என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்
    • கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

    திருச்செந்தூர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கினர்.

    வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் 18 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்து வருகிறது.

    இதுதவிர யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், மாலையில் ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியவை அடுத்தடுத்து நடந்து வருகிறது.

    திருச்செந்தூரில் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு சாமி வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி நேற்று சில பக்தர்கள் சிவன், பார்வதி, கிருஷ்ணர், விநாயகர், முருகர், நாரதர் உள்ளிட்ட சாமி வேடங்கள் அணிந்து கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள் கூட்டத்தை காணலாம்.

    சூரசம்ஹாரத்தை காண்பதற்காக உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    7-ம் திருநாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது.

    மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு, சுவாமி காட்சி கொடுக்கிறார். அதன்பிறகு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    Next Story
    ×