search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்செந்தூர் முருகன் கோவில் குறித்து அவதூறு: அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? ஐகோர்ட் கண்டனம்
    X

    திருச்செந்தூர் முருகன் கோவில் குறித்து அவதூறு: அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? ஐகோர்ட் கண்டனம்

    • கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள்.
    • வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெயஆனந்த் என்ற கர்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் கட்டிடம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்களை நான் பதிவு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக என்னிடம் முறையான விளக்கம் கேட்கப்படவில்லை.

    எனது வாழ்வாதாரமே கோவிலில் அர்ச்சகர் பணியை வைத்து தான் உள்ளது. என்னுடைய சமூக வலைதள கருத்துக்கள் தவறு என்று நான் பதிவிட்டும் அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இந்த மாதிரி பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்கும்.

    கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள். அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியதோடு, கடும் கண்டனம் தெரிவித்தார்.

    பின்னர் மனுதாரரை இந்து சமய அறநிலையத்துறையின் இடைக்கால பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×