என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "HC madurai bench"
- எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
- தகுதி இல்லாத நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம்.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தனியார் நிறுவனம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், சாலைகள் அமைக்கும் பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றோம். இந்நிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்காக 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்ட கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு (டெண்டர்) அறிவிப்பானை வெளியிட்டது.
இந்த டெண்டருக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 24-ந்தேதி டெண்டர் நடைபெற்றது. இதில் தொழில்நுட்ப ஏல மதிப்பீடு பட்டியல் வெளியிடப்பட்டதில் எனது விண்ணப்பத்தில் நான் கையொப்பமிடாத காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
ஆனால் நேரடி டெண்டர் ஆவணங்களின் அனைத்து பக்கங்களிலும் நான் கையொப்பமிட்டு இருந்தேன். அது கருத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. எனது விண்ணப்பத்தை வேண்டுமென்றே நிராகரித்து வேறு புதிய நிறுவனத்திற்கு டெண்டரை வழங்கி உள்ளனர்.
சம்மந்தப்பட்ட நிறுவனம் இதுவரை தனியார் பணிகளையே செய்துள்ளனர். தகுதி இல்லாத இந்த நிறுவனத்திற்கு பஸ் நிலைய கட்டுமான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது சட்டவிரோதம். எனவே டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்து புதிய டெண்டர் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், புதுக்கோட்டை பஸ் நிலையம் கட்டுமான பணிகளுக்கு நடத்தப்பட்ட டெண்டருக்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கில் நகராட்சித் துறை நிர்வாக இயக்குனர், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
- கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மதுரை:
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவர், தனது மனைவி, குழந்தைகளுடன் மதுரையில் தங்கியிருந்தார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு மதுரை டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ண ராஜ், நண்பர் முனியசாமி ஆகிய 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனை அறிந்த வரிச்சியூர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் செந்தில்குமார் சென்னை சென்றுவிட்டார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக்கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதாகியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்கப்படுகிறது. அவர் மாதந்தோறும் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார்.
- போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.
மதுரை:
சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். போலீசார் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
மதுரை:
கோயம்புத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட அப்சல் இந்தியா லிமிடெட் நிதி நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பலர் ரூ.19 லட்சம் வரை முதலீடு செய்திருந்தோம்.
ஆனால் அவர்கள் உறுதியளித்த படி நாங்கள் செலுத்திய முதலீட்டு தொகையை வட்டியுடன் திருப்பி தரவில்லை. இது குறித்து புகார் அளித்ததால் 2017-ம் ஆண்டில் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
வழக்கின் அடிப்படையில் எங்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வுபெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைத்தனர்.
அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிதி நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில் வேல் இறந்துவிட்டார்.
ஏற்கனவே கோர்ட்டில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிதி நிறுவனத்தினர் நிறைவேற்றாமல் 3 ஆண்டுகள் காலம் தாழ்த்தியதால் இந்த விவகாரத்தில் இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி விலகிக் கொண்டார். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் புகார் மனு அனுப்பப்பட்டது.
நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்சல் நிதிநிறுவனம், அதன் கிளை நிறுவனங்களால் சுமார் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மோசடி செய்தவர்கள் தப்பிக்க போலீசார் உடந்தையாக உள்ளனர். குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியாகவும் போலீசார் உள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட எங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்க வசதியாக, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் மாதவன் ஆஜராகி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணத்தை மோசடி செய்தவர்களுக்கு போலீசார் உடந்தையாக இருப்பது சட்டவிரோதம். உடனடியாக இந்த நிதி மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.
முடிவில், இந்த வழக்கில் மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தார்.
- ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
- அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது.
மதுரை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த ராமலிங்கசாமி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், ஏரியின் பரப்பு குறைந்து வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்கள் ஏரியின் நடுவே சாலை அமைக்கின்றனர்.
இதனால், இந்த ஏரியை நம்பி உள்ள விளை நிலங்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மணமேல் குடி பகுதியில் உள்ள குருந்தன்குடி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது சாலை அமைத்து வருகின்றனர். இதனால் நாளடைவில் ஏரியே காணாமல் போய்விடும் என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதிகள், வருவாய் ஆவணங்களின் படி குருந்தன்குடி பெரிய ஏரியின் மொத்த பரப்புளவு எவ்வளவு? தற்போது ஏரியின் மொத்த பரப்பு எவ்வளவு? குருந்தன்குடி பெரிய ஏரியில் எந்த வகை ஆக்கிரமிப்புகள் உள்ளன?
ஏரியின் நடுவே சாலை அமைக்கப்படுகிறதா? ஆக்கிரமிப்புகளை எப்போது அகற்றுவீர்கள் என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
- நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.
- போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.
மதுரை:
மதுரையை சேர்ந்த நூர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் சையது இஸ்மாயில், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கைப்பந்து வீரரான இவர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த எனது மகன் கடந்த மாதம் விடுமுறையில் மதுரை வந்தார்.
கடந்த மாதம் 4-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இரவு நேரத்தில் மதுரை மாநகர போலீஸ் சிறப்பு பிரிவில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர் சிவா, போலீஸ்காரர் காமராஜ் உள்ளிட்ட சிலர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து என் மகனை கைது செய்தனர்.
எனது செல்போனையும் பறித்து சென்றனர். இதையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். போலீசாரின் இந்த செயல், மனித உரிமை மீறலாகும்.
