என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழனி முருகன் கோவில்"

    • இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
    • டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திரு விழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும்.

    டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

    அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதன்பின் சரியாக மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொழுத்தப்படும். இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    • கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
    • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளி நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர்.

    அதன்படி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் தனது குடும்பத்தினருடன் இன்று காலை பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

    அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் இன்று காலை நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.

    பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அவரை பார்த்து இன்ப அதிர்ச்சியடைந்த பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொண்டனர். திண்டுக்கல் அருகில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வி.வி.எஸ்.லட்சுமணுக்கு டாக்டர் பட்டம் வழங்க உள்ளனர்.

    அதற்காக வந்த அவர் பழனியில் சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தனர்.

    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
    • நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகன் பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தமிழகத்தில் அதிக அளவு பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக உள்ளது. மேலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பக்தர்களால் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆன்மிக பெரியவர்கள் பலரும் பழனி கோவிலுக்கு பல்வேறு சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.

    இவற்றில் ஏராளமான விவசாய நிலங்கள் மற்றும் இடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கி இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் பழனி பூங்கா ரோடு பகுதியில் கோவிலுடன் இணைந்த தண்டபாணி சுவாமி மடத்திற்கு பாத்தியப்பட்ட சுமார் 1.40 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. தற்போது அந்த நிலத்திற்கு பழனி கோவில் ஆணையரை தக்காராக நியமனம்செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் தண்டபாணி மடத்தின் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மடத்தை மீட்டனர்.

    தொடர்ந்து நிலத்தில் இருந்த புதர் செடிகள் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த இடத்தில் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருந்த ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டது பக்கதர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
    • பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.

    படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
    • ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

    பழனி:

    அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல மின் இழுவை ரெயில் மற்றும் ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. ரோப் கார் பராமரிப்பு பணிக்காக தினமும் 1 மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும், வருடத்துக்கு ஒரு மாதமும் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்திற்கான பராமரிப்பு பணிகள் கடந்த மாதம் 15ம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த பிறகு ரோப் கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து பொறியாளர்களுக்கு திருப்தி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக ரோப்கார் இயக்கப்பட்டது.

    இன்று ரோப்கார் நிலையத்தில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி, இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் இயக்கப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்பு ரோப்கார் சேவை மீண்டும் தொடங்கியதால் பக்தர்கள் அதில் ஆர்வத்துடன் பயணித்து சென்றனர்.

    • பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன.
    • 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன.

    மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் எளிதில் சென்று வர வசதியாக ரோப்கார், மின் இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்ல முடியும் என்பதாலும், சுற்றுலா அனுபவமாக இருப்பதாலும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பலரும் ரோப் காரில் செல்லவே விரும்புகின்றனர்.

    பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கியது. ரோப் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்று வந்தன.

    இந்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியதால் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்று பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்கார் இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு வல்லுனர் குழு ஆய்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை நாளை முதல் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர்.
    • தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது.

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    குறிப்பாக சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம்.

    அதன்படி இன்று ஆடிக்கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல இயக்கப்படும் ரோப் கார் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் இழுவை ரெயில் நிலையத்தில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது.

    மேலும் படிப்பாதைகளில் ஏராளமான பக்தர்கள் நடந்து சென்றனர். மலைக்கோவிலில் சுவாமி தரிசனத்துக்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தனர். பல்வேறு காவடிகளை எடுத்து வந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர் விடுமுறை காரணமாகவும் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இதனால் மலைக்கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தி கொடுத்ததுடன் ஆங்காங்கு பிரசாதங்கள், நீர்மோர் ஆகியவை வழங்கப்பட்டது. 

    • இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
    • விக்னேஷ் சிவன்- நயன்தாரா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி அலங்காரப் பொருட்கள், நாப்கின் விற்பனை உள்பட பல்வேறு தொழில்களை முன்னெடுத்து வருகின்றனர்.

    இதனிடையே, நயன்தாரா சமீபத்தில் 'டெஸ்ட்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

    மேலும், இயக்குனர் விக்னேஷ் பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படி நடிப்பு, இயக்கம் என பிசியாக இருக்கும் இந்த நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் தொடர்பான வீடியோவையும் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

     

    • கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
    • விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் வைகாசி விசாக திருவிழாவும் ஒன்றாகும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. கொடி கட்டி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடி மண்டபத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரதவீதிகளில் தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் 6ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 8ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வெள்ளி தேரில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றம் நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்குமேல் வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறும். 4 ரதவீதிகளில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    வருகிற 12ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சி நடைபெறும். அன்று இரவு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 16 வகை தீபாராதனை நடந்தது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 5-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலையில் வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் 6-ம் நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.


    முன்னதாக காலை 9 மணிக்கு சன்னதி வீதி, கிரிவீதிகளில் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு அடிவாரம் சவுமிய நாராயண கவர நாயக்கர் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்ணியாக வாஜனம், கலசபூஜை, மாங்கல்ய பூஜை, கந்த யாகம், பூர்ணாகுதி நடைபெற்றது. அதையடுத்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மாலை 6 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா', 'தண்டாயுதபாணிக்கு அரோகரா' என்று விண்ணே அதிரும் வகையில் கோஷமிட்டனர். தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி, 16 வகை தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் தேவாரம் பாடினர்.

    பங்குனி உத்திர திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பழனி கிரிவல பாதையில் நடைபெறுகிறது. தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் எழுந்து அருள்பாலிக்க உள்ளார். தேரோட்டத்தையொட்டி காவடி எடுத்து பக்தர்கள் பழனி நோக்கி படையெடுத்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலியாக பழனியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு ரத்து
    • தேரோட்டம் நாளை மறு நாள் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 6-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவிழாவின் சிறப்பு அம்சமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நாளை (10-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருஆவினன்குடியில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு மணக்கோலத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி உத்திர தேரோட்டம் நாளை மறு நாள் 11-ந் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    பக்தர்கள் தங்கள் கைகளால் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 10-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தீர்த்த காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டும் சிறப்பு கவுண்டரில் அனுமதிக்கப்படுகிறது.

    நாளை முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் வருகிற 13-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் வசதிக்காக நெரிசலை தவிர்க்க குடமுழுக்கு நினைவரங்கு வழியாக யானைப்பாதையை இணைத்து ஒரு வழிப்பாதையாகவும், மலைக்கோவிலில் இருந்து இறங்குவதற்கு வசதியாக படிப்பாதை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் வசதிக்காக கிரி வீதி, குடமுழுக்கு நினைவரங்கு, யானைப்பாதை, இடும்பன் கோவில், படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் போதுமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே நவீன வசதிகளுடன் கூடிய கட்டணமில்லா கழிப்பறையும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது. இடும்பன்குளம், சண்முகாநதியில் பக்தர்கள் நீராடும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடமாடும் மருத்துவக்குழு வசதி செய்யப்பட்டுள்ளது.

    கிரி வீதியில் 28 பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பழனி நோக்கி தீர்த்த காவடியுடன் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.


    குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ×