search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election"

    • தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.
    • அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கணினி முறையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரிக்கப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சென்னையில் 3 தொகுதிகளுக்கும் 11,843 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 4469 கட்டுப்பாட்டு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. நாளை காலையில் ஒவ்வொரு தொகுதிக்கும் எந்தெந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடி வாரியாக அனுப்புவதற்கு குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகிறது.

    3,726 வாக்குச் சாவடிகளுக்கும் ஜி.பி.எஸ். கருவி பொருத்திய வாகனத்தில் எந்திரங்கள், பிற உபகரணங்கள், பொருட்கள் அனுப்பப்படுகின்றன. தேர்தல் பணியில் 19,419 அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து பணிகளும் இரவு பகலாக நடந்து வருகிறது. தேர்தல் நடத்த தயார் நிலையில் இருக்கிறோம். 19-ந்தேதி வாக்களிக்க பொதுமக்கள் தயாராக வர வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பு மக்கள், ஏழை-எளிய மக்கள் எளிதாக ஓட்டுப்பதிவு செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    காவல் துறையுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது. பதட்டமான 708 வாக்குச் சாவடிகளில் கூடுதலாக போலீஸ் குவிக்கப்படுகிறது. அனைத்து வாக்குச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 65 சதவீத வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தலை சுமூகமாக நடத்த 708 நுண் பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்காணித்து அறிக்கை தருவார்கள். வாக்குச் சாவடி மையங்களில் பந்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் இருந்தாலும் காத்திருந்து பதிவு செய்யுங்கள். வாக்களிப்பில் நமது கடமை, உரிமை.

    வாக்காளர்கள் 12 வகையான அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பொதுமக்களுக்கு உதவ "பெசிலிட்டி பூத்" ஒன்று அமைக்கப்படுகிறது. உங்கள் பெயரை சொன்னால் போதும், எந்த பூத்தில் ஓட்டு இருக்கிறது, எங்கு ஓட்டு போடலாம் என்று விவரமாக சொல்வார்கள்.

    பூத் சிலிப் 86 சதவீதம் வீடு வீடாக கொடுக்கப்பட்டு உள்ளது. நாளை வரை கொடுப்பார்கள். நாளை மதியத்திற்கு மேல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். 899 செக்டார் ஜோனல் பார்ட்டி இதனை பாதுகாப்பாக கொண்டு போய் சேர்ப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி தந்தி டி.வி. சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 35 ஆயிரத்து 600 வாக்காளர்களிடம் மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 14-ந்தேதி வரை இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    இதில் 42 சதவீதம் பேர் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க போவதாக கூறியுள்ளனர். 34 சதவீதம் பேர் அ.தி.மு.க. கூட்டணிக்கும், 18 சதவீதம் பேர் பா.ஜ.க. கூட்டணிக்கும் வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    தந்தி டி.வி. கடந்த பிப்ரவரி மாதம் கருத்து கணிப்பு நடத்திய போது தி.மு.க.வுக்கு 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தி.மு.க.வின் செல்வாக்கு அப்படியே தொடருகிறது.

    கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க.வுக்கு 30 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அ.தி.மு.க. ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வுக்கு 13 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது பா.ஜ.க.வுக்கு 5 சதவீதம் ஆதரவு அதிகரித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகள் சரிந்துள்ளது.

    யார் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்கு 66 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும், 33 சதவீதம் பேர் மோடிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. கூட்டணி 29 தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர், அரக்கோணம், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, கிருஷ்ணகிரி, சேலம், தூத்துக்குடி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், சிதம்பரம், விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, வடசென்னை, கரூர் ஆகிய 29 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    ஈரோடு, திருச்சி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை தொகுதிகளில் கடும் போட்டிக்கு மத்தியில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க. 39 சதவீதம் முதல் 45 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 36 முதல் 42 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. 10 முதல் 16 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 5 சதவீதம் முதல் 8 சதவீத வாக்குகளையும், மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 4 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் 5 தொகுதிகளில் கடும் போட்டி காணப்படுகிறது. பா.ஜனதா கூட்டணியில் பிரபலங்கள் போட்டியிடும் வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் கடும் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, பொள்ளாச்சியில் தி.மு.க., அ.தி.மு.க. இடையே கடும் போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக பா.ஜ.க. கூட்டணி 18 இடங்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய சென்னை, அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, விருதுநகர், கடலூர், நீலகிரி, பெரம்பலூர், திருப்பூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், தென்சென்னை, வேலூர், திருநெல்வேலி, கோவை ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி கணிசமான வாக்குகளை பிரிப்பதால் மத்திய சென்னை, தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, தேனி, ராமநாதபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 3-ம் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

    தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 34 தொகுதிகளிலும், பா.ஜ.க. கூட்டணி 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 5 தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் எனவும் தெரிகிறது.

