு ஒரே வழி கந்தக் கடவுளிடம் சரணடைவதே. அதிலும் இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது நமது அகப் பகை மற்றும் புறப் பகைகளை அடியோடி நீக்கி நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
மகா கந்த சஷ்டி எல்லா முருகப் பெருமானின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான காரணம் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன் இங்கு படை வீடு அமைத்து தங்கினார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரும் பஞ்ச லிங்கங்கள் அமைத்து தனது தந்தையான சிவபெருமானை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபட்டார். எனவே திருச்செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
உலகெங்கும் இருந்து பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி, பின் முருகன் வேலினால் உண்டாக்கிய நாழிக்கிணற்றிலும் நீராடி, பச்சை நிற ஆடை உடுத்தி, 6 முதல் 7 நாட்கள் தங்கி விரதம் இருந்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பச் செல்கிறார்கள்.

தேச மங்கையர்க்கரசி
முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அடுத்த நாளில் தன்னிடம் இருந்து பிரிந்திருந்த இச்சா மற்றும் கிரியா சக்தியான வள்ளி, தெய்வானையை மணம் புரியும் நாளாகிய 7-ஆம் நாளில் அதாவது வள்ளி தேவசேனா திருக்கல்யாண தினத்தில் விரதம் நிறைவு செய்வது மிகவும் சிறப்பானது என்று எனது குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் விதமாக முருகப் பெருமான் காட்சி தரும் நேரத்தில் நாம் எதற்காக விரதம் இருந்தோமோ அது 100% நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மகா கந்த சஷ்டி விரதமானது கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதியிட்டு சொல்லும் அளவுக்கு நற்பலன்களை அள்ளித்தரும் விரதம். முருகன் என்றாலே இளமை. இளமை என்றால் அழகு. புற அழகல்ல அக அழகு. மனதில் கவலை இல்லாமல் இருக்கும்போதுதான் அகமும், புறமும் அழகாக இருக்கும்.
கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள். வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வறுமை, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் அல்லல் உற்று மனக்கவலைகளுடன் வாழ்கின்றனர். அந்த மனக் கவலைகளை தீர்க்கும் மாமருந்தே முருகன்தான். முருகனிடம் நம் கவலைகளை எல்லாம் சொல்லி சரணாகதி அடைந்து இந்த கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.
குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரின் இல்லம் தேடி வந்து தங்கி இருந்து தன் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வைக் கண்டு திரும்புவது பிள்ளைகளின் வழக்கம். நமக்கு முருகனே தாயும், தந்தையும்; நாம் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்; அவன் உறையும் இடமே நாம் கதி என செல்லும் வீடு. இந்த சஷ்டி காலத்தில் செந்திலம்பதி என்ற வீட்டில் வந்து தங்கியிருந்து தனது துன்பங்களை எல்லாம் அவனிடம் சொல்லி அதைத் தீர்க்க வழியும் கண்டறிந்து திரும்பும் பிள்ளைகளாகவே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். முருகனின் பதம் பணியாமல் வாழ்பவர்களை அருணகிரிப் பெருமான் கடுமையாகவே சாடுகிறார்.
'கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே?'
முருக வழிபாடு என்பது அருணகிரிநாதரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண வழிபாடு மட்டுமல்ல. முருகனே எல்லாம் என்ற சரணாகதி நிலை வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். அந்த பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
தங்கத்தை ஆபரணம் ஆகும் வரை அடித்து துன்புருத்தினால்தான் அது விலை மதிப்பு பெறும். அடிக்கு பயந்து அது மண்ணிலேயே இருந்து விட்டால் அதன் மதிப்பு இழந்து போகும். முருகனை வழிபட்டால் சோதிக்கின்றானே என்று சொல்பவர்களுக்குத்தான் இந்த வரிகள். சோதனைக்கு உட்பட்டால்தான் மாணவன் மருத்துவன் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், பொறியாளர் ஆகலாம். சோதனையைத் தவிர்க்க நினைப்பவன் அறிவற்ற வனாகவே இருப்பான்.
வருவது வரட்டும், வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை என்று சொல்லி கந்தன் கழலடியே கதி என்று நம்பி வருவோரை அவன் வாரி அனைத்து அருளை மாரி எனத் தருவதில் செந்தில் ஆண்டவர் வல்லவர். தேவர் சிறை மீட்ட வேலன் நம்மையும் காத்து அருளும் பாலன். இந்த சஷ்டி காலத்தில் அவரை வழிபட்டு எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழலாம்.
- விழாவில் 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது
- விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை,பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனையும் பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள்கிழமை) பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளு கிறார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.

கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ள காட்சி.
சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையில் சுவாமி ஜெயந்தி நாதர் சூரபத்மனை வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் நடைபெறுவதற்கு நீண்ட தூரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நான்கு கட்டங்களாக முதலில் யானை முகம், இரண்டாவது சிங்கமும், மூன்றாவது தன்முகம்(சூரன்), இறுதியில் சேவலாக மாறும் சூரனை வதம் செய்யும் வகையில் தனித்தனி கட்டங்களாக சுவாமி ஜெயந்தி நாதர் சூரனை சுற்றி வந்து வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்புகளுக்கு வெளியே இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை,பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வருகிற 27-ந்தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும், வருகிற 26-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
- விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாளான நேற்று இரவு சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரிவீதியுலா வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்
3-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை தொடங்கியது. 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச்சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேளதாளம் முழங்க சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனைக்குப் பின் சுவாமி, அம்பாளுடன் தங்க தேரில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவிலை சேர்கிறார்.
6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 28-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு 11மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- பக்தர்கள் பலர் குழுக்களாக அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
- பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற உள்ளது.
திருச்செந்தூர்:
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.
இதை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விரதத்தை தொடங்கினர். சில பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் பலர் குழுக்களாக அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. காலை 5.30 மணிக்கு துலாம் லக்னத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் எழுந்தருளினார். அங்கு காலை 7 மணிக்கு யாக பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.
பகல் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனை நடைபெற உள்ளது. தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு ஆகிய பாடல்களுடன் மேளதாளத்துடன் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
மாலை 3.30 மணிக்கு மூலவருக்கு நடைபெறும் சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்காரமாகி தீபாராதனை பின் சுவாமி, அம்பாளுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோவில் சேர்தல் நடக்கிறது

6-ம் திருவிழாவான 27-ந் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனைக்குப் பிறகு சுவாமி, அம்பாள் கிரிப்பிரகாரம் வழியாக கோவில் சேர்கிறார்கள். அங்கு இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை சுவாமி குமரவிடங்க பெருமான் மாலை மாற்று வைபவத்திற்கு புறப்படுகிறார். பின்னர் மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 11 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் கோவில் கலையரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ராமு, மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.
- காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அமுத லிங்கேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவராக அமுதலிங்கேஸ்வரர் மற்றும் அம்பாளாக அமுதவல்லி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.
வருடா வருடம் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழா தொடங்கி நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்று கோவிலில் மகா ருத்ரயாகம் உலக நன்மைக்காக நடைபெற்றது.இந்த யாகத்தை சிவாச்சா ரியார்கள் நடத்தினர். இதையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைபொது அபிவிருத்தி டிரஸ்ட் தலைவர் காமராஜ், செய லாளர் முத்துசாமி, டிரஸ்டி ராஜரத்தினம், துணைத் தலைவர் முத்துக்குமார். உறவின்முறை சிறப்பு ஆலோசகர் ரவீந்திரன், எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் மணிமுருகன், எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜெயவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
மேலும் இந்த மகா ருத்ரயாகத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு யாகத்தில் வைக்கப்பட்ட ருத்திராட்சம் வழங்கப்பட்டது. இங்கு கந்த சஷ்டி விழாவின் போது குழந்தை இல்லாத தம்பதியினர் விரதம் இருந்து கோவிலில் இருக்கும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானையை வணங்கி வந்தால் குழந்தை பேரு உண்டாகும் என்பது ஐதீகம்.
காலம் காலமாக மக்கள் கந்த சஷ்டி விழாவின் போது விரதமிருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.






