என் மலர்
நீங்கள் தேடியது "பணம் பறிமுதல்"
- ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
- பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினந்தோறும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது அதனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது கட்டுகட்டாக பணம் இருந்தது.
இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக 57 வயது மதிக்கத்தக்க நபரையும் பணத்தையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது போலீசார் பணத்தை எண்ணியபோது ரூ.35 லட்சம் இருந்தது என தெரிய வந்தது. மேலும் இந்த நபர் குறித்தும், பணம் எங்கு கொண்டு செல்கிறார்கள்? என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணம் கணக்கில் காட்டாத பணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வருமான வரித்துறை அதிகாரிக்கும் தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சமீப காலமாக கடலூர் வழியாக லட்சக்கணக்கில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கீரனூர் சோதனை சாவடியில் போலீசார் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதியில் இருந்து வெளிமாநில மதுபானம் கடத்தி வரப்படுகிறதா? என்பது குறித்து தினசரி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் பயணித்த பயணி ஒருவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பணத்தை கைப்பற்றி அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் கோலாலம் பள்ளம் பகுதியை சேர்ந்த முகமது யூனுஸ் என்பதும், அவரிடம் ரூ.20 லட்சத்தை திருவாரூரை சேர்ந்த நபர் ஒருவர் கொடுத்து அனுப்பியதும் தெரியவந்தது.
மேலும் முகமது யூனுஸ் வீட்டிற்கு வந்து ஒருவர் குறியீடு ஒன்றை வழங்குவார் என்றும், அதனை பெற்றுக்கொண்டு அந்த நபரிடம் பணத்தை தர வேண்டும் என்றும் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து முகமதுயூனுசை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
- ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் போலீசார் சோதனை பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில் பஸ்சை நிறுத்தி போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர்.
அப்போது வாலிபர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டலாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பண்டல்களை பிரித்து சோதனை செய்தனர்.
இதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த வாலிபரையும் பண்டல்களையும் பறிமுதல் செய்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் அந்த வாலிபரை விசாரித்தனர். அப்போது அவரது பெயர் நவீன் அன்வர்(வயது 30) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையில் ரூ.40 லட்ச ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத கருப்பு பணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வருமான வரித்துறையினர் நேரில் வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது
- கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.
- கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'எம்புரான்' திரைப்படம் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை நினைவு கூரும் வகையிலும், இந்துக்கள் குறித்தும் இந்த திரைப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்கு இந்து அமைப்புகளிடம் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இந்த திரைப்படத்தை 4 தயாரிப்பாளர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கோகுலம் நிதி நிறுவன அதிபர் கோகுலம் கோபாலகிருஷ்ணனும் ஒரு தயாரிப்பாளர் ஆவார். இவருடைய கோகுலம் நிதி நிறுவனத்தின் கிளைகள் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு வரி ஏய்ப்பு புகாரில் சிக்கியது.
அதன்பேரில் அப்போது இந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,100 கோடி வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அலசி ஆராய்ந்தனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறைக்கு வருமான வரித்துறை சார்பில் தகவல் பரிமாறப்பட்டதாக தெரிகிறது.
கோபாலகிருஷ்ணன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இந்த புகாரின் அடிப்படையில் அவருடைய கொச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கி வரும் கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நீலாங்கரையில் உள்ள கோபாலகிருஷ்ணனின் இல்லமும் அமலாக்கத்துறை சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.
கேரளாவில் இருந்து வந்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் கோகுலம் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
- திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- முறைகேடு செய்து ஈட்டியதா என்று விசாரணை.
திண்டுக்கல்:
டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் நேற்று திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில்வே எஸ்.பி. ராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தனிப்பிரிவு காவலர் மணிவண்ணன் கொண்ட போலீசார் அந்த ரெயிலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவை சேர்ந்த நவநீத கிருஷ்ணன் (வயது 48) என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில் ரூ.13 லட்சத்து 77 ஆயிரத்தி 900 பணம் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது தான் வெளிநாட்டு பணத்தை மாற்றி தரும் பணியில் இருப்பதாகவும், அதற்காக கமிசன் பெற்று வருவதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்த பணத்தை தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய எந்த ஆவணங்களும் அவரிடம் இல்லை.
இதனையடுத்து அந்த பணத்தை திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் நவநீத கிருஷ்ணனை கைது செய்து இந்த பணம் உண்மையிலேயே வெளிநாட்டு பணத்தை மாற்றிக் கொடுத்ததில் கிடைத்ததா? அல்லது முறைகேடு செய்து ஈட்டியதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
- மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
- ஹவாலா பணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராயபுரம்:
சென்னை, வடக்கு கடற்கரை போலீசார் இன்று காலை பாரிமுனை ராஜாஜி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பையில் கட்டு கட்டாக பணம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் ரூ.70 லட்சம் ரொக்கம் இருந்தது.
விசாரணையில் அவர், மண்ணடியை சேர்ந்த சகாபுதீன்(54) என்பதும், பர்மா பஜாரில் வியாபாரம் செய்து வருவதும் தெரிந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான எந்த ஆவணமும் இல்லை.
