என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் விபத்து"

    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
    • காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

    காரைக்குடி அருகே அரசு பஸ்கள் நேற்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் 9 பெண்கள் உள்பட11 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பிரதமர் மோடி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

    இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
    • விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் வரை பயணம் செய்தனர்.

    அந்த பஸ் கூடங்குளம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதியில் வந்தபோது எதிரே அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது சமீப காலமாக பெய்த மழையினால் சாலையோரம் இருந்த மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் பஸ் டயர் கீழே இறங்கவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் 27 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்கள் அதிகமாக இருந்த பயணிகள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது.
    • எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    உளுந்தூர்பேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ்வரன் (வயது 24), விஜய்பழனி (22). 2 பேரும் அண்ணன், தம்பி. இவர்கள் 2 பேரும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகேயுள்ள தலப்பாக்கட்டி பிரியாணி கடையில் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று இன்று பணிக்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு திரும்பினர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிக்கு 100 மீட்டர் தொலைவில் சேந்தநாடு குறுக்குச் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியிலிருந்து ஈரோட்டிற்கு சென்ற அரசு பஸ் உளுந்தூர்பேட்டைக்குள் செல்வதற்காக திரும்பியது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அண்ணன், தம்பி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயங்களுடன் சாலையில் துடித்தனர்.

    இவர்களை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் இறந்துவிட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேரும் பணி செய்யும் ஓட்டலுக்கு அருகே சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லாரி மீது மோதாமல் இருக்க திரும்பிய போது விபரீதம்
    • 50 பயணிகள் உயிர் தப்பினர்

    வந்தவாசி:

    வேலூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தவாசி வழியாக மேல்மருவத்தூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கோடீஸ்வரன் ஓட்டினார்.

    வந்தவாசி அடுத்த புளிவாய் கிராமம் கூட்டுச்சாலை அருகே அரசு பஸ் வந்து கொண்டிருந்தபோது எதிரே லாரி ஒன்று வேகமாக சென்றது.

    லாரி மீது அரசு பஸ் மோதாமல் இருக்க திரும்பிய போது சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் புகுந்தது.

    இதில் பஸ்சில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து தப்பித்து வெளியே வந்தனர். பின்னர் மாற்று பஸ்சில் ஏற்பாடு செய்து பயணிகளை பஸ்சில் அனுப்பி வைத்தனர்.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர்.
    • பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிச்சாகவுண்டன்புதூர் அருகே இன்று காலை 5 மணிக்கு காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இதனை சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதுபோல் கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதனை விஜயகுமார் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

    2 அரசு பஸ்களும் காங்கயம் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பிச்சாகவுண்டன்புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பல்லடம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு நின்றது.

    அப்போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென, டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ் கோவை பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் அரசு டவுன் பஸ், கோவை பஸ்சின் பின்பகுதி, மற்றொரு அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர். பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பெண்கள் அடங்குவார்கள். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே அதிகாலை நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    • 30 பேர் படுகாயம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    திருவண்ணாமலை:

    சேலத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி இன்று அதிகாலை 4.45 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.

    அத்தியந்தல் அருகே வரும்போது பஸ் டிரைவரின் கட்டு ப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

    அப்போது தடுப்பு சுவரை இடித்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர்.

    இதில் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் சுரேஷ் மற்றும் கண்டக்டர் ஜனார்த்தனனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்சில் காயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் ஒரு பயணியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    தகவல் அறிந்து வந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்ஸை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தை சேர்ந்தவர் சுஜாதா. இவர் கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஷரவன் (வயது10). இவர், அணுசக்தி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று சுதந்திர தினவிழா பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க மாணவர் ஷரவன் தனது சைக்கிளில் தேசியக்கொடி கட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றார். விழா முடிந்ததும் அவர் வீட்டுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார். அப்போது அங்குள்ள சாலையை கடந்த போது சென்னையில் இருந்து கல்பாக்கம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவர் ஷரவன் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    கல்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினவிழாவில் பங்கேற்று திரும்பிய மாணவர் அரசு பஸ் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 பேர் நேற்று மதியம் ஆட்டோ மூலம் குச்சிபாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு பிராமண மங்களம் வழியாக சென்றனர்.

    ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று பிராமணமங்களம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த வேண்டா, சாந்தி, முருகம்மாள், ராதா, தேவராஜ், சரளா, வள்ளி, கலாவதி, இளவரசன், இளையராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் வேண்டா உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
    • விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடித்து வருகின்றது.

    இதனால் தடையின்றி 100 சதவீத பஸ்களை இயக்கும் நோக்கில் போக்குவரத்து துறை, தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் கடலூரிலும் நேற்று தற்காலிக ஊழியர்கள் மூலம் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் தற்காலிக டிரைவர் வெங்கடேசன் என்பவர் கடலூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து அரசு பஸ்சை இயக்கிக் கொண்டு அண்ணா பாலம் வழியாக சென்றார்.

    அப்போது சீமாட்டி சிக்னல் சாலையில் இருந்து ஜவான்பவன் சாலைக்கு திரும்புவதற்காக நின்று கொண்டிருந்த காரின் பின்பகுதியில் வெங்கடேசன் ஓட்டிச்சென்ற பஸ் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் காரின் பின் பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அரசு பஸ்சை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.


    இதேபோல கடலூரிலிருந்து விருத்தாச்சலத்திற்கு இன்று காலை தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர்-சிதம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எந்தவித அச்சமும் இன்றி, அரசு உத்தரவை கடைபிடிக்காமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன் பேசிக்கொண்டு சென்றார். கடுமையான போக்குவரத்து பாதிப்பு உள்ள சாலையில் அரசு பஸ்சை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர். மேலும், நிரந்தர போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயங்கி வரும் நிலையில், பஸ் இயங்கினால் போதும் என்ற நிலைப்பாட்டில் அதிகாரிகள் இருப்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது. உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்ட அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

    திருப்பூர்:

    தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்ட சிறப்பு அரசு பேருந்து இன்று காலை சுமார் 6 மணி அளவில் திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையம் வந்தடைந்தது. முருகேசன் என்பவர் பேருந்தை ஓட்டி வந்தார். திருப்பூர் கோவில் வழி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ் டெப்போவிற்கு பேருந்தை எடுத்து சென்றுள்ளார்

    அப்போது அதிவேகமாக வந்த பேருந்து திருப்பூர் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த ரோட்டின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் இல்லை. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் விபத்து ஏற்பட்ட அரசு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டயர் கழன்று ஓடி அருகில் உள்ள கால்வாயில் விழுந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் 30 பேர் உயிர் பிழைத்தனர்.

    பழனி:

    கரகாட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் தனது குழுவினருடன் காரில் செல்லும்போது ஒரு டயர் முன்பாக உருண்டு செல்லும். அப்போது நமது கார் முன்பாக சிறுவன் டயர் ஓட்டி விளையாடுகிறான் என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது காரின் சக்கரம்தான் கழன்று ஓடுகிறது என பின்னால் தெரியவரும். தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் பழனியில் இன்று நடந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று காலை 10.15 மணியளவில் பழனி பஸ் நிலையத்திலிருந்து தீர்த்த கவுண்டர் வலசு கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அரசு பஸ் அமர பூண்டி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.

    தொடர்ந்து கழன்று ஓடிய சக்கரம் சாக்கடை கால்வாயில் விழுந்தது. சக்கரம் கழன்று ஓடியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் பின்னர் வேறு பஸ்சில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் தரமற்ற அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல், பன்றிமலை, ஆடலூர், பெரும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு தரமற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. மேலும் சில பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் பயணிகளே இறங்கி தள்ளினால்தான் நகரும் நிலை ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் இதுபோன்ற அவலம் தொடரும் நிலையில் இனிமேலாவது தரமான அரசு பஸ்களை இயக்க பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    ×