search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பஸ் நிலையத்தில் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்- வடமாநில முதியவர் கைது
    X

    பறிமுதல் செய்யப்பட்ட ஹவாலா பணம்.

    பஸ் நிலையத்தில் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்- வடமாநில முதியவர் கைது

    • முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.
    • பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மதுபானங்கள் கடத்திச் செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதை தடுக்க புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் அவ்வப்போது சோதனை நடத்துவது வழக்கம்.

    அதன்படி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல தயாராக இருந்த பஸ்சில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது முதியவர் ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

    ஆனால் அந்த முதியவர் தனது பையில் துணிகள் மட்டுமே இருப்பதாக கூறி போலீசாருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பையை வலுக்கட்டாயமாக திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி அவரிடம் கேட்ட போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பீம்சிங் (வயது70) என்பதும், புதுவை அண்ணா சாலையில் செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பணத்திற்கு எந்தவித வரவு-செலவு கணக்கும் இல்லை.

    எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

    இதுகுறித்து போலீசார், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.70 லட்சத்தையும் கைப்பற்றியதுடன், பீம்சிங்கையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி நூறடிசாலையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது வணிக வரித்துறை அதிகாரிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல் நேற்று முன்தினமும் புதுச்சேரியில் 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

    இந்த நிலையில் புதுவையில் தற்போது ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×