என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடைக்கானலில் கோடைவிழா: சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த நாய்கள் கண்காட்சி
- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
- கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.
இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.






