search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padayatra Devotees"

    • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா.
    • முருகர் தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் இன்று தைப்பூச திரு விழா நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    தைப்பூசத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. தீபாராதனைக்கு பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரத வீதியில் உள்ள இல்லத்தார் தைப்பூச மண்டபத்திற்கு வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திரளான பக்தர்கள் காவி மற்றும் பச்சை நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், பல்வேறு அடி நீள அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் வந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் குழுக்களாக, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் முருகபெருமானின் உருவப் படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியவாறும் பாதயாத்திரையாக வந்தனர்.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் சாலையில் திருச்செந்தூருக்கு பக்தர்கள் அணிவகுத்து சென்றனர். திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கோவில் வளாகம், கடற்கரை, மண்டபங்கள், விடுதிகளில் தங்கினர். திருச்செந்தூர் நகரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சியளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

     இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் கடற்கரை, கோவில் வளாகம் நிரம்பி வழிகிறது.

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.
    • பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

     அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசை யில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் தரிசனத்திலும், பொது தரிசனத்திலும் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் இன்று கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

    • கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் இருந்தே நீண்ட வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில் வளாகத்தில் சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தனியார் விடுதிகள். சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

     பாதயாத்திரையாக, குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி பாடிவந்தனர். காவடி, பால்குடம், எடுத்து வந்தும் சில பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்ச்சை செய்தனர். சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்தும் நேர்ச்சை செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×