search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Theerthavari"

    • திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் உத்திர விழா மிக விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா இன்று காலை 9 மணிக்கு கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் சோமாஸ்கந்தர் பல்வேறு வாகனத்தில் திருவலாங்காட்டில் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    விழாவின் 7ம் நாளான 21-ந்தேதி கமலத்தேர் விழா நடக்கிறது. இதைத்தொடர்ந்து 22-ந்தேதி இரவு வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலியம்மன் திருக்கல்யாணம் நடைப்பெறுகிறது. 24-ந்தேதி இரவு தீர்த்தவாரி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணி செய்து வருகின்றனர்.

    • அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
    • விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தை மாத அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனையடுத்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.

    தை, ஆடி அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று ஆண்டு முழுவதும் தங்கள் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    அந்த வகையில் தை அமாவாசையான இன்று சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம், தர்ப்பபுள், பிண்டம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலம் ராமேசுவரம்.
    • தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாகவும், உலக பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமாகவும் விளங்கும் ராமேசுவரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலில் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து, கோவிலில் இருக்கும் 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

    இதில் ஆண்டுதோறும் வரக்கூடிய முக்கிய அமாவாசை நாட்களான தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை நாட்களில் தங்களுடைய முன்னோர்களுக்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வைத்து திதி, தர்ப்பணம் கொடுப்பது ஜதீகமாக உள்ளது. அந்த வகையில் நாளை மறுநாள் (9-ந்தேதி, வெள்ளிக்கிழமை) தை அமாவாசை வருவதால் அந்நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து சுவாமி வழிபாடு செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியானது கோவில் நிர்வாகம் சார்பில் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கிழக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க மூங்கில் கம்புகள் வைத்து வரிசைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும், கூட்டம் இருக்கும் என்பதால் நீண்டநேரம் வரிசையில் நின்று செல்வதற்கு வசதியாக தற்காலிக நிழற்குடை அமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கோவில் நான்கு ரத வீதிகளிலும் தை அமாவாசை வரையிலும் தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது..

    தை அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்படு கிறது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிக லிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான கால பூஜைகள் நடைபெறும். காலை 10.25 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கரைக்கு எழுந் தருளி தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    அதனைதொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருக்கும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதணை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம்.
    • துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும்.

    திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும். துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்றும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்றும் பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இந்த ஆண்டு துலாஸ்நானம் நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள அகண்ட காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள்.

    பின்னர் சிறிய பல்லக்கில் பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவருக்கு ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அஸ்திர தேவர் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீரை ஊற்றிய பின்னர், அஸ்திர தேவர் அகண்ட காவிரி ஆற்றில் புனித நீராடினார்.

    அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நமசிவாயா..., நமசிவாயா... என்ற கோஷத்துடன் புனித நீராடினார்கள். காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன், கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி நேற்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

    • நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி வழிபட்டனர்.

    கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், சோமேஸ்வரர் கோவில், அபிமுகேஸ்வரர் கோவில் மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி 6 கோவில்களில் இருந்து சாமிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து மகாமகக்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் மங்களாம்பிகை அம்பாள் தவிர, நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பெரியநாயகி, காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து காசிவிசாலாட்சி, சோமேஸ்வரர் கோவில் சோமசுந்தரி, அபிமுகேஸ்வரர் கோவில் அமிர்தவல்லி மற்றும் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் புறப்பட்டு மகாமக குளத்துக்கு எழுந்தருளினர்.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்களுடன் அஸ்திர தேவர்களுக்கு பால், மஞ்சள், தேன், திரவியப்பொடி, சந்தனம் உள்ளிட்ட நறுமணப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு மகாமக குளத்தில் புனித நீராடி வழிபட்டனர்.

    அம்மாப்பேட்டை மார்வாடிதெருவில் உள்ள வீரமகாகாளியம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபாடு செய்தனர்

    சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி காலை சிறப்பு அபிஷேகமும், மாலை சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு அம்பாளுக்கு விசேஷ அலங்காரமும், வீதி உலா காட்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பட்டுக்கோட்டை வட்டம் துவரங்குறிச்சி தென்பாதி தெற்கு தெருவில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி காவடி, பால்குடம், கஞ்சி வார்த்தல் ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டனர். அதனை தொடர்ந்து மாவிளக்கு போட்டு அர்ச்சனை செய்தனர். பின்னர் காமாட்சி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை துவரங்குறிச்சி தென்பாதி காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    • வெண்ணைத்தாழி வைபவம் இங்கு மிகவும் சிறப்பு
    • திருபவித்ரோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறும்

    ஸ்ரீயப் பதியான ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சகை வடிவில் கோலங்கொண்டிருக்கும் திருத்தலங்கள் உலகெங்கிலும் இருந்தாலும், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருத்தலம் ஒன்றே என்றால் அது மிகையல்ல.

    மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்க கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் அருள் வழங்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்.

    செண்பகவனத்து முனிவர்களின் வேண்டுகோளின் படி பிருந்தாவனத்தில் அன்று கண்ணன் செய்து காட்டிய லீலைகளை முனிவர்களுக்கும் காட்டி அருளினான். பரவாசு தேவனாக முதல் சேவை தொடங்கி 323-வது சேவையாக ஸ்ரீவித்யாராஜ கோபாலனாக சேவை சாதித்தருளினான். இதனைக் கண்ட முனிவர்கள் இத்திருக்கோலத்துடனே என்றும் காட்சி தந்தருளப் பிரார்த்தித்தனர்.

    உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள் அவனையல்லால் நும்இச்சை சொல்லி நும்தோள் குலைக்கப்படும் அன்னை

    மன்னப்படு மறைவாணனை வண்துவராபதி மன்னனை ஏத்துமின் ஏத்தலும் தொழுதாடுமே என்று நம்மாழ்வாரால் போற்றப்பட்ட ஸ்ரீராஜகோபாலனை மன்னையம்பதிக்கு எழுந்தருளச் செய்த கோபில, கோப்பிரளய மகரிஷிகளைப் போற்றி ஸ்ரீவித்யா ராஜகோபாலனின் அழகை இனிக் காண்போம்.

    மாடு மேய்க்கும் கண்ணனாக தான் மேய்க்கும் பசுவிடம் சிறிது சாய்ந்து கொண்டு ஒற்றை ஆடையுடன், ஒரு காதில் ஓலையும், ஒரு காதில் குண்டலமும் விளங்க ஒரு கையின் நுனியில் மும்மடிப்புள்ள செண்டாயுதமும் ஏந்தி இடது திருக்கரத்தை சத்யபாமாவில் தோளில் பதியச்செய்த வண்ணம், திருமுடியில் சுற்றிய திருப்பரி வட்டமும் இடையில் ஒற்றை ஆடையுடன் அழகுக்காட்சி நல்கும் நம் கோபாலன் மந்தகாசம் தவழும் செம்பவளச் செவ்வாயுடன், அருள் வெள்ளம் பாய்கின்ற திருமார்பின் அழகும், அடியவர்களை தன் அழகுப் புருவங்களால் ஈர்க்கும் ஆற்றலும் மிக்க இறைவனாக விளங்கக் காண்கிறோம்.

    ஆலயத்தின் தென்பகுதியில் ஹேமாப்ஜ நாயகி என்றும், செண்பகலெஷ்மி என்றும் செங்கமலத்தாயார் என்றும் போற்றப்படும் எழில் கொஞ்சும் தாயார் சன்னதி அமைந்துள்ளது.

    தாமரை மலரில் வீற்றிருக்கும் தாயார் தன் இரு பக்கங்களிலும் யானைகளுடன் கெஜலெட்சுமியாக அருட்காட்சி நல்குகிறாள்.

    இவை தவிர ஸ்ரீ ராமர் சன்னதியும், ஆழ்வாராதிகளுக்கென தனித்தனி சன்னதிகளும், ஆச்சார்யார்களைப் போற்றும் வண்ணம் அவர்களுக்கென தனி சன்னதிகளும் கொண்டு அழகுற விளங்குகிறது இவ்வாலயம்.

    இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது. கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடை பெறுகிறது.

    திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார். வீதிகள் தோறும் பெண்களும், பக்தர்களும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள்.

    மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங் காரத்திலும், குதிரை வாகனத் திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். காலையில் தொடங்கிய விழா இரவு வரை நடைபெறும் இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    பகவான் கண்ணன் கோப்பிரளயம் முனிவர்களுக்கு 32 திருக்கோலங்களில் தரிசனம் கொடுத்துள்ளார். ஆனால் மூலக் கிரந்தத்தில் 30 அவதாரங்களை மட்டுமே குறிப்புகள் உள்ளது. ஒருவேளை விரிவுக்கு அன்றி 30 மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

    30 திருக்கோலங்கள்-

    1. அவதார வைபவம்

    2. பூதனா சம்ஹாரம்

    3. யசோதனையின் மடியில் இருந்து பால் பருகியது.

    4. சாயக் கொண்டையுடன் மாயன் தவழ்ந்து வந்தது.

    5. நவநீத நாட்டியம்

    6. ஆநிரை மைத்தல்

    7. வெண்ணைக் களவு

    8. புன்னை மரக்கண்ணன்

    9. புல்லாங்குழல் இசைத்ததும் பசுக்கள் பால் சுரந்ததும்.

    10. உரலிடை யாப்புண்டது.

    11. மாடு மேய்க்கையில் கோலை ககீழே ஊன்றி அதன் மேல் திருமுடி வைத்து கட்டியது.

    12. கலமும் கயிறும் கொண்டு பால் கறந்த அழகு.

    13. கபித்த& வத்ஸாஸ-ரர்களின் வதம்.

