என் மலர்
வழிபாடு

பழனி முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்- காலை 11 மணிவரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
- மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
- கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் அக். 22-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (அக்.27) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்காக, பெரியநாயகியம்மன் கோவிலில் 6 அடி உயரம், 4 அடி அகலத்தில் 4 விதமான சூரன்களை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. திருச்செந்தூரில் சூரன் உருவத்தில் தலையை மட்டும் மாற்றி மாற்றி சூரசம்ஹாரம் நடைபெறும்.
ஆனால் பழனியில் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் சூரன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகா சூரன், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் என 4 திசைகளிலும் தனித்தனியாக சூரன்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சூரசம்ஹாரத்தையொட்டி, நாளை (அக்.27) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும்.
பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் நடைபெற்ற சூரன்களை தயார் செய்யும் பணி.
மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும்.
பிற்பகல் 3 மணிக்கு சின்னக் குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும். தொடர்ந்து திரு ஆவினன்குடி கோவிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடைபெறும். இதையொட்டி நாளை காலை 11.30 மணிக்கு அனைத்து தரிசன கட்டண சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, ரோப் கார் மற்றும் வின்ச் ரெயிலில் மலைக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
விழாவின் நிறைவாக நாளை மறுநாள் (அக்.28) காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோவிலில் வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழாவையொட்டி தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர். இன்று விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ் நிலையம், அடிவாரம், மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.






