என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள்
    X

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: 2-வது நாளாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரான த.வெ.க. நிர்வாகிகள்

    • நேற்று புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • சிபிஐ அதிகாரிகள் விசாரணையானது சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர், தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் இருந்து 1,316 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்த அவர்கள், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கரூர் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 22-ந்தேதி தாக்கல் செய்தனர்.

    முதல் தகவல் அறிக்கையில், கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் த.வெ.க.வை சேர்ந்த சிலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    விசாரணைக்கு ஆஜராகுமாறு புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கட்சி நிர்வாகி பவுன்ராஜ் உள்ளிட்டோருக்கு சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

    மேலும் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள், த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடந்த 8-ந்தேதி த.வெ.க. வக்கீல் அரசு, சென்னை பனையூர் அலுவலக நிர்வாகி குருசரண் உள்பட 3 பேர் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தனர்.

    நேற்று காலை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார், மதியழகன், பவுன்ராஜ் ஆகிய 5 பேரும் காரில் வந்தனர். பின்னர் அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகினர்.

    அப்போது அவர்களிடம், பிரசார கூட்டம் எத்தனை மணிக்கு தொடங்கும் என அறிவித்து இருந்தீர்கள், எத்தனை மணிக்கு விஜய் பிரசாரத்தை தொடங்கினார், கூட்டத்தில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர், எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தீர்கள் என்பன உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக தெரியவருகிறது. அப்போது, அவர்கள் தெரிவித்த தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையானது இரவு 8.20 மணி வரை சுமார் 10½ மணி நேரம் நடைபெற்றது.

    இந்நிலையில், கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் இன்று 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகினர். நேற்று 10 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் இன்று 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாநகரப் பொருளாளா் பவுன்ராஜ் தவிர மற்ற 4 பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×