search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi Visakham"

    • வடமொழியில் சுவாமிநாதனை “ஞானஸ்கந்தன்” என்று போற்றுகின்றனர்.
    • கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    தந்தைக்கே குருவான கதை:

    படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மா, ஒருமுறை முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மாவிடம், படைப்புத் தொழில் செய்யும் உமக்கு -ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இந்த கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான்.

    ஈசனே நேரில் வந்து கேட்டுக்கொண்டதால், பிரம்மாவை அவர் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், "பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். "ஓ நன்றாகத் தெரியுமே" என்றார் முருகன். "அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். "உரிய முறையில் கேட்டால் சொல்வேன்!" என்றார் முருகன்.

    அதன்படி சிவபெருமான் இந்த சுவாமிமலை தலத்தில் சிஷ்யன் நிலையில் அமர்ந்து, முருகப்பெருமானிடம் பிரணவ உபதேசம் கேட்டார். இவ்வாறு இறைவனான சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனதால், அவரை சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன்சாமி என்றும் போற்றுகிறோம். அதனாலேயே இந்த தலமும் சுவாமிமலை என்று பெயர் பெற்றுவிட்டது.

    முருகப்பெருமான் காட்சி:

    இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.

    மகாமண்டபத்தில் மயிலுக்குப் பதிலாக முருகனுக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி நின்று திருவருள் பாலிக்கும் சுவாமிநாதனுக்கு, தங்கக் கவசம், வைரவேல், தங்க சகஸ்ர நாம மாலை, ரத்தின கிரீடம் போன்ற பல்வேறு அணிகலன்களும் பூட்டி பக்தர்கள் அழகு பார்க்கின்றனர். சுவாமிநாதன் தங்கத் தேரிலும் அவ்வப்போது பவனி வருவது வழக்கம்.

    தலவிருட்சம் நெல்லி:

    நெல்லி மரம் சுவாமிமலையின் தல விருட்சமாகும். நெல்லி மரத்தை வடமொழியில் "தாத்ரி" என்பர். அதனால் சுவாமிமலையை "தாத்ரிகிரி" என்றும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிவகிரி, குருவெற்பு, குருமலை, சுவாமி சைலம் போன்ற பெயர்களும் உண்டு. வடமொழியில் சுவாமிநாதனை "ஞானஸ்கந்தன்" என்று போற்றுகின்றனர்.

    அருணகிரிநாதர் 38 திருப்புகழ்ப் பாடல்களை இந்த சுவாமிநாதனுக்கு பாமாலையாக சூட்டியுள்ளார். சுவாமிமலையைச் சேர்ந்த கடுக்கண் தியாகராஜ தேசிகர் என்பவர் சுவாமிமலை நவரத்தின மாலை என்ற நூலை இயற்றியுள்ளார். "ஒருதரம் சரவணபவா..." என்று தொடங்கும் நவரத்தின மாலையின் மூன்றாவது பாடல் மிகவும் பிரபலமானது. அவ்வாறே, சங்கீத மூர்த்தி ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய, "சுவாமிநாத பரிபாலயாதுமாம்" என்ற நாட்டை ராகக் கிருதியும் மிகவும் பிரபலமானது.

    இயற்கையான மலை அல்ல:

    சுவாமிமலை இயற்கையான மலை அல்ல. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோவில்தான் இது. இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதலாம் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.

    தெற்கு நோக்கிய ராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே கோவிலுக்குள் நுழைகின்றனர். அவ்வாறு நுழைந்தவுடன் வல்லப கணபதியை தரிசிக்க முடிகிறது.

    மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர், சோமாஸ்கந்தர், விசுவநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. சுவாமிநாதனை தரிசிக்க நாம் 60 படிகள் மேலே ஏறிச் செல்ல வேண்டும். 60 தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் இந்த 60 படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.

    மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் "கண் கொடுத்த கணபதி" என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இன்றும், இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை கிடைக்கிறது என்பது பலர் அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை.

    திருவிழாக்கள் விவரம்:

    இங்கு முக்கிய திருவிழாவாக திருக்கார்த்திகை திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. பிற விழாக்கள் : சித்திரையில் 10 நாள் பிரம்மோற்சவம், வைகாசி விசாகப் பெருவிழா, ஆவணி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம், புரட்டாசி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பெருவிழா, ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழா, மார்கழியில் திருவாதிரைத் திருநாள், தை மாதத்தில் தைப்பூசப் பெருவிழா, பங்குனியில் வள்ளி திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது வைகாசி விசாக திருவிழா. ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, கடந்த 24-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் உற்சவர் சன்னதி யில் இருந்து சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் புஷ்பஅங்கி அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டபத்தை 3 முறை சுற்றி வந்து அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு தீபாராதனை காட்டினர்.

    இதேபோல வருகிற 1-ந் தேதி வரை இந்த வைபவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 2-ந் தேதி(வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகம் நடக்கிறது.இதையொட்டி அன்று அதிகாலை 4.30 மணியள வில் சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு தங்க குடத்தில் சிறப்பு பாலா பிஷேகம் நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் கோவில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வரும் பால்குடங்கள் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவில் மதுரை மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் பால் காவடி, பன்னீர் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்து வருவார்கள். மேலும் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பாலால் சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே மின்விசிறிகளும் ஏர்கூலரும் வைக்கப் பட்டுள்ளன. ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்-மோர் வழங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 3-ந்தேதி மொட்டையரசு திருவிழா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • சொர்ண காளீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தெப்ப உற்சவம் 2-ந்தேதி நடக்கிறது.
    • ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர் மருதுபாண்டி யர்களால் கட்டப்பட்ட சொர்ண காளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாக திருவிழா கடந்த 24 நாட்கள் தொடங்கி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

    நேற்று சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சொர்ண காளீஸ்வரருக்கும், அம்ம னுக்கும் நடந்த திருமணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 1-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் (2-ந்தேதி) வைகாசி விசாகத்தை முன்னி ட்டு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி வீதி உலா நடை பெறும்.

    விழாவை முன்னிட்டு தினசரி கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழா ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ காளையார் கோவில் சரக கண்காணிப் பாளர் பாலசரவணன், ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வரு கிறார்கள்.

    • மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • வைகாசி விசாகத்தை யொட்டி பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழா காலங்களில் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.

    இன்று வாரவிடுமுறை என்பதாலும் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக மலைக்கோவிலில் தரிசன வழிகள், வெளி ப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின்இழுவை ரெயில்நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அங்கும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அலாதிய கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகாசி விசாகத்தை யொட்டி இனிவரும் காலங்களில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும்.
    • பழனியில் இருந்து சிறப்பு ரெயில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்களில் வரும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் பழனி முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயிலை இயக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரெயில் வருகிற 12-ந் தேதி மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.25 மணிக்கு பழனி ரெயில் நிலையம் சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து ஒரு சிறப்பு ரெயில் மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடையும்.

    இந்த ரெயில், இருமார்க்கங்களிலும் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இந்த ரெயிலில், 10 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 பார்சல் வேனுடன் இணைந்த இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

    ×