என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி மருந்துகள்"

    • நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி பெயரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்தமெய்யப்பன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் போலிமாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அந்த குடோன்களில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே டெல்லி மற்றும் ஆந்திராவிலும் போலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசார் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

    நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஆந்திரா மற்றும் டெல்லி போலீசாரும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் மேலும் 8 குடோன்களில் போலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அந்த குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுச்சேரி, போலி மாத்திரைகள் தயாரித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என கண்டன ஆர்ப்பாட்டம்.
    • விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார் கிடைத்தது.

    அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையில் போலி மாத்திரைகள் தயாரிப்பது தெரியவந்தது.

    அதன் பெயரில் நேற்று மாலை சிபிசிஐடி போலீசார் தொழிற்சாலையில் சோதனை செய்ததில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மாத்திரைகள், மாத்திரைகள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதனை பறிமுதல் செய்து தொழிற்சாலை மற்றும் அதனை சார்ந்த நான்கு குடோன்களுக்கு போலீசார் சீல் வைத்தனர்.

    இந்த விவகாரம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் போலி மருந்துகள் தயாரிப்பு மற்றும் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும், பொதுமக்களில் உயிர் சார்ந்த விஷயத்தில் அலட்சியமாக செயல்படும் புதுச்சேரி அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில், 200 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகைகள் ஏந்தி, கோஷங்கள் எழுப்பி சட்டபேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டார். ஆர்ப்பாடத்தை தொடர்ந்து ஜே.சி.எம் மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினர் அங்களான் உள்ளிட்டோர் இந்த விவகாரத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.

    • மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ‘‘நிலையான தரம் இல்லாதவை’’ என்று அடையாளம் கண்டுள்ளன.
    • சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது.

    புதுடெல்லி:

    வழக்கமான ஒழுங்குமுறை கண்காணிப்பு நடவடிக்கையின்படி, நிலையான தரம் இல்லாத (என்.எஸ்.கியூ) மற்றும் போலியான மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் இணையதளத்தில் மாதாந்திர அடிப்படையில் காட்டப்படுகிறது.

    மத்திய மருந்துகள் ஆய்வகங்கள் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மருந்து எச்சரிக்கையில் பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 52 மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று கண்டறிந்து உள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில மருந்துகள் சோதனை ஆய்வகங்கள் 60 மருந்து மாதிரிகள் ''நிலையான தரம் இல்லாதவை'' என்று அடையாளம் கண்டுள்ளன.

    மருந்து மாதிரிகளை நிலையான தரம் இல்லாதவையாக அடையாளம் காண்பது என்பது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட தர அளவுருக்களில் மருந்து மாதிரியின் தோல்வியின் அடிப்படையில் செய்யப்படுகிறது. தோல்வி என்பது அரசாங்க ஆய்வகத்தால் சோதிக்கப்பட்ட தொகுப்பின் மருந்து தயாரிப்புகளுக்கு குறிப்பிட்டது, மேலும் சந்தையில் கிடைக்கும் பிற மருந்து தயாரிப்புகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செப்டம்பரில், சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து ஒரு மாதிரி, போலி மருந்தாக அடையாளம் காணப்பட்டது, இது ஒரு அங்கீகரிக்கப்படாத உற்பத்தியாளரால் மற்றொரு நிறுவனத்திற்குச் சொந்தமான பிராண்ட் பெயரைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த விஷயம் விசாரணையில் உள்ளது, மேலும் சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த மருந்துகள் அடையாளம் காணப்பட்டு சந்தையில் இருந்து அகற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, மாநில கட்டுப்பாட்டாளர்களுடன் இணைந்து நிலையான தரம் இல்லாதவை மற்றும் போலி மருந்துகளை அடையாளம் காணும் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படுகிறது.

    • ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
    • இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு போலி, காலாவதி மருந்துகள் கண்டறியப்படுகிறது.காய்ச்சல், இதய நோய், வயிற்றுவலி, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.

    இதனால் மத்திய அரசு அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில், போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் டிராக் அண்ட் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகமுதல் கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார் கோடு அல்லது க்யூஆர் கோடுபிரின்ட் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை, அட்டையின் விலை, 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் மருந்துகளில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, உண்மை விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்கதக்கது என்றார்.

    • அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.
    • இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    புது டெல்லி:

    நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து - மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வில் போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 1,233 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

    உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. #FakeMedicines
    நியூயார்க்:

    உலகம் முழுவதும் போலி மருந்துகள் விற்பனை அதிகரித்து இருப்பதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.

    அதாவது உலகில் விற்கப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

    குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி என்ற பெயரில் அதிக அளவில் போலி மருந்துகளை விற்பதாகவும் சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது. உலகில் நடமாடும் மொத்த போலி மருந்துகளில் 50 சதவீதம் நோய் எதிர்ப்பு மருந்துதான் என்றும் தெரியவந்துள்ளது.

    இத்துடன் சத்து மருந்துகள் என்ற பெயரிலும், அதிக அளவில் போலி மருந்துகள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் உரிய தரம் இல்லாமலும் ஏராளமான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அத்துடன் சட்டப்பூர்வ மற்ற மருந்துகளும் அதிக அளவில் நடமாட்டம் இருப்பதாகவும் சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டு இருக்கிறது.  #FakeMedicines
    ×