என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆம்புலன்ஸ் டிரைவர்"

    • மகாராஷ்டிரா மட்டுமின்றி பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.
    • மாநில அரசுகள் இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின், அம்லா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சவிதா பாரத். இவர் பிரசவத்திற்காக கடந்த 19ஆம் தேதி மொகதா தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து ஜவஹர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சவிதாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து நேற்று (நவ.24) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால் சவிதாவின் கிராமத்திற்கு 2 கி.மீ தொலைவிற்கு முன்னரே வாகனத்தை நிறுத்தி, அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர். இதையடுத்து சவிதா, அவரது தாய், மாமியார் என மூவரும் தங்களது கிராமத்திற்கு நடந்தே சென்றுள்ளனர். ஆனால் இடையே சவிதாவால் நடக்க முடியவில்லை. இதனை அவ்வழியே சென்ற நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அந்த தாய்க்கு ஏதாவது ஆனால், அந்த குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? அரசு பதில் சொல்லவேண்டும் என கேள்விகளை எழுப்பியிருந்தார். 

    இந்த வீடியோ வைரலான நிலையில் மொகதா தாலுகாவின் சுகாதார அலுவலர் டாக்டர் பௌசாஹேப் சத்தார், "ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து அறிந்த உடன் அப்பெண்ணின் வீட்டிற்கு மருத்துவக்குழு சென்று பார்த்ததாகவும், தாய், சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும்" தெரிவித்தார். 

    புதிதாக குழந்தை பிரசவித்தவர்கள் இதுபோல இறக்கிவிடப்படுவது இது முதல்முறை அல்ல. அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் பலரும் இதுபோன்ற மனிதாபிமானம் அற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் மாநில அரசுகள் இதுபோன்ற செயல்பாடுகளில் மெத்தனப்போக்கையே கடைபிடித்து வருகிறது. 

    ×