என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஐ விசாரணை"

    • இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
    • சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

    கரூர்:

    கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருந்து கடந்த ஒரு மாதமாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    சம்பவம் நடைபெற்ற பகுதியிலுள்ள பொதுமக்கள், கடைக்காரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், அதன் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்டவர்களிடம் தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    முதற்கட்டமாக நேற்று முன்தினம் கரூர் வேலுச்சாமிபுரம் மற்றும் கோதூர் பகுதிகளில் உள்ள உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். நேற்று 2-வது நாளாக சம்பவத்தில் காயமடைந்த கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த உஷா மற்றும் அவரது மகள் திவ்யா ஆகியோரின் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஒரு பெண் அதிகாரி உள்பட 3 சிபிஐ அதிகாரிகள் நேற்று மதியம் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை ஒரு மணி நேரம் நடந்தது. என்ன காயம் ஏற்பட்டது? எத்தனை நாள் சிகிச்சை பெற்றீர்கள்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது? கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலவிய சூழ்நிலை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

    இன்று 3-வது நாளாக கூட்டம் நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் நேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்களை முதலில் கரூர் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். பின்னர் சில தினங்களுக்கு முன்பு வழக்கு விசாரணை திருச்சி குற்றவியல் தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி கோர்ட்டில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது. சி.பி.ஐ. தனது மாதாந்திர விசாரணை அறிக்கையை திருச்சி கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது.

    • விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.

    கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.

    இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    • தேசிய புல​னாய்வு முகமை பி.எப்.ஐ. அமைப்​புக்கு சொந்த​மான இடங்களில் சோதனை நடத்​தி​யது.
    • பி.எப்.ஐ. அமைப்​பைச் சேர்ந்த முக்​கிய உறுப்​பினர்கள் 28 பேரை அமலாக்​கத் துறை கைது செய்​துள்​ளது.

    பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பி.எப்.ஐ. அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.

    மேலும், அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த வழக்கில் இதுவரை பி.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் 28 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அத்துடன் ரூ.62 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே முடக்கி இருந்தது.

    இந்நிலையில், பி.எப்.ஐ. மற்றும் அதன் அரசியல் கட்சியுடன் (எஸ்.டி.பி.ஐ.) தொடர்புடைய அறக்கட்டளைகளுக்கு சொந்தமான மேலும் ரூ.67 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

    இதில் பெரும்பாலான சொத்துகள் கேரளாவில் உள்ளன. இத்துடன் இந்த வழக்கில் முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.129 கோடியாக அதிகரித்துள்ளது.

    • 2-வது நாளாக நேற்று 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை.
    • கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதன் உரிமையாளர்கள் வீடியோகிராபர்கள் காவல்துறை அதிகாரிகள் என 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பினர். தொடர்ந்து அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நேற்று 2-வது நாளாக 7 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று 3-வது நாளாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் விசாரனை நடத்தப்பட்டது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர். அவர்களை கரூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றனர்.

    சம்பவம் நடைபெற்ற போது உங்களை தொடர்பு கொண்டது யார்? எந்த செல்போன் எண்ணில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்தது?

    நெரிசலில் சிக்கி ஆம்பு லன்சில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது எத்தனை பேர் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் இறந்தனர்? எத்தனை பேர் பிணமாக சம்பவ இடத்திலிருந்து ஏற்றி சென்றீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

    தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.
    • உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், "நீதி வெல்லும்!" என பதிவிட்டுள்ளார்.

    • திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை.
    • திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.

    கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் என்பவரை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

    இதுதொடர்பாக அதிமுக தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

    இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல், வழக்கு தொடர்ந்த பிரபாகரனை திமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ரகுநாதன் தொடர்புகொண்டு, வழக்கை வாபஸ் பெற்றால் பணம், வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி, மிரட்டல் போன்ற தொனியில் பேரம் பேசியதாகவும், அதனை தான் மறுத்த பிறகு, தன் பெயருடன் சில ஊடகங்களில் "தான் வழக்கே தொடராததாக" தவறான செய்தி வெளிவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    இன்று, திமுக வழக்கறிஞரான வில்சன், மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார்.