இதையடுத்து ரூ.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை எங்கிருந்து? யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஹவாலா பணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விசாரித்து வருகின்றனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
- வாகன சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் ரொக்க பணம், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பரிசுப்பொருட்கள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 4 நிலை கண்காணிப்பு குழுவினர், 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து போலீசாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 20-ந் தேதி முதல் நேற்று வரை 10 பேரிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.13 லட்சத்து 49 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தப் பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
இது தவிர போலீசார் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 17 ஆயிரத்து 610 ரூபாய் மதிப்பிலான 25,560 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேப்போல் 4,800 ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் அவினாசி-திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- அவினாசி போலீசார் அந்த நபரை ரூ.40 லட்சத்துடன் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், அவினாசி மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார் அவினாசி-திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் அவினாசிலிங்கம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. அப்போது அந்த பஸ்சில் இருந்து இறங்கிய ஒரு நபர் பாலத்தின் ஓரமாக நின்று செல்போனில் பேசினார். சிறிது நேரத்தில் மற்றொரு நபர் அங்கு வந்தார்.
இவர்களை மதுவிலக்கு போலீசார் கண்காணித்து சந்தேகத்தின் பேரில் அவர்களின் அருகே சென்றனர். அப்போது அங்கு வந்த நபர் போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து பஸ்சில் இருந்து இறங்கிய நபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 4 பொட்டலங்கள் இருந்தன. அவற்றைப் பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த மதுவிலக்கு போலீசார் அவரை அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது மொத்தம் ரூ.40 லட்சம் இருந்தது. அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அவினாசி போலீசார் அந்த நபரை ரூ.40 லட்சத்துடன் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் ராஜஸ்தானை சேர்ந்த கமராம் கும்கர் (வயது 48) என்று தெரியவந்தது. இவர் ஆந்திராவில் பிரகாஷ் என்பவரது டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து ரூ.40 லட்சத்தை வாங்கி வந்துள்ளார்.
அந்த பணத்தை திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவன உரிமையாளரிடம் கொடுக்க வந்துள்ளார். போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தது சங்கரராம் கும்கா என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து வருமான வரித்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தப்பணம் ஹவாலா பணமா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
- தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
வட மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் கஞ்சா போதை பொருட்கள் மற்றும் தங்கம் வெள்ளி போன்றவை கடத்தப்படுகிறது.
இதனை தடுக்க ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் தினமும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து கோவை, கேரளா, பெங்களூர் செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் பயணிகள் விரைவு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அதில் காட்பாடி ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
பி3 பெட்டியில் கோவையை சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் பயணம் செய்தார். அவர் வைத்திருந்த பையில் 2 கிலோ 728 கிராம் தங்கம் மற்றும் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க இருந்தது.
இதனை அவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கம் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவற்றை வேலூர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆனந்தனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது
- முகேஷிடம் விசாரித்தபோது சென்னை சென்றதாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி, சேலம், திருக்கோவிலூர் சென்று பின்னர் விழுப்புரம் வந்ததாக தெரிவித்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. இங்கு கேஷியராக விழுப்புரம் அருகே உள்ள இளங்காட்டை சேர்ந்த முகேஷ் (30) பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் வங்கி பணம் ரூ.43 லட்சத்து 89 ஆயிரத்துடன் மாயமானார். இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து வங்கி கேஷியரை தேடி வந்தனர். இந்த நிலையில் கேஷியர் முகேஷ் தன்னை ஒரு கும்பல் கடத்தி விட்டதாக வாட்ஸ் அப் ஆடியோவை உறவினர் ஒருவருக்கு அனுப்பி இருந்தார்.
அவரது செல்போனை ஆய்வு செய்தபோது சென்னை திருவான்மியூரில் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை விரைந்து சென்றனர்.
மேலும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் முகேஷ் நின்று கொண்டிருந்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ. 90 ஆயிரத்தை மட்டும் அவர் உறவினர் ஒருவருக்கு அனுப்பி இருப்பது தெரிய வந்தது.
முகேஷிடம் விசாரித்தபோது சென்னை சென்றதாகவும், அங்கிருந்து கிருஷ்ணகிரி, சேலம், திருக்கோவிலூர் சென்று பின்னர் விழுப்புரம் வந்ததாக தெரிவித்தார்.
அவரை யாராவது கடத்தி சென்று விடுவித்தார்களா? அல்லது கடத்தல் நாடகம் ஆடினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி பஸ்சில் பணம் கொண்டு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
களியக்காவிளை:
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு உரிய ஆவணங்கள் இன்றி பஸ்சில் பணம் கொண்டு செல்வதாக கேரள போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் வினோஜ் தலைமையிலான போலீசார் கொற்றாமம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சொகுசு பஸ் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். பஸ்சில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார். வாலிபர் கையில் பேக்கும் வைத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.
சந்தேகமடைந்த போலீசார் பேக்கை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அந்த பேக்கை பறிமுதல் செய்தனர். வாலிபரையும் கைது செய்து, அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பேக்கை சோதனை செய்தபோது அதில் ரூ.22 லட்சம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் பணம் குறித்த விவரங்களை வாலிபரிடம் கேட்டறிந்தனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.
பிடிபட்ட வாலிபர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜ பிரவீன் குமார் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சொகுசு பஸ்சில் கத்தை கத்தையாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