    இவ்வாறு தந்தி டி.வி. கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் பிரமுகர் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல்.
    • காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மோகன் தாஸ். காங்கிரஸ் பிரமுகரான இவர், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    இவர் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக ஏம்பலம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தநிலையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு காங்கிரஸ் பிரமுகர் மோகன் தாஸ் பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து கிருமாம்பாக்கத்தில் உள்ள மோகன்தாஸ் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் காரில் வந்தனர். அவர்கள், மோகன் தாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    அப்போது அங்கு மோகன் தாஸ் இல்லை. அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது தாயார் மட்டும் வீட்டில் இருந்தார். அவரிடம், சோதனையிட வந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதை அறிந்த மோகன் தாஸ் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அவரது முன்னிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். மேலும் அவரிடம் தொழில் தொடர்பான ஆவணங்களின் விவரங்களை கேட்டறிந்தனர். அதன் பின் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    இந்த சோதனையின் முடிவில் பணமோ, ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன் வைத்திலிங்கம் எம்.பி.யின் உறவினர் வீடுகளில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி:

    நாளை மறுநாள் (19-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேசமணி நகரை சேர்ந்த ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகியாக உள்ள பொன் கற்பகராஜ் (வயது33) என்பவர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து நேசமணி நகர் சந்திப்பில் வைத்து பொன் கற்பக ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 432 மது பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து பொன் கற்பக ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
    • தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லூர் சாலையில் டிரெண்ட் சிட்டி என்ற தனியார் லே அவுட்பகுதி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.

    கடந்த ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல முறை புகார் எழுப்பியும் யாரும் கண்டு கொள்ளவில்லை என இப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    எனவே எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தர யாரும் முன்வராததால், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து நோ ரோட், நோ வோட் " என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள் என பகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

    • எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.
    • மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து பழங்காநத்தம், மாடக்குளம், சம்பட்டிபுரம், முடக்குச்சாலை, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பழங்காநத்தம் நடைபெற்ற பிரசாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ராட்சசகிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், தி.மு.க. அரசு மீது ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித் தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் ஆகிய காரணங்களுக்காக மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடிவு விட்டார்கள்.

    வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள் என பேசினார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசுகையில், "உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து என்னை வெற்றி பெறச் செய்தால் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவேன்" என உருக்கமான பேசினார்.

    • அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.
    • சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்.

    தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வரும் மன்சூர் அலிகான் இன்று கடைசிநாள் பிரசாரத்துக்கிடையே அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    ஆள்பலம், பணபலம் இல்லாமல் தேர்தலில் நான் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். 1980-ல் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜனாப் அப்துல்சமது சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

    அதே பள்ளப்பட்டி தான் எனக்கு சொந்த ஊர். அங்கு தான் நான் படித்து வளர்ந்தேன். மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவினை கொடுத்து வருகிறார்கள். எனவே நான் சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெறுவேன். பாரதிய ஜனதாவிடம் பணம் வாங்கி கொண்டு வாக்குகளை பிரிப்பதற்காக தேர்தலில் நிற்கிறேன் என வதந்தி பரப்புகிறார்கள்.

    ஆரம்பத்தில் இருந்தே பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறேன். சுயேட்சைகள் வெற்றி பெற முடியாது என சொல்கிறார்கள். பல பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரியாக உள்ளனர். அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகக் கூடியவன் நான். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள நானா, நானி என்ற முதியோர் இல்லத்திற்கு சென்றார். அவர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூரண கும்ப மரியாதையும் அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

    நான் இங்கு உங்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக வரவில்லை. உங்களை சந்திக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன். கடந்த ஒரு வருடகாலமாகவே உங்களை சந்திக்க வேண்டும். உங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தேன்.

    இருப்பினும் என் மண், என் மக்கள் யாத்திரை, பாராளுமன்ற தேர்தல் பரப்புரை காரணமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது. இறுதிகட்ட பிரசாரமான நாளை எங்கும் செல்லக்கூடாது. உங்களை சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதன்படி உங்களை பார்ப்பதற்காகவே இன்று வந்துள்ளேன். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றொரு நாளில் உங்களை வந்து கட்டாயமாக சந்திக்கிறேன் என்றார்.

    இந்த வார்த்தையை பேசியபோது, அண்ணாமலை திடீரென கண் கலங்கி விட்டார். இதனை பார்த்த முதியோர்கள் அவரை ஆறுதல் படுத்தினர். ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பி அவருக்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினர்.

    • மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.
    • தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள்.

    கடந்த பத்தாண்டுகளில் 2014-ம் ஆண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூக நீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

    பா.ம.க. போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.


    மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு தி.மு.க. அரசு அளித்த பரிசு ஆகும். தி.மு.க. அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை. வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்பதில் இருந்தே மக்களை தி.மு.க. அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத தி.மு.க.வுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை தி.மு.க.வுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

    தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ் நாட்டில் மக்களை வாட்டும் தி.மு.க. அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளைவென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர்.
    • தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திலகபாமாவை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்பது முடிவாகி விட்டது. எனவே தமிழக மக்கள் சிந்தித்து தங்கள் வாக்கை செலுத்த வேண்டும். கடந்த தேர்தலில் தகுதி இல்லாதவரை தேர்வு செய்ததால் மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் இந்த முறையும் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து உங்கள் வாக்கை வீணடிக்க வேண்டாம்.

    காமராஜர், அண்ணா காலத்தில் நேர்மையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். அதனால் வேட்பாளர்களை பார்க்காமல் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் நிலை அப்போது இருந்தது. தற்போது நல்லவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதில்லை என்பதால் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும்.

    கடந்த 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தை நாசமாக்கி விட்டன. தாத்தா, அப்பா, கணவர், மகன், பேரன், என 5 தலைமுறையினர் மதுவுக்கும், போதைக்கும் அடிமையாகி விட்டனர். இந்த 2 கட்சிகள் ஆட்சிக்கும் முடிவு கட்ட 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம். அதற்கான முன்னோட்டம்தான் இந்த பாராளுமன்ற தேர்தல்.

    இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரசோடு தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. இது கொள்கை கூட்டணியா? எங்களைப் பார்த்து கொள்கை இல்லாத கூட்டணி என கூறுகின்றனர். தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது. இதனால் இதுவரை 800 மீனவர்கள் இறந்துள்ளனர். 6100 பேர் கைதாகி 1250 படகுகள் பறிபோய் உள்ளது. பா.ஜ.க. கச்சத்தீவு பற்றி பேசுவதை குறைகூறும் தி.மு.க., காங்கிரஸ் இதுவரை அந்த பிரச்சனையில் மவுனமாக இருப்பது ஏன்? கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடியால்தான் முடியும்.

    தி.மு.க.விற்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றனர். 34 அமைச்சர்களில் பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளனர். சி.வி.கணேசன், மதிவேந்தன், கயல்விழி ஆகிய 3 பேருக்கும் அமைச்சரவை வரிசையில் முறையே 30, 33, 34-வது இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் சமூக நீதி பேசுவதற்கான தகுதியே இல்லாதவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. சார்பில் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் ஒன்றைக்கூட மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களையும் வஞ்சித்து விட்டது தி.மு.க. அரசு. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் யார் பிரதமர் என்றே சொல்ல முடியாத அளவுக்கு பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கும் வாக்கு வீண். இந்த 2 கட்சிகளுமே சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழக மக்களிடம் தற்போது மவுன அலைவீசி வருகிறது. இது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளாக மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்.
    • தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கோவை வி.கே.கே.மேனன் சாலையில் நடந்த இந்தியா கூட்டணி கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    தேர்தலையொட்டி பிரதமர் மோடி 9 முறை தமிழகத்துக்கு வந்து இருக்கிறார். அவர் 9 முறை அல்ல, 100 முறை தமிழகம் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது.

    தமிழகம் வந்த பிரதமர் மோடி, திராவிட இயக்கத்தை அழித்து விடுவேன் என்று பேசி உள்ளார். ஒரு பெரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அந்த பதவிக்கு அழகல்ல. இந்த திராவிட இயக்கம் ரத்தம் சிந்தி தோன்றியது. ஆதிக்கவாதிகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க தோன்றிய இந்த இயக்கத்தை காப்பதற்கு பலர் தங்களது இன்னுயிர்களை சிந்தி உள்ளனர். இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள்.


    திராவிட இயக்கம் என்றால் அண்ணா தொடங்கிய தி.மு.க., எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க. தான். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. நமது நாட்டில் பிரதமர் என்ற பதவியில் பலர் இருந்துள்ளனர். பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாயும் இருந்துள்ளார். அவர் அற்புதமான தலைவர். ஆனால் தற்போது இருக்கும் பிரதமர் மோடி, ஆணவத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை.

    நாங்கள் இதுபோன்று எத்தனையோ பேரை பார்த்து விட்டோம். உங்கள் பயமுறுத்தல் எல்லாம் எங்களிடம் பலிக்காது. இங்கு அந்த கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தல் விதிகளை மீறி பேசி வருகிறார். அவர் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவருக்கு விதிமுறைகள் எல்லாம் தெரியாதா?

    தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள காலை உணவுத்திட்டம், கனடா நாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இப்படி பிற மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கடைபிடிக்கும் திட்டமாக இருக்கிறது. கோவை மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள். இது தொழிலாளர்களின் கோட்டை. எனவே நீங்கள் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×