search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ambulance driver"

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் அருகே உள்ள முத்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 44). இவர் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தங்கராஜ்க்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் மின்விசிறியில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் கே.ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

    முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் முரளிதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    கரூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்புரெட்டிபட்டியை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 27). இவர் கரூரில் ஒரு தனியார் ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மற்றொரு ஆம்புலன்சில் டிரைவர்களாக பணியாற்றி வரும் மண்மங்கலம் புஞ்சை தோட்டக்குறிச்சியை சேர்ந்த முருகானந்தம்(38), இளங்கதிர் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி கரூர்-கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை முன்பு முரளிதரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம், இளங்கதிர் ஆகியோர் அவரிடம் கடுமையான வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது இருவரும் சேர்ந்து வயர் மற்றும் வாழைமர கன்று ஆகியவற்றால் முரளிதரனை சரமாரியாக தாக்கினர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முரளிதரன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவர் கரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தார். இதில் தொடர்புடைய இளங்கதிரை போலீசார் தேடி வருகின்றனர்.
    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதால் உச்சகட்ட குழப்பத்தில் ஆணையம் திணறி வருகிறது. #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி போயஸ்கார்டனில் நடந்தது என்ன? என்பது குறித்து சசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளது. இதேபோன்று மருத்துவர் சிவக்குமாரின் வாக்குமூலத்திலும் முரண்பாடு இருப்பதால் உச்சகட்ட குழப்பத்தால் ஆணையம் திணறி வருகிறது.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் நேற்று ஆணையத்தில் ஆஜரானார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி இரவு நான் பணியில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே, உடனடியாக போயஸ்கார்டனுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி உடனடியாக அங்கு சென்றேன். என்னுடன் மருத்துவர் சினேகாஸ்ரீ, ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் உடன் வந்தனர்.

    அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து 4 நிமிடத்துக்குள் போயஸ்கார்டன் சென்றேன். மருத்துவர், ஆண் செவிலியரும் ஜெயலலிதா இருந்த அறைக்கு சென்றனர். இதன்பின்பு வெளியே வந்த ஆண் செவிலியர், ஸ்ட்ரெச்சரை எடுத்துவரும்படி கூறினார். அதன்படி நான், ஸ்ட்ரெச்சருடன் உள்ளே சென்றேன். அப்போது ஜெயலலிதா கண்களை மூடியநிலையில் ஷோபாவில் அமர்ந்து இருந்தார். நானும், ஆண் செவிலியரும் ஜெயலலிதாவை ஷோபாவில் இருந்து தூக்கி ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்தோம்.

    சுமார் 15 நிமிடங்களில் மாடியில் இருந்து ஜெயலலிதாவை படிக்கட்டு வழியாக கீழே இறக்கி ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆம்புலன்சுக்குள் சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் ஆகியோர் இருந்தனர். நான் ஜெயலலிதா இருந்த அறைக்குள் செல்வதற்கு முன்பு அவருக்கு முதல் உதவி செய்தார்களா? என்பது எனக்கு தெரியாது.

    இரவு 10.10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றடைந்தேன். ஜெயலலிதாவை வேனில் ஏற்றும் வரையிலும், வேனில் இருந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லும் வரையிலும் அவர் கண்களை மூடியபடி தான் இருந்தார். ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துக்கொண்டு அவரது வீட்டு படிக்கட்டில் செல்லும்போது மருத்துவர் சிவக்குமார் ஜெயலலிதாவிடம், ‘மருத்துவமனைக்கு போகிறோம்’ என சொல்ல அதற்கு ஜெயலலிதா தலையை மட்டும் அசைத்தார்.

    இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

    சசிகலா தனது வாக்குமூலத்தில், ‘2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அன்று போயஸ்கார்டனில் மயக்கநிலையில் ஜெயலலிதா கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். ஆம்புலன்சில் சென்றபோது கண்ணை விழித்த ஜெயலலிதா எங்கே செல்கிறோம் என்று என்னிடம் கேட்டார்’ என்று கூறி உள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷ்குமார், ஜெயலலிதா கண்களை மூடியபடி ஷோபாவில் அமர்ந்து இருந்தார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ள ஜெயலலிதா கார் டிரைவர் கண்ணன், ஆம்புலன்ஸ் வேனில் இருந்த மருத்துவர் சினேகாஸ்ரீ ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா மயக்கநிலையில் நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தார்’ என்று கூறியிருந்தனர்.

    அதேபோன்று ஆம்புலன்ஸ் வேனுக்குள், சசிகலா, மருத்துவர்கள் சிவக்குமார், சினேகாஸ்ரீ, பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள், ஆண் செவிலியர் அனீஸ் ஆகியோர் இருந்ததாக டிரைவர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் சசிகலா, சிவக்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் ஆம்புலன்ஸ் வேனுக்குள் அவர்கள் இருவர் மட்டும் இருந்ததாக கூறி உள்ளனர்.

    போயஸ்கார்டனில் நடந்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குமூலம் அளித்திருப்பது ஆணையத்துக்கு உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.



    துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக ஏற்கனவே ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. கடிதம் மூலம் தனது விளக்கத்தை அளித்திருந்தார். இந்தநிலையில் நேற்று மீண்டும் ஆஜராக அவருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. நேற்றும் அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

    குருமூர்த்தி அந்த மனுவில் ‘என்னிடம் விசாரணை நடத்த தேவையில்லை. எனக்கும், ஜெயலலிதா மரணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று ஆணையம் எனது தரப்பு விளக்கத்தை பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆணையத்தில் ஆஜராக எனக்கு விலக்கு அளிக்க வேண்டும். எனக்கு அனுப்பிய சம்மனை திரும்ப பெற வேண்டும்’ என்று கூறி உள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆணையம் 20-ந் தேதி(நாளை) தள்ளிவைத்துள்ளது. #JayalalithaaDeath #InquiryCommission
    ×