    ஏன் பதறுகிறீர்கள் திமுக ? என்ன தவறு செய்தீர்கள்?

    வழக்கு வாபஸ் பெற உங்கள் கட்சி ஒன்றியச் செயலாளர் மூலம் எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?

    நீதி அமைப்பின் உச்சமான உச்சநீதிமன்ற தீர்ப்பையே தங்கள் "விஞ்ஞான ஊழல்" தந்திரத்தால் திரித்து பேசும் அளவிற்கு எதை மறைக்க, யாரைக் காப்பாற்ற இவ்வளவு முனைகின்றனர்?

    திமுக-வின் அரசியல் தில்லுமுல்லுகள் தீர்ந்தபாடில்லை. திமுக ஆட்சி செய்தால், நீதியே இவர்களுடன் போர் செய்ய வேண்டிய நிலையில் தான் உள்ளது.

    வழக்கு தொடர்ந்த பிரபாகரன், தனக்கும், தனது தாயாருக்கும் பாதுகாப்பு வேண்டி காணொளி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். அவர்களுக்கு சிறு கீறல் விழுந்தால் கூட , அதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
    • சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.

    கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    தொடர்ந்த, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது, கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ, தேர்தல் பரப்புரைக்கு வந்த தவெக-வுக்கோ சம்பந்தப்பட்ட வழக்கு என்று மூடி மறைக்க கூடாது. இது 41 உயிர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு.

    அதனால்தான் நாங்கள் நேரடியாக 41 உயிர்கள் தொடர்புடைய வழக்கு என்பதால் தான் ஒருநபர் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என கூறினோம்.

    சிபஐ விசாரணையை கண்காணிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க உத்தரவிட்டதையும் வரவேற்கிறோம்.

    பாஜகவின் 2 தொண்டர்கள் தனிப்பட்ட முறையில் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தனர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைத்தது பாஜக தான்.

    கரூர் விவகாரத்தில் தொடர்புடைய எந்த அதிகாரியாக இருந்தாலும் சரி எந்த அரசியல் பிரமுராக இருந்தாலும் சரி தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள்.
    • தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும், மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என உண்ணா விரதம் இருந்து உயிர்நீத்த வருமான சங்கரலிங்கனாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சி.பி.ஐ. விசாரணை என்பதை நாங்கள் எப்போதும் ஏற்றுக் கொள்வதில்லை. மாநில உரிமைக்கு மாநில தன்னாட்சிக்கு நிகழ்ந்த அவமதிப்பு. எங்களுடைய காவல்துறை விசாரணையில் என்ன குறை?. சி.பி.ஐ. விசாரணை என்றால் தமிழக காவல்துறை தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கிறதா?

    எல்லாமே மாநில உரிமை என்று பேசுகிறீர்கள் சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு இரண்டு மூன்று மூளையா உள்ளது?. தமிழக காவல்துறை தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ளது சி.பி.ஐ. மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சி.பி.ஐ., வருமான வரித்துறை அமலாக்கத்துறை போன்றவை எல்லாம் தனித்து செயல்படும் என்று நாம் நினைத்துக் கொண்டு உள்ளோம். ஆனால் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல அவர்கள் செயல்படுவார்கள். அதனால் அதைப் பேசி பயனில்லை.

    சி.பி.ஐ. விசாரணையில் என்ன வந்துவிடும் இவ்வளவு சிறந்த எங்கள் காவல் படையை அவமதிக்கிறீர்கள். என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். அப்படி என்றால் அஜித் குமார் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கூறியது தமிழக அரசு தானே என்ற கேள்விக்கு, அரசு தோல்வி தான் என ஒப்புக்கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை என்பது காலத்தை கடத்தும் திசை திருப்பிவிடும்.

