search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hawala money"

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராயபுரம்:

    பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் ஆட்டோ டிரைவரான இவர் மாதவரம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு 3 வாலிபர்கள் செங்குன்றம் எட்டயபாளையத்திற்கு செல்வதற்காக இவரது ஆட்டோவில் பயணம் செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் மீது ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வால்டாக்ஸ் ரோட்டில் ஆட்டோவை நிறுத்திவிட்டு எதிரே உள்ள யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது ஆட்டோவில் சந்தேகம் படும்படி 3 பேர் உள்ளனர் என்று தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்களது பெயர் யாசின், தாவூத், பைசூலா என்பது தெரியவந்தது. 3 பேரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு காரில் வந்துள்ளனர்.

    அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது ரூ. 1 கோடி பணம் இருந்தது. இது பற்றி விசாரித்த போது இவர்கள் முதலாளியான முகமத் என்பவர் எட்டயப்பாளையத்தில் உள்ள தத்தா என்பவரி டம் கொடுக்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

    இந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணம் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹவாலா பணம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.
    • வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    அவினாசி:

    திருப்பூா் மாவட்டம் பழங்கரை பிரிவு அருகே அவிநாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதா வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

    அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த 2பேர் பழங்கரை பிரிவு அருகே இறங்கினா். இதையடுத்து, போலீசாா் அவா்கள் இருவரும் கொண்டு வந்த கைப்பைகளில் சோதனை நடத்தினா். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 1 கோடி இருந்தது தெரியவந்தது. அப்பணத்துக்கு அவா்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.

    விசாரணையில் அவா்கள் வேலூா், சைதாப்பேட்டையை சோ்ந்த ஆரீப் (வயது 47), பொன்னியம்மன் நகரை சோ்ந்த அப்துல் காதா் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.1 கோடியை பறிமுதல் செய்த அவிநாசி போலீசார் அதனை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். அந்த பணம் ஹவாலா பணமா? என வருமான வரித்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளா வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு ரெயில் சென்று வருகிறது.

    இந்த ரெயில் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரெயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    அந்த ரெயில் பாலக்காடு ரெயில் நிலையம் வந்த போது, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த ஒருவரது நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததால் போலீசார் அவரை சோதனைக்கு உட்படுத்தினர்.

    அப்போது அவர் தனது இடுப்பில் துணியால் பணத்தை கட்டி மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் வைத்திருந்த ரூ.17 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் கருதினர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பணத்தை கொண்டு வந்தவர் கோட்டயம் மாவட்டம் ஈராற்று பேட்டையை சேர்ந்த முகமது ஹாஷிம் (வயது 52) என்பதும், சேலத்தில் இருந்து அங்கமாலிக்கு பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருப்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.21.35 லட்சம் ஹவாலா பணம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கேரள கலால் பிரிவு ஆய்வாளர் ராகேஷ் தலைமையிலான தனிப்படையினர் பொள்ளாச்சி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு கார் கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது. அதனை அதிகாரிகள் மறித்த போதும் நிற்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கலால் பிரிவு அதிகாரிகள் காரினை பின் தொடர்ந்து சென்றனர்.

    பின்னர் குருடிக்காடு என்ற இடத்தில் காரினை மடக்கினர். தொடர்ந்து அதிகாரிகள் காரில் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரகசிய அறை அமைக்கப்பட்டு அதனுள் கட்டுக்கட்டாக ரூ.21.35 லட்சம் ஹவாலா பணத்தினை பதுக்கி வைத்தி ருந்தது கண்டுபிடிக்கப்பட் டது.