    14. காளிங்கநர்த்தனம்

    15. பெண்களின் மஞ்சள் பூச்சை தம் திருமேனியில் காட்டி அருளின பெண்ணாளன் பெருமை.

    16. பொன்னாழியும், புரிசங்கமும் தண்டும் வில்லும் சார்த்தி சேவை தந்தருளியது.

    17. குறவை கூத்து

    18. இடையருக்கு தம் அவதாரங்களை அப்படியேகாட்டி ஆட்கொண்டது.

    19. இடையர்களுடன் அமுதுண்ட காட்சி.

    20. கோமர்த்தனம் எடுத்து கல்மாரி காத்தது.

    21. பிரம்மனால் அபகரிக்கப்பட்ட நிலை.

    22. கோபிநாதனின் கோபிகா லீலை காட்சி.

    23. பாரிஜாதா பஹரணம்.

    24. ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம்.

    25. குவலயா பீட வதம்.

    26. முஷ்டிக காணுர வதம்.

    27. ருக்மணி சத்யபாமாவுடன் பள்ளியறை காட்சி.

    28. வாதுதீர்க்க தூது சென்ற சேவை.

    29. பார்த்தசாரதியாக கீதை உபதேசம் செய்தது.

    30. ருக்மணி சத்யபாமாவுடன் ஒரு வண்டு போல் எழுந்தருளி 3 வளைவு கொண்ட சாட்டை கயிறுடன் கூடிய பொற்கோலை ஏந்தியும், விக்கிரக வடிவத்தில் சேவை தந்து அருளுவது.

    இக்கோவிலில் ஆடி மாதத்தில் பூர நட்சத்திரத்தில் திருத்தேருடன் தாயார் உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உயர் அரங்கர்க்கு கன்னி உகந்தளித்த ஆண்டாளாகவே செங்கமலத் தாயார் அருள்பாலிப்பதாக ஐதீகம். 10 தினங்கள் வெவ்வேறு வாகனங்களில் தாயார் புறப்பட்டு ஆலயத்தினுள் உள்ள தாயார் பிரகாரத்தில் உலாவரும் காட்சி மிக உன்னதமாக இருக்கும்.

    நிறைவு நாளில் திருத்தேரில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயாருக்கென தனித்தேர் வேறு எங்கும் கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பு. ஆடி 18-ம் நாள் ஆடிப்பெருக்கு நாளன்று கோபாலன் பாமணி ஆற்றுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருளி பின்னர் திருப்பாற்கடலின் தென்கரையில் அமைந்துள்ள ஸ்ரீலெட்சுமி நாராயணப் பெருமாள் சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

    ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகள் இ ருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும். இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

    இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் இம்மாதத்தில் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.

    • சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • மற்ற கால பூஜைகள் நடந்தது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் சண்முக விலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மற்ற கால பூஜைகள் நடந்தது.

    இந்துக்கள் தை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றங்கரை, கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினம் வருகிறது. நேற்று முதல் அமாவாசை என்பதால் சிலர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    • சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
    • சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் காலையும், மாலையும் மாட வீதியில் சந்திரசேகர் மற்றும் விநாயகர் உற்சவ உலா நடைபெற்றது.

    இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு நாளான நேற்று மதியம் 12 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.

    அப்போது அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். பின்னர் சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அய்யங்குளத்தில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதால் தீர்த்தவாரி நிகழ்ச்சியானது குளத்தின் கரையில் பாத்திரத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு அதன் மூலம் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று ராமபிரான் தங்க கருட வாகனத்தில் தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • இரவு 8 மணிக்கு அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டு ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழா 5-வது நாள் நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று(திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்தில் கோவிலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்திருந்தனர். இதனால் இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதுபோல் தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என்பதால் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதி பிரகாரங்களிலும் ஏராளமான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் நேற்று இரவு முதலே ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ராமேசுவரம் வந்துள்ளனர்.

    • சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
    • பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரர், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் அங்குள்ள கோவில் புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் நீரில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். அதைத்தொடர்ந்து இரவு பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    அதேபோல் அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதன் பிறகு உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்நாபன திருமஞ்சனம் முடிந்ததும் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் நீரில் மூழ்கி புனித நீராடினர். பின்னர் இரவு கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.

    • ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
    • பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் காலை மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வரதராஜ பெருமாள் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான கருடசேவை உற்சவம் கடந்த 2-ந்தேதியும், தேரோட்டம் 6-ந்தேதியும் நடைபெற்றது.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்தில் தீர்த்தவாரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாளை நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்து சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.

    அத்திவரதர் அனந்த சயனத்தில் உள்ள அனந்த சரஸ் குளத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து திருக்குளத்தின் மூழ்கி தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது.

    அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு குளத்தில் முழ்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    தீர்த்தவாரி திருவிழாவையொட்டி போலீசாரும் தீயணைப்பு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×