எனவே எனது மகன் உள்ளிட்டவர்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து தாக்கியது தொடர்பான விசாரணைக்காக, மதுரை மாநகர பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் கரிமேடு போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் முகமது அலி ஜின்னா ஆஜராகி, மனுதாரர் மகன் உள்ளிட்டவர்களை போலீசார் சட்ட விரோதமாக தாக்கி உள்ளனர். அது சம்பந்தமான சாட்சிகளை விசாரிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராக்கள் பதிவு அவசியமாகிறது. இதை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
அப்போது நீதிபதி மனுதாரர் தெரிவிக்கும் போலீஸ் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளனவா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு போலீஸ் தரப்பு வக்கீல் ஆஜராகி, மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் சி.சி.டி.வி.யின் கேமரா பதிவு ஹார்ட்டிஸ்க் இல்லை என தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி கூறுகையில், முறையாக சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்து காவல் நிலையங்களிலும் இருக்க வேண்டும். அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இது போன்று பதிலளிக்கிறீர்கள். அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்கும்படியும் மதுரை போலீஸ் கமிஷனருக்கு நீதிபதி உத்தரவிட்டார்
- கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள்.
- வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த ஜெயஆனந்த் என்ற கர்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிலையில் கடந்த மாதம் கோவில் கட்டிடம் குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்துக்களை நான் பதிவு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் என்னை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக என்னிடம் முறையான விளக்கம் கேட்கப்படவில்லை.
எனது வாழ்வாதாரமே கோவிலில் அர்ச்சகர் பணியை வைத்து தான் உள்ளது. என்னுடைய சமூக வலைதள கருத்துக்கள் தவறு என்று நான் பதிவிட்டும் அதிகாரிகள் அதனை கருத்தில் கொள்ளவில்லை. எனவே என் மீதான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோவில் ஒன்றும் நீங்கள் அரசியல் செய்வதற்கான தளம் கிடையாது. கோவில் குறித்த இந்த மாதிரி பதிவுகள் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்கும்.
கோவில் ஊழியராக இருந்து கொண்டு கோவிலுக்கு எதிராகவே எப்படி சமூக வலைதளத்தில் கருத்துக்களை பரப்புகிறீர்கள். அரசியல் லாபத்திற்கு கோவிலை பயன்படுத்துவதா? என கேள்வி எழுப்பியதோடு, கடும் கண்டனம் தெரிவித்தார்.
பின்னர் மனுதாரரை இந்து சமய அறநிலையத்துறையின் இடைக்கால பணி நீக்கம் செய்ததற்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
- பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.
- தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர்.
மதுரை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. பிரபலமான முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கும் புதிய சினிமா படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.
இவற்றில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்கள் நடித்த சினிமா படங்கள் வெளிவரும்போது அவர்களின் ரசிகர்கள் அந்த நாளை திருவிழா போல கொண்டாடுகிறார்கள். ரசிகர்கள் ஷோ, சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது.
இந்த காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பு 24 மணி நேரமும் ரசிகர்கள் பெரும் கூட்டமாக நின்று கொண்டு சாலையில் பட்டாசுகள் வெடிப்பது, பேனர், கட்அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது என பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இதே போல தியேட்டருக்குள் மற்ற பார்வையாளர்களை சினிமா பார்க்க விடாமல் ரகளையில் ஈடுபடுகின்றனர். மேலும் அங்குள்ள இருக்கைகள், திரைச்சீலை உள்ளிட்டவற்றை சேதப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் இளம் சமுதாயம் எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்களை சந்திக்கும் அவலம் ஏற்படும்.
பல ஏழை குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இதுபோன்ற ரசிகர்கள் என்ற போர்வையில் தங்களது உடல் நலத்தை கெடுத்து, பெற்றோருக்கு பல கஷ்டங்களை கொடுக்கின்றனர். பிரபல கதாநாயகர்கள் நடித்து வெளிவரும் சினிமா படங்களின் சிறப்பு காட்சிகளில் டிக்கெட் கட்டணத்தை வசூலிக்க எந்த விதிமுறையும், கட்டுப்பாடும் இல்லை.
ரசிகர் மன்றம் சார்பில் ஒரு டிக்கெட்டுக்கு 1000 ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சில ரசிகர்கள் பறவை காவடி, பூ மழை, கிரேன் வாகனத்தில் காவடி என ஆபத்தான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு பலர் உயிரை இழக்கின்றனர்.

சமீபத்தில் யூ-டியூபர் டி.டி.எப் வாசனின் செயலை கடுமையாக நீதிமன்றம் விமர்சித்துள்ளது. காரணம் அவரது நடவடிக்கை இளம் தலைமுறையினரை கெடுத்து, அவர்களின் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தலையும் ஏற்படுத்துவதாகவும் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
இதேபோல்தான் பிரபல சினிமா கதாநாயகர்களின் இளம் ரசிகர்களின் நடவடிக்கையும் உள்ளது. இது அவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடும்.
எனவே முன்னனி கதாநாயகர்கள் நடித்த சினிமா வெளியிடப்படும் போதும், டிரெய்லர் வெளியிடும் போது ரசிகர்கள் காட்சி, சிறப்பு காட்சிகளின் போது தியேட்டர்கள் முன்பாக ரசிகர்களை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை வகுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
- கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவன். மீனவ மக்களின் வாழ்வாதாரம், கல்வி, முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறேன்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. சுமார் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடலோரத்தில் வசிக்கும் மீனவ மக்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இதனால் மீனவ குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்பட்டால் மீனவ மாணவர்கள் பலன் அடைவார்கள்.
எனவே கடலோர பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலக்குமார் ஆஜராகி, கடந்த மாதம் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவது தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன என்றார்.
அரசு வக்கீலின் தகவலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.