search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year Special Darshan"

    • கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
    • நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

     ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் இருந்தே நீண்ட வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

     சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில் வளாகத்தில் சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தனியார் விடுதிகள். சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

     பாதயாத்திரையாக, குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி பாடிவந்தனர். காவடி, பால்குடம், எடுத்து வந்தும் சில பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்ச்சை செய்தனர். சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்தும் நேர்ச்சை செய்தனர்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×