என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் தயாரிக்கப்பட்ட போலி மாத்திரைகள் ஆந்திரா, டெல்லியிலும் விற்பனை
- நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
- போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர்.
புதுச்சேரி:
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி பெயரில் புதுவையில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக ஏற்கனவே சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்தமெய்யப்பன் (46) ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மருந்து தொழிற்சாலை நடத்தி வருவதும், புதுச்சேரியில் 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் போலிமாத்திரைகளை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த குடோன்களில் போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு அட்டைப்பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே டெல்லி மற்றும் ஆந்திராவிலும் போலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்ததால் அந்த மாநில போலீசார் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
நேற்று 2-வது நாளாக மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள 2 குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் போது ஆந்திரா மற்றும் டெல்லி போலீசாரும் குடோன்களில் பதுக்கி வைத்திருந்த போலி மாத்திரைகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து போலி மாத்திரைகள் பற்றிய விவரங்களை புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் டெல்லி, ஆந்திர போலீசார் கேட்டறிந்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்று விசாரிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மேலும் 8 குடோன்களில் போலி மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் இன்று அந்த குடோன்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.






