என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kodaikanal"
- ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
- ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலை பலவிதமான இயற்கை நிலைகள் அழகுபடுத்தி மெருகூட்டி பார்க்கின்றன. இதில் முக்கிய பங்களிப்பை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்கள் முதன்மை இடத்தினை பிடிக்கின்றன, பொதுவாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அதிகமான அளவில் இந்த மரங்கள் காணப்படுகிறது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த மரத்தில் உள்ள இலைகள் உதிர தொடங்கி செப்டம்பர் மாத இறுதி மற்றும் அக்டோபர் மாதத்தில் ரோஸ் நிறத்தில் பூக்கும் கானக செர்ரி மலர்கள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் பூத்து குலுங்குகின்றது.
இதன் சிறப்பு அம்சம் 2 மாதங்களில் பசுமை நிறத்தில் காணப்படும். இந்த மரத்திலுள்ள இலைகள் முழுவதும் உதிர்ந்து செர்ரிப் பூக்கள் மட்டுமே ரோஸ் நிறத்தில் கண்ணைக் கவரும் வண்ணத்தில் காட்சி அளிக்கின்றது.
மேலும் சுற்றுலாத்தலங்கள் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்களில் உள்ள மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
பசுமை போர்த்திய மலைப்பகுதிகளில் ரோஸ் நிற மலர்கள் சூடிய மலைகளின் இளவரசியாக கூடுதல் அழகாக கொடைக்கானல் காட்சியளிக்கின்றது.
இந்த செர்ரி மரங்களில் உள்ள மலர்கள் அக்டோபர் மாத இறுதியில் உதிர தொடங்கி இலைகள் துளிர்த்து பழைய நிலைக்கு திரும்பி விடும். கொடைக்கானலில் நிலவும் குளுமையான வானிலையை ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் இந்த பூக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் கழுகு பார்வை காட்சிகளால் பார்க்கும் போது ரோஸ் நிறமாக மலைப்பகுதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
- 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவடைந்துள்ளது தெரிய வந்தது.
இப்பகுதியில் எவ்வித கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ நடைபெறவில்லை. அப்படி இருக்கையில் இந்த பிளவு எப்படி உருவானது என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக எந்த தரவுகளும் இல்லை வானியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
- குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வந்தார்.
தனியார் விடுதியில் தங்கி இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வருவதை பார்த்ததும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அமைச்சரை வரவேற்றனர்.
அதன்பின் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள், வகுப்புகள், அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆசிரியர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பள்ளி வகுப்பறை, மாணவ-மாணவிகளுக்கான குடிநீர், கழிப்பிட வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் அன்பில் மகஷே் பேசியதாவது:-
உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணம் செய்யுங்கள். ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள். அப்போதுதான் உங்களுடைய பாடங்களைப் பற்றி முழுமையாக அறிய முடியும்.
எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும், ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது. உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தங்களது பள்ளி மாணவ-மாணவிகள் பல்வேறு இடங்களில் தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பதவிகளுக்கு செல்வதே அவர்களது விருப்பமாக இருக்கும். அந்த விருப்பமே அவர்களுக்கு நல்லாசிரியர் விருதாகவும் அமையும்.
மலைப் பகுதிகளில் அதிக தூரம் பயணம் செய்து படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய் சிலிர்க்கிறேன். தங்களுக்கு பஸ் பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் சீருடை அணிந்து சென்றால் பஸ்சில் பாஸ் கேட்கமாட்டார்கள் என்றார். இருந்த போதும் மாணவர்களுக்கு பஸ்பாஸ் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதனை தொடர்ந்து சிறந்த மாணவ-மாணவிகளுக்கு அப்துல்கலாம் எழுதிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பள்ளி கல்வித்துறைக்கு தேவையான பல்வேறு உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் அனைத்து துறையிலும் சாதனை படைத்தவர்களாக மாறவேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.
- கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
- கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரியும் வெளியிடப்பட்டது. கொடைக்கானலில் வாரந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் வார இறுதி நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் செல்போன் மூலமே இ-பாஸ் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக உள்ளூர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்ட மே 7ந் தேதி முதல் அக்டோபர் 15 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 62 வாகனங்களில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 206 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. மே 7ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரை 100 நாட்களில் 1 லட்சத்து 1523 வாகனங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.
நேற்று மட்டும் 6096 வாகனங்களில் 31,689 பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதி பெற்றிருந்த நிலையில் 98 வாகனங்களில் 705 பேர் மட்டுமே வருகை தந்தனர். வழக்கமாக சுதந்திரதினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது குறைந்த அளவே உள்ளனர்.
- கனமழையால் சில பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
- சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரும்பாறை:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்த கனமழை பகல் நேரத்திலும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நேற்று சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் அண்ணாசாலை, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு விட்டு விட்டு சாரல் மழையாக பெய்து வந்த நிலையில் இன்று காலை ஏரிச்சாலையில் மிகப்பெரிய மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழை கிராமங்களில் பெய்த கனமழையால் பல இடங்களில் மின் வினியோகம் தடைபட்டது.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, கே.சி.பட்டி, பாச்சலூர், பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. மேலும் பலத்த காற்றும் சுழன்று அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு பெரும்பாறை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பெரும்பாறை-தாண்டிக்குடி மலைச்சாலையில் உள்ள மூலக்கடை-கொங்கப்பட்டி இடையே இன்று அதிகாலை சுமார் 2 மணிக்கு சாலையின் குறுக்கே மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் சாலையின் இருபுறமும் பஸ், லாரி, கார் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணி வகுத்து நின்றது.
இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பரத், மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் துணை அமைப்பாளர்கள் மகாராஜன், ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் 2 அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 4 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை தடியன்குடிசையில் வேரோடு மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் பணியாளர்கள் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் அறுவை எந்திரத்தின் மூலம் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பிறகு மலைச்சாலையில் போக்குவரத்து சீரானது.
- சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து கொண்டு வந்துள்ளனர்.
- மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
கொடைக்கானல் அருகே 'பார்பிகியூ' சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பை அணைக்காததால் வெளியேறிய புகையில் மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மற்றும் சென்னையை சேர்ந்த 4 இளைஞர்கள் கொடைக்கானல் அருகே சின்னபள்ளம் செல்லும் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
அப்போது, ஜெயகண்ணன், ஆனந்த் பாபு ஆகியோர் மது அருந்திக்கொண்டே பார்பிகியூ சிக்கன் சமைத்து சாப்பிட்டுள்ளார். சமையலுக்கு தேவையான பொருட்களை திருச்சியில் இருந்து இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அடுப்பை அணைக்காமல் இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மற்றொரு அறையிலிருந்த நண்பர்கள் காலை வந்து எழுப்பியபோது இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.
சிக்கன் சமைத்த அடுப்பை அணைக்காததால் எழுந்த புகை காரணமாக இருவரும் மரணம் அடைந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
- போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
- சிறப்புக்குழு அமைத்து கடும் நடவடிக்கை.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மலை கிராமங்களில் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் மேல்மலை கிராம பகுதியில் ஒரு வாலிபர் போதை காளானை பறித்து அதில் தேன் ஊற்றி ருசிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் சிலர் போதை காளானை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
போதை காளான், கஞ்சா விற்பனையில் கும்பல் தீவிரமாக இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.
எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறப்புக்குழு அமைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 424 நாய்கள் பங்கேற்றன. பாக்ஸர், டாபர்மேன், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்செண்ட், ஆப்கான் கவுண்ட், பிகில், பொமேரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பி பாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய் இனங்கள் போட்டியில் பங்கு பெற்றன.
நாய்களின் வகைகளுக்கேற்ப 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. நாய்களின் பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன்களை தேர்ந்தெடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு வகையான நாய் இனங்கள் அணிவகுத்து சென்றது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்ததுடன், நாய் கண்காட்சியிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
- சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
- போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.
மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.
மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.
எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது.
- தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பருவகால சூழலுக்கு ஏற்றவாறு பல வகைகளில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். இந்நிலையில் தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நகர் பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் யூக்கா அலோய்போலியா என்ற கற்றாழை வகை பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன.
இந்த கற்றாழை அமெரிக்காவை பூர்விகமாக கொண்டுள்ளது. இந்த கற்றாழை மலர்கள் குளிர்ந்த வெப்பமும், தண்ணீர் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வளரும் தன்மை வாய்ந்தவை. இவ்வகை கற்றாழை செடிகளில் பூக்கும் பூக்கள் சுமார் 5 அடி முதல் 12 அடி உயரம் வரை வளரும் தன்மை கொண்டுள்ளது.
தற்போது கொடைக்கானலில் நிலவி வரும் குளிர்ந்த சூழலில் இந்த அரிய வகை (யூக்கா அலோய்போலியா) கற்றாழை பூக்கள் கொத்து கொத்தாக தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்திலும், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் நகர்ப்பகுதிகளிலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூத்து குலுங்குகின்றன. இவை பார்ப்பதற்கு தாமரை பூ வடிவில் இருப்பது அதன் மற்றொரு சிறப்பம்சமாகும். பொதுவாக மண் அரிப்பை தடுக்கும் விதமாக இவ்வகை கற்றாழை செடிகள் மலைகளின் சரிவான பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது.
- கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
- நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக சுற்றுலா வாகனங்கள் வந்தது. இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், தூண்பாறை, குணாகுகை, தொப்பி தூக்கி பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர். அவர்கள் பூக்களின் அழகை கண்டு ரசித்தனர். மேல்மலை பகுதியான மன்னவனூருக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரியும் மேல்பரப்பில் ஜிப்லைன் உள்ளிட்ட சாகச பயணங்களிலும் ஈடுபட்டனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மாலை நேரத்தில் ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கோடைகாலம் முடிந்த நிலையில் தற்போது அதிகாலை நேரத்தில் பனி மூட்டமும் அதனைத் தொடர்ந்து சாரல் மழையும், மாலை நேரத்தில் மீண்டும் பனி மூட்டமும் என ரம்யமான சூழல் நிலவி வருகிறது.
இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.
இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணாகுகை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமமான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
முயல்பண்ணை, சூழல் சுற்றுலா மையம் ஆகியவற்றிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் இதமான வெயில் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவது சுற்றுலாப் பயணிகளை உற்சாகமடைய செய்துள்ளது. தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் வந்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்