திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை இன்று நிறைவு

30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல பூஜை இன்று நிறைவு
Published on

திருச்செந்தூர்:

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 7-ந்தேதி கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடந்தது.

15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷே விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷே விழா நிறைவடைந்த பிறகு 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். ஆனால் ஆவணி திருவிழா தொடங்கப்பட உள்ள நிலையில் 30 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மண்டல பூஜை நடந்து வந்தது.

இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல நிறைவு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மண்டல பூஜை விழாவிற்காக பெங்களூரை சேர்ந்த திருமலை திருப்பதி, ஸ்ரீமன் நாராயணா சபா சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோவிலை அலங்காரம் செய்வதற்காக அலங்கார பொருட்கள், மலர்கள் மற்றும் பழங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த அலங்காரத்தில் தென்னங்குருத்து இலை, அந்தோனியம், ரோஸ், கிசாந்திமம், ப்ளூ டெசி, ஜெர்ப்புறா, ஜிப்ஸி, சுகர் கேன், காமினி, டேய் சுனிஸ், செக்ஸி ஹலோ கோனியோ, ஆர்கிட்ஸ், ஆரஞ்சு, அண்ணாச்சி பழம், சோளக்கருகு, கரும்பு உள்பட பல்வேறு வகையான அலங்கார பொருட்களை பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டது.

கோவிலில் உள்ள சண்முக விலாச மண்டபம், மூலவர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, பெருமாள், விநாயகர் பெருமாள், கொடிமரம், நுழைவு வாயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வண்ண மயமாக அலங்கரிக்கப்பட்டது.

இதற்காக பணியில் சேலம், சென்னை, பெங்களூரு, கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த 110 பணியாளர் ஈடுபட்டனர்.

மண்டல பூஜை விழாவையொட்டி காலையில் 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 9.30 மணிக்கு மண்டல பூஜை அபிஷேக பூர்த்தி பூஜை தொடங்கி நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com