    நாளையிலிருந்து சி.பி.ஐ. விசாரணை தொடங்கி விடுமா?. சி.பி.ஐ.யின் புலன் விசாரணை சரியாக இருக்காது. கேப்டன் விஜய காந்த் நடித்த புலன் விசாரணை படம்கூட சுவாரசியமாக இருக்கும். தனிநபர் நீதிபதி தலைமையில் விசாரணை என்பதெல்லாம், திசை திருப்பி விடுவது தான். சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் மத்திய அரசை கைகாட்டுகிறது தி.மு.க. அரசு. ஆனால் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அளித்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள்.

    எதற்கெடுத்தாலும் மாநில சுய ஆட்சி பேசும் தி.மு.க. அரசு எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை கை காட்டுகிறது. இது ஒரு தேசிய இன அவமதிப்பு, மாநில அவமதிப்பு, காவல்துறையை அவமதிப்பதாக பார்க்கிறேன். நேர்மையானவனுக்கு என்ன பயம் யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் தானே?.

    கிட்னி திருட்டு வழக்கில் கிட்னி திருட்டு என்று சொல்ல வேண்டாம் கிட்னி முறைகேடு என்று சொல்லுங்கள் என்கிறார்கள். மது குடிப்பவர்களை மது பிரியர்கள் என்று சொல்ல வேண்டுமாம். அப்படி என்றால் லஞ்சம் வாங்குபவர்களை ஊழல்வாதிகளை பணப் பயனாளிகள் என்று சொல்ல வேண்டியது தானே.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது கொழுப்பெடுத்து போய் இறந்தது. அதேபோல் இது தியாகியை பார்க்க சென்றோ சுதந்திர போராட்ட வெற்றி கொண்டாட்டத்திற்கோ சென்று உயிரிழந்தவர்கள் இல்லை.

    ஒரு நடிகனை பார்க்க போய் உயிரிழந்திருக்கிறார்கள். இது விபத்து. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மக்களின் கிளர்ச்சி புரட்சியால் ஏற்பட்ட படுகொலை சம்பவம் அது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு தி.மு.க. அரசு செய்தது பணி உயர்வு, பணியிட மாற்றம் அளித்தது தான்.

    விஜய் கூட்டத்தில் இறந்தவர்கள் பற்றி தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்திருந்தால் பேசி இருக்க மாட்டார்கள் தேர்தலுக்கு நான்கு மாதம் மட்டுமே இருப்பதால் பேசுகிறார்கள்.

    எதையாவது செய்து விஜய்யை பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு சாராரும் அந்த கூட்டணிக்கு அவர் சென்று விடக்கூடாது என்று மற்றொரு சாராரும் செயல்பட்டு வருகிறார்கள். இதுதான் 10 நாட்களாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும்.
    • கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கரூர் விபத்தின் பின்னணியில் பல்வேறு சதி வலைகள் இருப்பதாக ஐயங்கள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

    கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் மிகவும் துயரமானவை. காவல்துறையினர், பரப்புரைக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடக்கம் முதலே கூறி வருகிறது. ஆனால், விபத்து நடந்த சில நிமிடங்களில் தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அளவுக்கு அதிகமான பதட்டம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே , காவல்துறை சார்பில், தங்கள் மீது இதில் எந்தத் தவறும் இல்லை என்று தாமாக முன்வந்து அளிக்கப்பட்ட விளக்கம் ஆகியவை தான் இந்த விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் இருக்குமோ? என்ற ஐயத்தை வலுப்படுத்தியது.

    அதனால் தான் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று செப்டம்பர் 29-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். இந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரிய முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்தோகி மேற்பார்வையில் விசாரணை நடத்த ஆணையிட்டிருப்பதன் முலம் இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நம்புகிறது.

    உச்சநீதிமன்றத்தால் ஆணையிடப்பட்டுள்ள இந்த விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அது மட்டும் தான் உயிரிழந்த அப்பாவிகளின் குடும்பங்களுக்கு நீதியை வென்றெடுத்துக் கொடுக்கும்.

    • த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம்.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது.

    கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியறுத்தி த.வெ.க. வக்கீல் பிரிவினர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வந்தனர்.

    அப்போது த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது காவல்துறை கடமையாற்ற தவறி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

    விஜய் பிரசாரத்தின்போது கூடி இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம். கூட்டத்தில் விஜய் பேசியபோது மர்ம நபர்கள் செருப்பு வீசினார்கள். இந்த சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது. உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம்.

