என் மலர்
கரூர்
- அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் :
லாலாபேட்டை அருகே உள்ள மகிளிப்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 7-ந்தேதி லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் மகிளிப்பட்டி, புணாவசிப்பட்டி, லாலாபேட்டை, சந்தப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கரூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர்.
கரூர்,
கரூர் நொய்யல் குறுக்குச்சாலை அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் தொண்டைவலி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.
- கரூரில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
- நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச்சட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தம்பதியை தாக்கிய கொத்தனார் கைது செய்யபட்டார்
- மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர்,
கரூர் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலர்க்கொடி (வயது 45). இவர் கடந்த 5-ந்தேதி தனது வீட்டில் கணவர் மற்றும் உறவினர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு திருச்சாப்பூர் பகுதியை சேர்ந்த கொத்தனாரான திலீப் என்பவர் 3 பேருடன் வந்து உங்களது மகன் அரவிந்த் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு மலர்க்கொடி திருச்சாப்பூர் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 4 பேரும் சேர்ந்து மலர்க்கொடி, செல்வம், மலர்க் கொடியின் தங்கை ஜெயந்தி, உறவினர் தங்கம் ஆகிய 4 பேரையும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி உள்ளனர்.
பின்னர் செல்வத்தை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த செல்வம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மலர்க்கொடி கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.
- மூதாட்டி திடீர் இறந்தார்.
- இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
தென்னிலையில் உள்ள கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
கரூர் தெற்கு காந்திகிராமம் ஈ.பி. காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (51). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக தனியாக வசித்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட ராஜமாணிக்கம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மளிகைகடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம், நொய்யல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். நேற்று மாலை சரவணன் தனது வீட்டில் இருந்து தோட்டத்திற்கு செல்வதற்காக தனது மொபட்டில் வேலாயுதம்பாளையம்- நொய்யல் குறுக்குச்சாலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார் அப்போது குறுச்சாலை பகுதியில் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி மோட்டார் சைக்கிள், சரவணன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் தவறி விழுந்து சரவணன், சக்திவேல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சக்திவேலுக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சரவணனின் தந்தை சாமியப்பன் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கரூர் பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
கரூர் :
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள செம்மேட்டை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் தனது மனைவி பிரியாவுடன் கரூர் அருகே உள்ள வாங்கல் எல்லைமேடு பகுதியில் வீடு எடுத்து தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே பணப்பிரச்சினையால் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பால்ராஜ் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கினார்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பால்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.3½ லட்சத்துக்கு ஏலம் போனது
- கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் விற்பனையானது
கரூர்,
கரூர் நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில், கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 45.70 குவிண்டால் எடை கொண்ட 123 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 891-க்கு நிலக்கடலை விற்பனையானது.
- கிருஷ்ணராயபுரம் அருகே முதியவர் மர்மமுறையில் இறந்தார்
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் குளத்து வாரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த முதியவர் யார?் என்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வீரராக்கியம் பகுதியை சேர்ந்தவர் அம்மையப்ப கவுண்டர் (வயது 88) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்து கிடப்பது அம்மையப்ப கவுண்டர் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.