என் மலர்
இந்தியா

தேர்தலில் முறைகேடு நடக்காமல் இருந்திருந்தால், மோடி மீண்டும் பிரதமராகி இருக்கமாட்டார்- ராகுல் காந்தி
- மிகக் குறைந்த பெரும்பான்மையுடனே இந்தியாவின் பிரதமராகியுள்ளார் மோடி.
- மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு மோசடி செய்தது
காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாடு டெல்லியில் இன்று நடை பெற்றது.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல்காந்தி இதில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் தேர்தல் ஆணையத்தை மீண்டும் கடுமையாக சாடினார். இது தொடர்பாக ராகுல்காந்தி பேசியதாவது:-
தேர்தல் முறையை பற்றி நான் சமீப காலமாகப் பேசி வருகிறேன். 2014 முதலே ஏதோ தவறு இருப்பதாக எனக்கு சந்தேகம் இருந்து வந்தது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பின்னர் மராட்டியத்தில் ஏதோ நடந்தது. பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றோம். 4 மாதங்களுக்குப் பிறகு நடை பெற்ற சட்டசபை தேர்தலில் நாங்கள் தோற்கவில்லை, அழிக்கப்பட்டோம். அங்கு 3 வலிமையான கட்சிகள் திடீரென்று காணாமல் போய் விட்டன.
மராட்டிய தேர்தல் தோல்விக்கு பிறகு தேர்தல் முறைகேடு குறித்து உன்னிப்பாக கவனிக்க தொடங்கி னோம்.
பாராளுமன்ற தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் இடையே ஒரு கோடி புதிய வாக்காளர்கள் தோன்றினார்கள். அந்த வாக்குகளில் பெரும் பகுதி பா.ஜ.க.வுக்கு சென்றது.
தற்போது எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன், எங்களிடம் ஆதாரம் உள்ளது. தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை நிரூபிக்க எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சமரசம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம். சில நாட்களில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மோசடி செய்து வெற்றி பெற்ற தற்கான ஆதாரத்தை வெளியிடுவோம். 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்.
உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. நாட்டில் தேர்தல் ஆணையம் என்ற நிறுவனம் இல்லை. மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராகி இருக்கிறார் மோடி. 15 இடங்கள் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்.
15 தொகுதி மோசடியால் பிரதமராகி விட்டார். 15 முதல் 100 தொகுதிகள் வரை முறைகேடு நடந்ததாக கருதுகிறேன்.
நான் ஒரு ராஜாவாக இருக்க விரும்பவில்லை. நான் ஒரு ராஜா என்ற கருத்துக்கு எதிரானவன் இந்த ராகுல்காந்தி.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடிக் கொண்டிருந்தபோது அருண் ஜெட்லியிடம் இருந்து எனக்கு மிரட்டல் வந்தது. போராடினால் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. யாருடம் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை என பதிலளித்தேன்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.
இந்த மாநாட்டில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்த் சிங் சுக்லா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.






