என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமணமாகி 20 நாளில் நிகழ்ந்த சோகம்- மோட்டார் சைக்கிளில் சேலை சிக்கி புதுப்பெண் நடுரோட்டில் விழுந்து பலி
- புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர்.
- முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு, விஜயாபுரத்தைச் சேர்ந்தவர் அக்பர் அலி, ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது மனைவி அலிமா பிபி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மூத்த மகள் அனீஸ் (வயது 25). இவருக்கும் மதுரையை சேர்ந்த முகமது இம்ரான் (29) என்பவருக்கும் கடந்த மாதம் 28-ந்தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
புதுமண தம்பதியினர் கடந்த 7-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்துக்காக திருப்பூர் வந்தனர். இங்கு குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடினர். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரில் பொருட்கள் வாங்குவதற்காக புதுமண தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பள்ளக்காட்டுப்புதூர் அருகே சென்றபோது அனீசின் சேலை மோட்டார் சைக்கிளின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் நடுரோட்டில் கீழே விழுந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை அங்கிருந்து மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருப்பூர் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 20 நாட்களில் புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






