search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் முருகன் கோவிலில்  செல்போன் கொண்டு செல்ல தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது.
    • திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    மதுரை:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் அர்ச்சகரான சீதாராமன், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் கோவில்களின் சிலைகளை புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோவில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது, மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கோவிலில் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்கள் எடுத்து அவர்களுடைய தனிப்பட்ட யூ-டியூப் சேனலில் பதிவிடுகின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல.

    தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. திருப்பதி கோவிலின் வாசலில் கூட புகைப்படங்கள் எடுக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் இருந்து செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.

    கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரீகமான உடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றனர்.

    பின்னர், திருச்செந்தூர் கோவிலின் உள்ளே அர்ச்சகர் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. திருச்செந்தூர் கோவிலின் உள்ளே செல்போன் பயன்படுத்தினால் அதனை பறிமுதல் செய்து, மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கக்கூடாது.

    கோவிலின் வாசலிலேயே செல்போன் டிடெக்டர் வைத்து பரிசோதனை செய்த பின், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கோவிலின் உள்ளே செல்போன் கொண்டு செல்வது, செல்பி எடுப்பது போன்ற செயல்களை இரும்பு கரங்கள் கொண்டு அடக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்றுவது குறித்த சுற்றறிக்கையை அறநிலையத்துறை கமிஷனர் உரிய அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும்.

    இந்த சுற்றறிக்கையின் நகலை இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×