    த.வெ.க. கூட்டத்தில் குண்டர்கள் பலர் கல்வீச்சிலும், செருப்புகளையும் வீசி தொண்டர்களை தாக்கியுள்ளனர். சதி திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்ததும் சதி திட்டத்திற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் போதுமான காவலர்களை பணியமர்த்தாததும் முன்னேற்பாடுகளை செய்யாததும் இந்த சம்பவத்துக்கு காரணமாகும்.

    எனவே இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

    தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வாதாடி மேற்கண்ட குற்றத்துக்கு காரணமானவர்களை வெளிக் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிதன்யா தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
    • வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து விசாரணை அதிகாரி வழக்கின் விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதில் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும் உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கவினின் செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதன் அறிக்கை வந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளி யம்மன் கோவிலில் காவலா ளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 29). இந்த நிலையில் கோவிலுக்கு வந்த நிகிதா என்பவர் தன்னுடைய காரில் இருந்த நகைகள் மாயமான தாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்கு மாரை விசாரணைக்கு அழைத்து சென்ற போது, தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீஸ் காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஸ் ராவத் காத்திருப் போர் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும், மானா மதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து ஜூலை 8-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இதனிடையே, அஜித்குமார் மரண வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், கடந்த 2-ந்தேதி திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் விசாரணையை தொடங்கிய மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர் லால் சுரேஷ், சுமார் 50-க்குமு மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்த சம்பவத்தில் விதிமீறல்கள் இருப் பதும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரமும் இருப்பது தெரிய வருகிறது.

    சட்டவிரோத காவல் மரணங்கள் தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. விசாரணை அமைப்பின் செயல்பாடுகள் நீதியை நிலைநாட்டும் வண்ணம் இருக்க வேண்டுமே தவிர, சந்தேகிக்கும் வண்ணம் இருக்கக் கூடாது.

    இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட காவல் துறையினரே வழக்கை விசாரித்தால் நீதி, உண்மை வெளிவராது எனும் சந்தேகம் எழுவதாலேயே சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது. சி.பி.ஐ. தரப்பிடம் அனைத்து அறிக்கைகளையும் நீதிமன்ற பதிவாளர் வழங்க வேண்டும், சி.பி.ஐ. ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து, அஜித்குமார் கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. கடந்த சனிக்கிழமை தனியாக வழக்குப் பதிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியாக துணைக் கண்காணிப்பாளர் மோஹித்குமார் நியமிக்கப்பட்டார். இவர் பல மாநிலங்களில் முக்கியமான வழக்குகளை விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கு விசாரணையை அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளதாக அவர் ஏற்கெனவே தெரிவித்தார்.

    விசாரணையை தொடங்குவதற்காக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகித்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தனர். அவர்களுக்கு மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தன.

    இதற்கிடையில் மதுரையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் குழுவினர் இன்று முதல் விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர். முன்னதாக தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா மற்றும் மதுரை, சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதன்பிறகு அவர்கள் பிற்பகலில் திருப்புவனம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அளிக்கப்பட்ட அறிக்கையில் அடிப்படையில் அஜித்குமாரின் பெற்றோர், சகோதரர், நண்பர்கள், கோவில் செயல் அலுவலர், ஊழியர்கள், நகை மாயமானதாக புகார் தெரிவித்த நிகிதா மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பட்டியலிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த இருக்கிறார்கள்.

    முன்னதாக திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு குறித்த ஆவணங்களையும் அவர்கள் கோர்ட்டில் இருந்து முறைப்படி இன்று பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் டெல்லியில் இருந்து வரும் அதிகாரிகளுக்கு மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளும், அலுவலர்களும் உதவியாக விசாரணை பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    தற்போது, சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் வழக்கை விசாரிப்பதற்காக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் எதிரே கோவில் நிர்வாகத்துக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் மேல் தளத்தில் உள்ள அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    ×