

தாராபுரம்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 5 சொகுசு வேன்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை கோவை ஈஷா யோகா மையத்துக்கு புறப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலைக்கடை பகுதியில் செல்லும் போது ஒரு வேனின் டிரைவர் சீர்காழியை சேர்ந்த விஜய் (வயது 38) என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரமுள்ள வயலுக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணித்த சரோஜா, பத்மா, அரிய முத்து, மது, சுமதி, சரோஜினி உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த விவசாயி ஒருவர் உடனடியாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 20 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.