என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் விபத்து"

    • புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அலிமா பிபி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் அனீஸ் (வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த முகமது இம்ரான் (29) என்பவருக்கும் கடந்த மாதம் 28-ந்தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

    புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர். இங்கு குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவதற்காக புதுமண தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பள்ளக்காட்டுப்புதூர் அருகே சென்றபோது அனீசின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் நடுரோட்டில் கீழே விழுந்தார்.

    அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அங்கிருந்து மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமாகி 20 நாட்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்லடம் அருகே கன்டெய்னர் லாரி சாலையில் நின்றவர்கள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி ஒன்று திடீரென சாலையில் நின்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    அவர்கள் இருவரும் கன்டெய்னர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பல்லடத்தில் கன்டெய்னர் விழுந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    பல்லடம் விபத்தில் உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மிபாளையம் பிரிவில் இருந்து அய்யம்பாளையம் ரோட்டுக்கு செல்வதற்காக தனியார் பனியன் நிறுவன பேருந்து இன்று காலை கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பனியன் நிறுவன பேருந்து மீது பின்பக்கமாக மோதியது.

    இதனால் நிலை தடுமாறி அருகே உள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. பனியன் நிறுவன பேருந்தில் இருந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் பனியன் நிறுவனத்தைச் சேர்ந்த சரஸ்வதி, புவனேஸ்வரி, மாடசாமி, செல்வராஜ் உள்பட 27 பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மடத்துக்குளம் கணியூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (32). கூலித் தொழிலாளியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் செல்லபாண்டியன் (30) என்பவருடன் தனது வீட்டில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    உடுமலை பழனி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே உடுமலையிலிருந்து பழனி நோக்கி பாலச்சந்திரன் (32) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிர் இழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது 3 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேனின் அடியில் சிக்கி பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47), சரோஜா (50), தமிழரசி (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி (48) காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள பாப்பினி பச்சாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு திதி கொடுக்க கொடுமுடிக்கு செல்ல உறவினர்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி சந்திரனின் உறவினர்களான பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (வயது 47), அதே ஊரை சேர்ந்த சரோஜா (50), காங்கயம்பாளையத்தை சேர்ந்த தமிழரசி (17), பூங்கொடி (48), குமரன் (50), வளர்மதி (26), இந்துமதி (23), காயத்ரி (12) உள்பட 34 பேர் ஒரு வேனில் பச்சாபாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நேற்று காலை சென்றனர். அந்த வேனை நத்தக்காட்டுவலசை சேர்ந்த அருண்குமார் (30) என்பவர் ஓட்டிச்சென்றார். அங்கு திதி கொடுத்துவிட்டு மீண்டும் அதே வேனில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அந்த வேன் முத்தூர் - காங்கயம் சாலை வாலிபனங்காடு பஸ் நிறுத்தம் அருகில் வந்தது. அப்போது எதிரே கேரள மாநிலத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் வேன் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனின் அடியில் சிக்கி பச்சாபாளையத்தை சேர்ந்த கிட்டுசாமி (47), சரோஜா (50), தமிழரசி (17) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட பூங்கொடி (48) காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 30 பேரை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு, கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தில் படுகாயமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனி(50), வளர்மதி (26), இந்துமதி, (23) மற்றும் காயத்ரி (12) ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 4 பேர் பலியான சம்பவத்தால் பாப்பினி பச்சாப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    • தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராதா. இன்று காலை ராதா அவரது குழந்தையை திருப்பூர் கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே தனியார் பள்ளி பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராதா பஸ்சின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். சக்கரம் ஏறி இறங்கியதில் ராதா சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியானார்.

    இதையடுத்து பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனிடையே அங்கு திரண்டு வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தப்பியோடிய டிரைவரை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த ராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைமறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ராதாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ராதாவின் உறவினர்கள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி பஸ் மோதி இளம்பெண் பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
    • தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59), விவசாயி. இவர் அவரது உறவினர் ராமசாமி(61) என்பவருடன் காங்கயத்திற்கு சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் முள்ளிப்புரத்திற்கு புறப்பட்டனர்.

    காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ், ராமசாமி உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்ததும் எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் விவசாயி உள்பட 2பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர்.
    • பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பிச்சாகவுண்டன்புதூர் அருகே இன்று காலை 5 மணிக்கு காங்கேயத்தில் இருந்து பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30 பயணிகள் பயணம் செய்தனர். இதனை சுரேஷ் (41) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதுபோல் கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதனை விஜயகுமார் (44) என்பவர் ஓட்டி வந்தார்.

    2 அரசு பஸ்களும் காங்கயம் கோவை சாலையில் சென்று கொண்டிருந்தன. இந்த நிலையில் பிச்சாகவுண்டன்புதூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் பல்லடம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு நின்றது.

    அப்போது பின்னால் கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் திடீரென, டவுன் பஸ் மீது மோதியது. அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ் கோவை பஸ்சின் பின்புறம் மோதியது. இதில் அரசு டவுன் பஸ், கோவை பஸ்சின் பின்பகுதி, மற்றொரு அரசு பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அலறி அடித்து கீழே இறங்கினர். பஸ் மோதியதில் ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதில் 5 பெண்கள் அடங்குவார்கள். இந்த சம்பவம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காங்கேயம் அருகே அதிகாலை நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    • போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
    • விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் காலை உடல் பயிற்சி செய்வது வழக்கம்.

    இன்று காலை வழக்கம் போல் உடற்பயிற்சி செய்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குமரன் ரோடு எம்ஜிஆர்., சிலை அருகே செல்லும் போது, குமரன் ரோட்டை கடந்து பார்க் ரோடு வழியாக செல்ல முயன்றார். அப்போது குமரன் ரோட்டில் இருந்து பழைய பஸ் நிலையம் நோக்கி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார். இதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.

    வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் திடீரென தேவானந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகள்கள் கனிஷ்கா(வயது 11), சஷ்விகா(7). இவர்கள் ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    இவர்களை தினமும் அவரது தாத்தா பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். அது போல் இன்று காலை 2பேரையும் அவரது தாத்தா மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார். பல்லகவுண்டம்பாளையம் சாலையில் செல்லும் போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். பள்ளி குழந்தைகள் கனிஷ்கா, சஷ்விகாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய 2பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான குழந்தைகள் 2பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த குழந்தைகளின் தாத்தாவையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    லாரி மோதி பள்ளி குழந்தைகள் 2பேர் பலியான சம்பவம் ஊத்துக்குளி பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மகள், குழந்தைகளை பார்த்து விட்டு இன்று வீடு திரும்பினார். லட்சுமியை மருமகன் தனசேகர், தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார்.

    இவர்கள் செல்லாண்டி அம்மன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே சென்ற போது சாலையில் இருந்த மண்ணில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சரிந்து சாலையோரம் இருந்த குப்பைத்தொட்டி மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி லட்சுமி சாலையின் நடுவே விழுந்தார். அப்போது மாடுகள் ஏற்றி கொண்டு வந்த லாரி ஒன்று, லட்சுமி மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

    தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பூர் தெற்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×