என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake medicines"

    • சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    • இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

    தொடர்ந்து கோர்ட் அனுமதியுடன் கம்பெனி, குடோன்கள், தலைமை அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.200 கோடிக்கு போலி மருந்துகள், பல கோடி சொத்துக்கள், தங்க, வைர நகைகள் சிக்கின.

    இந்த நிலையில் இந்த வழக்கில் கவர்னர் உத்தரவின்பேரில், எஸ்.பி., நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர். உடன், வழக்கில் முன்ஜாமின் பெற்று தலை மறைவான ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் கடந்த 10-ந்தேதி கோர்ட்டில் சரணடைந்தனர்.

    இருவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில், 9 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில், சென்னையை சேர்ந்த லூபின் நிறுவனம் அளித்த புகாரின்பேரில் ராஜா, விவேக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினர் ஜெயிலில் அடைக்கப்பட்ட ராஜாவை, நீதிமன்ற அனுமதி பெற்று கடந்த 18-ந் தேதி முதல் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

    அதில் கிடைத்த தகவலின் பேரில் ராஜாவின் பங்குதாரரான என்.ஆர்.காங்., பிரமுகர் மணிகண்டன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., செலுத்துவதில் மோசடி செய்ய உதவிய முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்தியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ஜி.எஸ்.டி., அலுவலக கண்காணிப்பாளரை தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் இவ்வழக்கில் பல மாநிலங்களை சேர்ந்தவர்களின் தொடர்பு உள்ளதால், வழக்கை சி.பி.ஐ., மற்றும் என்.ஐ.ஏ., விசாரணைக்கு பரிந்துரை செய்து கவர்னர் உத்தரவிட்டார். இந்த நிலையில் ராஜாவின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதனையொட்டி, சிறப்பு புலனாய்வு குழுவினர், ராஜாவை நேற்று மாலை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    இதற்கிடையே, கவர்னர் உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து நேற்று மாலை உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    இன்னும், ஓரிரு நாளில் இவ்வழக்கின் விசாரணை அறிக்கை மற்றும் கோப்புகளை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

    போலீஸ் காவலில் ராஜா அளித்த தகவலின் பேரில் போலி மருந்து தயாரிக்க உதவியது தொடர்பாக அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த ஜெகன் என்ற மருதமுத்து (வயது42) சொக்கலிங்கம், (43) ஆகியோரை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இதன்மூலம் இவ்வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சொக்கலிங்கம், திருபுவனைபாளையத்தில் உள்ள மருந்து கம்பெனியில் மெஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். ஜெகன் என்ற மருதமுத்து (42) வேன் டிரைவர் மருந்தை சென்னைக்கு எடுத்துச் சென்று வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து வந்தார்.

    • போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
    • ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேட்டுப்பாளையம், திருபுவனை பாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10-க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.

    தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன.

    போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருந்தனர்.

    தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 ½கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

    கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீசார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

    இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் ரசாயான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சி.பி.ஐ., என்.ஐ.ஏ. விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் சி.பி.ஐ., என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு ஜி.எஸ்.டி. வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜி.எஸ்.டி.வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரியை செலுத்த புதுவை வனத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.

    மேலும் சத்திய மூர்த்தியிடம் ரூ12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐ.எப்.எஸ். அதிகாரி தனது அதிகாரிகள் தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார்.

    இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை நேற்று இரவு கைது செய்தனர் அவரை இரவோடு இரவாக புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

    இதனையடுத்து புதுவை ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    ஜி.எஸ்.டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜி.எஸ்.டி. அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.

    • நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது.
    • ‘கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்களும் எழுகிறது. இதுபோன்ற மருந்துகள் குறித்து 104 என்ற எண்ணில் மட்டுமே பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, 'கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.

    அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு குறித்து குறிப்பிட்ட 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

    • புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
    • விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.

    அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.

    அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

    • வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    போலி மருந்துகள் அதிகரித்து வருகின்றன. எது உண்மையானது எது போலியானது என்று தெரியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இந்தப் பிரச்சினையை உணர்ந்த மத்திய அரசு, அனைத்து வகையான மருந்துகளிலும் கியூஆர் குறியீடுகளை அச்சிட நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த முறையில் கியூஆர் குறியீடு மற்றும் பார் குறியீட்டை ஸ்கேன் செய்தால் அது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

    நற்பெயரைக் கொண்ட மற்றும் நன்றாக விற்பனையாகும் முன்னுரிமை பிராண்ட் மருந்துகள், குறியீடுகள் மற்றும் பார் குறியீடுகளை வைத்திருப்பது கட்டாயமாகும்.

    வாங்கும் நேரத்தில் அவற்றை ஸ்கேன் செய்தால் அவை உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், வாங்குபவர்கள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலி மூலம் சரிபார்க்கலாம்.

    ஒரு மருந்தை ஸ்கேன் செய்தால் தனித்துவமான தயாரிப்பு அடையாளக் குறியீடு மருந்தின் பொதுவான பெயர்கள் பிராண்ட் பெயர் உற்பத்தி செய்யும் பகுதி, தேதி, தொகுதி எண் போன்ற விவரங்கள் தெரியும்.

    மருந்து பேக்கேஜிங்கில் பார் குறியீடு அல்லது கியூஆர் குறியீடு இல்லாவிட்டாலும் அல்லது ஸ்கேன் செய்த பிறகு விவரங்கள் தெரியவில்லை என்றாலும் அது போலியானது என்று அடையாளம் காணப்பட வேண்டும் என்று மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.
    • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    புது டெல்லி:

    நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 1,233 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. #FakeMedicines
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

    அதாவது உலகில் விற்கப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

    குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகளை விற்பதாகவும் சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. உலகில் நடமாடும் மொத்த போலி மருந்துகளில் 50 சதவீதம் நோய் எதிர்ப்பு மருந்துதான் என்றும் தெரியவந்துள்ளது.

    இத்துடன் சத்து மருந்துகள் என்ற பெயரிலும், அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உரிய தரம் இல்லாமலும் ஏராளமான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அத்துடன் சட்டப்பூர்வ மற்ற மருந்துகளும் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாகவும் சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டு இருக்கிறது.  #FakeMedicines
    ×