என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தை படத்தில் காணலாம்.
திருச்செந்தூர் கோவிலில் பிரம்மாண்டமாக தயாராகும் யாகசாலைகள்- டிரோன் மூலம் புனிதநீர் தெளிக்க ஏற்பாடு
- யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
- கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் தக்கார் அருள் முருகன் மற்றும் கோவில் இணை ஆணையர் ஞான சேகரனிடம் சிவாச்சாரியார்கள் குடமுழுக்கு தாம்பூலம் பெறுதல் நடந்தது.
நேற்று காலையில் விநாயகர் வழிபாடு வேள்வி, மாலையில் எண் திசைத் தேவர்கள் வழிபாடு திசா சாந்தி வேள்வி நடந்தது. இன்று காலையில் நவக்கிரக வேள்வி, மாலையில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற வேண்டி தேவதை வழிபாடு நடக்கிறது.
வருகிற 1-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா தொடங்குகிறது. 12 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக 2 இடங்களில் பிரம்மாண்டமான வகையில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நந்தி, மயில் அலங்காரத்துடன் யாககுண்டம் அமைந்துள்ள பகுதிகள் தங்கநிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் கிரி பிராகாரத்திலுள்ள மரங்கள் உள்ளிட்ட இடங்களில் அலங்கார விளக்குகள் தொடங்க விடப்பட்டுள்ளன.
7-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால யாக வழிபாடு நடைபெற்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50மணிக்குள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பின்னர் 20 இடங்களில் டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.
கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் (6-ந்தேதி) மதியத்தில் இருந்து மறுநாள் 7-ந் தேதி மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. மதியத்திற்கு பிறகுதான் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் சுவாமி சண்முகரை தரிசனம் செய்யலாம்.
யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் ஒலிக்கும்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள் பொதுப்பணித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 1,500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 400 பஸ்கள் திருச்செந்தூர் வந்து செல்கின்றன. அதனுடன் சேர்த்து மொத்தம் 855 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் தனியார் வாகனங்கள் நிறுத்த 18 வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கழிப்பிடம், குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. 30 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது
மேலும் கூடுதலாக பல்வேறு இடங்களில் பக்தர்கள் வசதிக்காக 824 தற்காலிக கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட உள்ளது. சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக சொற்பொழிவாளர்கள் மூலம் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
60 அகன்ற எல்.இ.டி.திரை மூலம் வாகன நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தும் இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஜூலை 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கோவில் நிர்வாகம் சார்பில் 20 இடங்களில் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.






