என் மலர்
வழிபாடு

கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
- மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.






