search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?
    X

    ஆதிமூலஸ்தான கொன்றையடி தாணுமாலயன், சுசீந்திரம் கோவிலின் அழகிய தோற்றம்.

    18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது எப்போது?

    • 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இந்த கோவிலில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது.

    புகழ்பெற்ற சுசீந்திரம் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 18 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. எனவே விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அரசும், அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து சுசீந்திரம் தெற்கு மண்மடத்தைச் சேர்ந்தவரும், சுசீந்திரம் கோவில் நித்திய யோகஸ்தானியருமான திலீப் நம்பூதிரி (வயது 53) கூறியதாவது:-

    நாங்கள்தான் கோவில் திருவிழாக்களின்போது கொடியேற்றுவோம். யாருடைய அனுமதியும் இன்றி நாங்கள் கோவிலுக்குள் சென்றுவர எங்களுக்கு உரிமை உண்டு. கும்பாபிஷேகத்தைப் பொறுத்தவரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது ஊர்மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லதல்ல. இதனால் உருவாகும் தோஷங்கள் பாதிப்பை ஏற்படுத்தும். களபபூஜை நடத்துவது ஊர் மக்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறோம். அதேபோல்தான் கும்பாபிஷேகத்தையும் நடத்த வேண்டும். எனவே அரசு எவ்வளவு சீக்கிரமாக கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமோ? அவ்வளவு சீக்கிரமாக நடத்த வேண்டும் என்று அரசையும் அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.

    சுசீந்திரம் கோவில் வட்டப்பள்ளி ஸ்தானிகரும், ஆயுர்வேத டாக்டருமான சிவபிரசாத் (45) கூறியதாவது:-

    கோவில்களை பொறுத்தவரையில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சாதாரணமாக கும்பாபிஷேகம் நடத்துவார்கள். ஆனால் சுசீந்திரம் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனவே கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தும்போது மொத்தத்தில் கோவில் புதுப்பிக்கப்படுகிறது.

    கோவிலில் உள்ள இடர்பாடுகள், பழுதுபார்க்கும் பணிகள், சுத்தப்படுத்த வேண்டிய பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தின்போது செய்யப்படும். இந்த பணி என்பது நமது வீட்டை எவ்வாறு பராமரிப்பு செய்வோமோ அதுபோன்றதுதான் கோவில் கும்பாபிஷேகப்பணியும். 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளை கடந்து அதிகமாக 6 ஆண்டுகளும் ஆகிவிட்டது.

    கடந்த திருவிழாவின்போதே அதிகாரிகள் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்கள். கோவில்கள் ஒவ்வொரு ஊருக்கும் பலன் தரக்கூடியதாகும். கும்பாபிஷேகம் செய்யும்போது ஊருக்கும், மக்களுக்கும் புண்ணியங்களும், நன்மைகளும் கிடைக்கும். எனவே எவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த முடியுமோ? அவ்வளவு விரைவாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

    குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுசீந்திரம் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவில் ஆகிய கோவில்கள் ஆயிரம் ஆண்டு பழமையான கோவில்களாகும். இதற்காக திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும் டெண்டர் விட்டு திருப்பணிகள் தொடங்கப்படும்.

    சுசீந்திரம்தாணுமாலயன்சாமி கோவில் திருப்பணிகள் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக மாடர்ன் டைல்ஸ்களை மாற்றி கருங்கல் தளம் அமைக்கும் பணி ரூ.76 லட்சத்திலும், உபசன்னதி பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்யும் பணி ரூ.21 லட்சத்திலும், மண்டபம் ஒழுக்கு மாற்றி தட்டோடு பதித்தல் பணி ரூ.62 லட்சத்திலும், கருங்கல்லால் ஆன கட்டமைப்புகளை தண்ணீர் மூலம் சுத்தம் செய்து, வரிவாளம் அமைக்கும் பணி ரூ.39 லட்சத்திலும், விமானங்களில் வர்ணம் பூசுதல் பணி ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் செலவிலும், ராஜகோபுரத்தில் திருப்பணி ரூ.30 லட்சத்திலும், மின் இணைப்பு பணி ரூ.25 லட்சத்திலும் என மொத்தம் ரூ.2½ கோடியில் நடைபெற உள்ளது. ராஜகோபுரத்தில் உள்ள மூலிகை ஓவியம் நன்றாக உள்ளது. சுசீந்திரம் உள்ளிட்ட 3 கோவில்களில் கும்பாபிஷேகப் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×