search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family deity worship"

    • குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.
    • திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் கல்யாண வைபோகம் தான்.

    பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. வருகிற 5-ந்தேதி பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.

    இன்னொரு சிறப்பு... தமிழில், 12-வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.

    ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்.

    முருகப்பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.

    இந்த நாளில் விரதம் மேற் கொண்ட சந்திரன், அழகு மிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்.

    இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.

    ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். அர்ஜுனன் அவதரித்ததும் இந்த நாளில்தான்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.

    தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.

    சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

    காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

    காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும்.

    இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம்.

    இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறுநாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங்குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.

    சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை.

    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெருமாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர். இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.

    பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால் திருமணப்பேறு உண்டாகும். பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோலத்தில் தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான். அதுபோல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.

    பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.

    பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி, எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.

    • மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
    • சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து.

    பசும்பொன்:

    ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் மாசி, பங்குனி மாதங்களில் குலதெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வாறு நடைபெறும் விழாக்க ளில் நேர்த்திக்கடனாக ஆட்டுக்கிடாய்களை சுவா மிக்கு பலியிட்டு, பின்னர் அதன் கறியை கமகமக்கும் வகையில் சமையல் செய்து பக்தர்களுக்கு விருந்தாக படைப்பது காலம் காலமாய் நடைபெற்று வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம் மன் மற்றும் கருப்பண்ண சாமி, வன்னி குலசாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவாமிகள் மற்றும் தேவதைகளுக்கு 17-ம் ஆண்டு மாசி களரி திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.

     இதில் சுவாமிகளுக்கு நேர்த்திக்கடனாக 51 ஆட்டு கிடாய்களைப் பலியிட்டு, 1,008 கிலோ வெள்ளாட்டுக்கறியை அதிகாலையில் சமையல் செய்து தங்களது குலதெய்வ வழிபாடு நடத்தினர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சுடச்சுட கமகமக்கும் கறி விருந்து வைத்தனர்.

    இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த பக்தர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் குலதெய்வ வழிபாடு செய்து, பின்னர் நீண்ட வரிசையில் பொறுமையாக நின்று ஆட்டுக்கிடாய் கறி விருந்தை ருசித்து சாப்பிட்டனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம்.
    • திருச்செந்தூர் முருகனை வணங்கலாம்.

    ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோவில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

    சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குல தெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக எது குலதெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.

    சரி குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?

    உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்னத்தில்- ஜந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தபட்டு இருந்தால் சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஐந்தில்- ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம்.

    உங்கள் தாத்தா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் உரிய, முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெறவில்லை என்றால், உங்களுக்கு வாழ்நாள் முழுக்க, தடைகள், முட்டுக்கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான்.

    உங்கள் பரம்பரையின், ஒட்டு மொத்த பாவக் கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து, அதன்பிறகு உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். குல தெய்வம்- உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க தன் உடல், பொருள் ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம்.

    சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

    இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின் மேல் ஈடுபாடு என்று பாருங்கள். பரம்பரையாக, ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்பசாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவாயில்லை.

    அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். சதுரகிரி அருகில் இருப்பவர்கள்- மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம். இல்லையா, திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.

    மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம், ஆகியவற்றையும் அழிக்கக் கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது.

    இது போன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம். திருச்செந்தூர்- குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×