    இந்த சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, காரில் வந்த நபர் தனது செல்போனை உடைத்து ஆவணங்களை அழிக்க முயன்றார். அதனை தடுத்து அதிகாரிகள் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் தங்க பிஸ்கட்டுகள், தங்க ஆயில் ஆகியவற்றின் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் காரில் வந்த பாஜீவ்ராவ் (வயது 19). சுமித் ஜாவீர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தங்க ஆபரணங்கள் தயாரித்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    மேலும் துபாயில் இருந்து கோழிக்கோட்டிற்கு விமானத்தில் தங்க கட்டிகளை கடத்தி வந்து, அதனை கோவையில் உள்ள பிரபல நகை கடையில் விற்றுள்ளனர். நகை விற்ற பணத்தினை காரில் கடத்தி சென்றபோது தான் கலால் துறை அதிகாரிகளிடம் இருவரும் சிக்கியுள்ளனர்.

    கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற ரூ.88 லட்சம் ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கோவை உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் திருத்தாலா இன்ஸ்பெக்டர் சித்தரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.

    சித்தரஞ்சன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டாம்பி பஸ் நிலையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் ரகசிய அறை அமைத்து அதில் ரூ.88 லட்சம் ஹவாலா பணம் கடத்தி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் ஹவாலா பணம் கடத்திவந்த பட்டாம்பியை சேர்ந்த தனஞ்செயன் (வயது 24) என்பதும், கோவை உக்கடத்தில் இருந்து மலப்புரத்துக்கு கடத்திச் செல்வதாகவும் கூறினார். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
    கோவை:

    கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.

    ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.

    அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.

    இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
    பரமக்குடி ரெயில் நிலையத்தில் ரூ.37 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பரமக்குடி:

    மதுரையில் இருந்து இன்று காலை வழக்கம் போல் பயணிகள் ரெயில் மண்டபத்துக்கு புறப்பட்டது. காலை 9 மணிக்கு ரெயில் பரமக்குடி வந்தடைந்தது. அப்போது ரெயிலில் இருந்த மர்ம நபர்கள் தங்களிடம் இருந்த ஒரு பையை பிளாட் பாரத்தில் வீசினர். ரெயில் சென்றுவிட அந்த பை கேட்பாரற்று கிடந்தது.

    ரெயில் நிலையம் வந்த மோசஸ் என்பவர் அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் 2000, 500 ரூபாய் கட்டுகள் என ரூ.37 லட்சத்து 26 ஆயிரம் இருந்தது.

    உடனே மோசஸ் அந்த பையை அங்கிருந்து எடுத்துக்கொண்டு ரெயில் நிலையத்திற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் மோசஸ்சிடம் இருந்த பணப்பை தங்களுடையது என கூறினர். ஆனால் மோசஸ் தர மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதற்கிடையில் பரமக்குடி நகர் போலீசாருக்கு பணம் சிக்கியது தொடர்பாக தகவல் கிடைத்தது. சப்- இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பணப் பையை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த கும்பலையும், மோசசையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு விசாரணை நடத்தியதில் பணத்துக்குரிய எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. மேலும் பணம் தங்களுடையது என கூறிய தகவல்களும் நம்ப தகுந்தவையாக இல்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விசாரணை நடத்தி பின்னர் யாருடையது? எதற்காக கடத்தப்பட்டது? ஹவாலா பணமா? என விசாரித்து வருகிறார்கள்.

    சென்னையில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கடத்தல் தங்கம் 7 கிலோ, ஹவாலா பணம் ரூ.11 கோடி சிக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். #HawalaMoney #Seized
    அடையாறு:

    சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அது கை மாற்றப்பட இருப்பதாகவும் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அந்த பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை குறிப்பிட்ட அந்த நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறையில் சாதாரண வாடிக்கையாளர்கள்போல் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது தொழில் அதிபர் ஒருவர் பெரிய தோல் பை ஒன்றை எடுத்துக்கொண்டு கார்கள் நிறுத்தும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அதைக்கண்ட அதிகாரிகள் அவரை சுற்றி வளைத்து அவரிடம் இருந்த பையை சோதனையிட்டனர். அதில் தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் தங்க கட்டிகளை அவர் அதே ஓட்டலில் ஒரு அறையில் தங்கியிருக்கும் தென்கொரியாவைச் சேர்ந்த 2 பேரிடம் இருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட அறைக்குச் சென்ற அதிகாரிகள் வெளிநாட்டினர் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

    அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் ஹாங்காங்கில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்ததையும், கடந்த புதன்கிழமை இரவுதான் விமானம் மூலம் சென்னைக்கு வந்து, மயிலாப்பூர் ஓட்டலில் அறை எடுத்து தங்கியதையும் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து, மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தொழில் அதிபருக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் மற்றும் அவருடைய ஊழியர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைகளில் மொத்தம் ரூ.11 கோடியே 16 லட்சம் ஹவாலா பணமும், 7 கிலோ தங்க கட்டிகளும் பிடிபட்டது. தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடியே 20 லட்சம் ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொழில் அதிபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் இதுபோன்று ஏற்கனவே தங்கம் கடத்தலிலும், மேலும் ஹவாலா பண பரிமாற்றத்திலும் பலமுறை ஈடுபட்டுள்ள திடுக்கிடும் தகவலும் தெரிய வந்தது.

    பிடிபட்ட 2 வெளிநாட்டினர், தொழில் அதிபர் மற்றும் அவரது ஊழியர்கள் இருவரையும் கைது செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney #Seized
    கடலூரில் வாகன சோதனையின் போது கைப்பற்றிய ஹாவாலா பணத்தை மறைத்து வைத்த 3 ஏட்டுகளை டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கடலூர்:

    கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் கடந்த ஆண்டு வேப்பூர் போலீஸ் நிலைய ஏட்டு ரவிக்குமார், கம்மாபுரம் போலீஸ் நிலைய ஏட்டு செல்வராஜ், சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலைய ஏட்டு அந்தோணிசாமிநாதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி பஸ்சை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த பஸ்சில் வந்த ஒருவர், கொண்டு வந்திருந்த பையில் ரூ.50 லட்சம் ஹவாலா பணம் இருந்தது.

    ஆனால் அந்த பணத்தை கைப்பற்றிய போலீஸ் ஏட்டுகள் 3 பேரும் ரூ.20 லட்சத்தை எடுத்து அங்குள்ள புதரில் மறைத்து வைத்தனர். மீதி பணத்தை மட்டும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக பணத்தின் உரிமையாளர் புகார் செய்தார். இதையடுத்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பணம் மீட்கப்பட்டது. பணத்தை மறைத்து வைத்தது தொடர்பாக போலீஸ் ஏட்டு ரவிக்குமார் உள்பட 3 பேர் மீதும் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடந்தது. இதில் 3 ஏட்டுகளும் கூட்டாக சேர்ந்து பணத்தை எடுத்து மறைத்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர்கள் 3 பேரையும் டிஸ்மிஸ் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடவடிக்கை எடுத்துள்ளார். #tamilnews
    கோவையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ. 2.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. #HawalaMoney

    கொழிஞ்சாம்பாறை:

    கோவையில் இருந்து கேரள மாநிலத்துக்கு ஹவாலா பணம் கடத்தி செல்லப்படுவதாக பாலக்காடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்நது கோவை - பாலக்காடு- மலப்புரம் மாவட்ட எல்லைகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்றது.பாலக்காடு பட்டாம்பி அருகே உள்ள குலுக்கல்லூரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது ஒற்றப்பாலம்- செர்புளச்சேரி-கொப்பம் வழியாக மலப்புரம் நோக்கி ஒரு மாருதி கார் வந்தது. அதனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையின் போது கார் ஹேண்ட் பிரேக்கினுள் அமைத்த ரகசிய அறைக்குள் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். எந்தவித ஆவணங்களும் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 2 கோடியே 40 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.


    இது தொடர்பாக மலப்புரம் மாவட்டம் கல்பகஞ்சேரியை சேர்ந்த முகமது தஸ்லீக் (26), சையத் சிஹாபுதீன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் கோவையை சேர்ந்த கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மலப்புரம் கல்பகஞ்சேரியை சேர்ந்த பாசில் என்பவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு கோவையில் இருந்து மலப்புரத்துக்கு இந்த பணம் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இது தொடர்பாக கோவையை சேர்ந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். #HawalaMoney

    ×