search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Dindigul"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சுற்றுலாப்பயணிகள் வடுகையால் கடும் போக்குவரத்து நெரிசல்.
  • அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியம் இல்லை.

  திண்டுக்கல்:

  தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்துமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

  அதன்படி கொடைக்கானலுக்கு வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் நாளை (7-ந் தேதி) முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறையையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசு பஸ்களில் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விபரங்கள் நேரடியாக போக்குவரத்து துறை மேலாண்மை இயக்குனரிடமிருந்து பெற்றுக்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

  எனவே அரசு பஸ்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

  கொடைக்கானலுக்கு வருகை தர உள்ள சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் விபரங்களை பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

  உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடும், வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாள கோடு, சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா நிற அடையாள கோட்டுடனும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

  கொடைக்கானல், வெள்ளி நீர்வீழ்ச்சி, சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு நாளை முதல் ஜூன் 30-ந் தேதி வரை ஒரு முறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக் கொண்டால் போதுமானது.

  சுங்க கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு தங்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று, நடப்பில் உள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையத்தில் பதிவு செய்து இ-பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  கொடைக்கானல் வரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

  சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் செல்போன் செயலி மூலம் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விபரங்களை தெரிந்து கொள்வார்கள்.

  இ-பாஸ் தொடர்பான துரித சேவைகளுக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

  • ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும்.
  • சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  ஒட்டன்சத்திரம்:

  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் விருப்பாச்சி மலைக்குன்று வழியாக தலையூத்தில் அருவியாக கொட்டுகிறது.

  பல அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது காண்போரை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறது. விருப்பாச்சியில் இருந்து 2 கி.மீ தூரம் பயணித்தால் மலையடிவாரத்தில் பெருமாள் கோவிலை சென்றடையலாம். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் நல்காசி விருப்பாச்சி ஈஸ்வரர் கோவிலின் முன் பகுதியில் இந்த அருவியை காண முடியும்.

  ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பாகும். மலையடிவாரத்தில் இன்னொரு அருவியாகவும், தலையூத்து அருவி கொட்டுகிறது. இதனை கீழ் தலையூத்து அருவி என்று அழைக்கின்றனர். மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரத்துக்கு இது நங்காஞ்சியாறாக ஓடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவி இருக்கும் இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

  அருவி பகுதியில் நீர் சுழல் மற்றும் சில இடங்களில் ஆழம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி இங்கு யாரையும் குளிக்க அனுமதிப்பது கிடையாது. இருந்தபோதும் உள்ளூர் மக்களும், அருவி பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்பவர்களும் அவ்வப்போது இந்த அருவியில் ஆனந்த குளியல் போட்டுச் செல்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையிலும் தலையூத்து அருவியில் தண்ணீர் வற்றாத ஜீவநதி போல வருகிறது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தும், புகைப்படம் எடுத்தும் செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பரப்பலாறு அணை மற்றும் தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று ரூ.8.22 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இருந்தபோதும் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து சுற்றுலா தலமாக மாறினால் இப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைவார்கள் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

  • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
  • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

  திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

  அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

  படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

  உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

  • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

  இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

  அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

  காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

  இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

  நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

  • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
  • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

  திண்டுக்கல்:

  நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

  குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

  திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

  இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


  இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

  இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

  திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

  ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

  • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
  • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  திண்டுக்கல்:

  பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

  காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆத்தூர் காமராஜர் அணை முழுமையாக வறண்டதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது.
  ஆத்தூர்:

  திண்டுக்கல் அருகே ஆத்தூர் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது காமராஜர் அணை. இந்த அணைமூலம் ஆத்தூர், சின்னாளபட்டி, செம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் திண்டுக்கல் மாநகராட்சிக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

  கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே மழை ஏமாற்றி வருவதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இதனால் திண்டுக்கல் நகர் குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  ஆனால் அதற்கு பணம் செலுத்த வேண்டும் என்பதால் பெரும்பாலும் காமராஜர் அணை நீரையே திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

  கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தபோதும் கீழ்மலை பகுதியில் மழை இல்லாததால் காமராஜர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுபோனது. கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இருக்கும் தண்ணீரும் குறைந்தது.

  தற்போது அணையின் நீர்மட்டம் பூஜ்ஜியம் அளவில் உள்ளது. இதனால் திண்டுக்கல் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் தண்ணீரை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

  அதிகபட்சமாக 11 எம்.எல்.டி வரை நீரை பெற முடியும். ஆனால் திண்டுக்கல் நகருக்கு அதுபோதாது. தற்போதே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடை மழை கீழ்மலை பகுதியில் பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடை சமாளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.40 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். #SSLC #SSLCResult
  திண்டுக்கல்:

  தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தில் 12,937 மாணவர்களும், 12,673 மாணவிகளும் என மொத்தம் 25,610 பேர் தேர்வு எழுதினர். இதில் 11,598 மாணவர்களும், 12,066 மாணவிகளும் என மொத்தம் 23,664 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  89.65 சதவீத மாணவர்களும், 95.221 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 6 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.40 ஆகும்.

  மாநில அளவில் திண்டுக்கல் மாவட்டம் 32-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு 94.4 சதவீதமும், 2018-ம் ஆண்டு 91.60 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள போதிலும் 2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

  திண்டுக்கல் மாவட்டத்தில் 150 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 9,470 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

  இதில் 8,188 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.46 சதவீதம் ஆகும். 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணை பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SSLC #SSLCResult

  தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
  திண்டுக்கல்:

  தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக வெயில் சுட்டெரித்து வந்தது. கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சமடைந்து வந்தனர். மேலும் நீர் நிலைகள் வறண்டு போகத் தொடங்கின.

  மேலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குடிநீருக்காக பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டங்களில் ஈடுபடும் அளவுக்கு வறட்சி தாண்டவம் ஆடியது. எனவே பொதுமக்கள் மழை எப்போது பெய்யும் என வானத்தை வெறித்து பார்த்த படி இருந்தனர்.

  தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து திடீரென மழை கொட்டத் தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

  இதனால் முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி வராக நதி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. பெரியகுளம், தேனி, கம்பம், கூடலூர், தேவாரம், போடி, ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பூமி குளிர்ந்தது.

  நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.

  திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் சாரல் மழை பெய்தது. செம்பட்டி, சித்தையன்கோட்டை, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 2 மாதமாக வறட்சி அதிகரித்ததால் பூ சாகுபடி குறைந்தது.

  இந்த நிலையில் தற்போது மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மழை காரணமாக செம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இரவு முழுவதும் மின்சாரம் வருவதும், தடைபடுவதும் என தொடர்ந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

  இதே போல் மாவட்டத்தில் பழனி, கொடைக்கானல், நத்தம், வத்தலக்குண்டு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுட்டெரித்த கொடைக்கானலில் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றியில் இறங்கிய முதல் நாளே மழை பெய்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கியதால் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பெயர் வைக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினை பெயர் வைக்கும்படி கூறிய பெண்ணால், பிரசார கூட்டத்தில் சிரிப்பலை உண்டானது. #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் பிரசார வாகனத்தில் நின்றபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது 2 வயது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தின் மேல் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

  அந்த குழந்தையை வாங்கி பார்த்த உதயநிதி ஸ்டாலின் என்னம்மா இன்னுமா இந்த குழந்தைக்கு பெயர் வைக்கல? என கேட்டபடியே குழந்தையிடம் உனது பெயர் என்னம்மா? என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை தனது பெயர் ‘சோபிகா’ என கூறியது. குழந்தையின் மழலைக்குரல் உதயநிதி ஸ்டாலின் கையில் வைத்திருந்த ‘மைக்’ மூலம் ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலினும் சிரித்தபடியே குழந்தைக்கு இந்த பெயரே நன்றாக தான் உள்ளது என கூறி தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin