என் மலர்
நீங்கள் தேடியது "CBI Investigation"
- சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
- வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
பல்லடம்:
பல்லடத்தைச் சேர்ந்த சிவகுமார் அவரது அண்ணன் விஜயகுமார், விஜயகுமார் மகன் ராகுல் பாலாஜி,மற்றும் தமிழரசன், பிரவினா ஆகியோர் கூட்டாக சேர்ந்து திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கித் தருவதாக சுமார் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், பிரவீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழரசன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிவக்குமார்,விஜயகுமார், ராகுல் பாலாஜி, உள்ளிட்டவர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக புகார் தாரர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-ரூ.100 கோடி மோசடி குறித்து பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க பல்லடம் போலீசார் தாமதப்படுத்தியதால், இந்த வழக்கை சிபிஐ.க்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்து வந்தோம்.இதையடுத்து இந்த வழக்கு சிபிஐ. க்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய வங்கி மேலாளர், உள்ளிட்ட 4 பேரை சிபிஐ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை முதலில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு அதன் பிறகு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளி நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றவர்களின் பெயர் பட்டியலை பெற்றுச் சென்றனர் .
இதுதவிர பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம், பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர். ஆனால் அங்கு எதற்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
பொள்ளாச்சி எம்.ஜி.ஆர் நகரில் சபரிராஜன் வீடு உள்ளது. அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். சபரிராஜன் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர்கள் சில தகவல்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டிற்கும் சென்று விசாரணை நடத்தலாம் என்ற தகவல் பரவியது. ஆனால் இரவு 10 மணி வரை சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு செல்லவில்லை.
இந்த நிலையில் மாக்கினாம் பட்டி மற்றும் அதே பகுதி ஜோதி நகரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முகவரிகளை பெற்று சென்றுள்ளனர்.
இதனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
செங்குன்றம் அருகே உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
குடோன் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்படி துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
குட்கா முறைகேடு குற்றச்சாட்டு கூறப்பட்டபோது, வடசென்னை பகுதியில் பணியாற்றிய 3 போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த 3 போலீஸ் அதிகாரிகளில் 2 பேர் தற்போது ஐ.ஜி. அந்தஸ்தில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி வெளிமாவட்டத்தில் பணியில் உள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் தகவலை சென்னை போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CBI #GutkaScam
திருச்சி:
திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நேசம் காப்போம் மாநாடு ஜனவரி 23-ல் நடைபெறுகிறது. இதில் தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், ம.தி.மு.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள், தேசிய, மாநில தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவது நாட்டிற்கு ஆபத்தானது. ஆகவே மதச்சார்பற்ற சக்திகளின் வாக்கு வங்கி சிதறக்கூடாது என்பதால் அகில இந்திய அளவில் ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் ஜனநாயகம், மதச் சார்பின்மை மீது நம்பிக்கை உள்ளவர்கள் பங்கேற்க அழைக்கிறேன்.
இந்த பொங்கல் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. காரணம் கஜா புயல் பாதிப்பு, அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட நீர் சிக்கல்களால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பன்னாட்டு நிறுவன கொள்கைகளால் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்துவதால் அங்குள்ள விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதனை விவசாயிகள் பாதுகாப்பு நாளாக நினைவு கூர்கிறோம்.
கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக சாமுவேல் மேத்யூஸ் சுமார் 15-16 நிமிட வீடியோவை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முதல்வர் வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளார். சயன், மனோஜ் ஆகியோரை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்தது.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது நீதிபதி விடுவித்துள்ளார். தமிழக காவல்துறை அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்யும் அளவு வழக்குகளை பதிவு செய்யவில்லை. இது காவல்துறை, தமிழக அரசின் தடுமாற்றத்தினை வெளிப்படுத்துகிறது.
முதல்வர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறப்பு விசாரணை குழுவோ அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அது அவரை குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கும் வாய்ப்பு என கருதி கேட்டுக் கொள்கிறோம்.
கஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டது. ஆனால் அந்த அளவு சேதாரங்கள் ஏற்பட வில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கஜா புயல் பாதிப்புகளை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட வருவார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது.
ஆனால் எதிர்பார்த்தபடி பிரதமர் வரவில்லை. தற்போது தேர்தல் பிரசாரத்திற்காக வருகிறார். இதனை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பதோடு, தேர்தலில் தக்க பாடத்தினை பா.ஜ.க.விற்கு புகட்டுவார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் பயணிக்கிறது. அதில் எந்த ஊசலாட்டமும் இல்லை. இந்த கூட்டணியில் 9 கட்சிகள் மற்றும் பல கட்சிகள் உள்ளனர். இதில் 2-வது கருத்திற்கோ மாற்றுக்கருத்திற்கோ இடமில்லை.
அ.தி.மு.க.-பா.ஜ.க. வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என கூறியுள்ளது. ஒரே அணியிலோ அல்லது தனித்தனியாகவோ போட்டியிடலாம். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையே சமீப காலமாக இடைவெளி இருப்பதை கட்சியின் மூத்த தலைவர்கள் அளிக்கும் பேட்டிகளில் தெரிகிறது. இரு அணிகளுக்கும் இடையே தேர்தலுக்கு முன்பு கூட்டணி இல்லை. பா.ஜ.க. வுடன் தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அது தமக்கு தாமே குழி தோண்டுவது என வி.சி.க. கருதுகிறது.
இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இருதுருவ போட்டியையே பார்த்துள்ளோம். 3-வதாக ஒரு கூட்டணி அமைந்தால் அது தேசிய அளவிலோ, மாநில அளவிலோ வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலும் அப்படித்தான். தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் தேர்தலை சந்திக்கும். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெறுகிறதா? இல்லையா? என்பது தான் கேள்வி.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து திருமாவளவன் மாநாடு நடைபெறும் ஜி கார்னர் மைதானத்தை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். #kodanadvideo #edappadipalanisamy #thirumavalavan
குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். செங்குன்றம் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குட்கா விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உதவி கமிஷனர் மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சம்பத் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதார துறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றும் ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைத்துள்ளது.
போலீஸ் அதிகாரி ஜெயக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றிய போதுதான், செங்குன்றம் குட்கா குடோனில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் வீட்டில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதன் பிறகு பேட்டி அளித்த ஜார்ஜ், ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஜெயக்குமார் பல விஷயங்களை எனக்கு தெரியாமல் மறைத்து விட்டார் என்றும் கூறி இருந்தார். இதனை அடிப்படையாக வைத்தே ஜெயக்குமாருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இதனை ஏற்று நேற்று சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜரானார். இன்று 2-வது நாளாக காலை 10.30 மணி அளவில் அதிகாரி ஜெயக்குமார் மீண்டும் ஆஜர் ஆனார்.
நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். குட்கா குடோனில் முதல் முறையாக சோதனை நடத்திய போது அங்கு நடந்தது என்ன? என்பது பற்றி ஜெயக்குமாரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.
முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் கூறிய குற்றச்சாட்டு குறித்தும் ஜெயக்குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு அவர் உரிய பதில் அளித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக பணியாற்றியபோது எந்த அடிப்படையில் குட்கா குடோனில் சோதனை நடைபெற்றது என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்தும் ஜெயக்குமார் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
குட்கா குடோனில் சோதனை நடத்திய பின்னர் அதனை உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டதாகவும், அதன் பிறகு நடைபெற்ற முறைகேடுகள் எதுவும் எனக்கு தெரியாது என்றும் ஜெயக்குமார் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குட்கா குடோனில் நடைபெற்ற சோதனைக்கு பிறகு அது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது பற்றியும் ஜெயக்குமார் பல்வேறு தகவல்களை கூறி உள்ளார்.
இவை அனைத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வாக்கு மூலமாக பதிவு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. முடுக்கி விட்டுள்ளது.
இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. #Gutkhascam
புதுவை திருபுவனையில் உள்ள சீனிவாச கெமிக்கல்ஸ் என்ற பெயரில் அந்த ஆலை செயல்படுகிறது.
இங்கு ஆந்திராவில் இருந்து மூலப்பொருட்களை கொண்டு வந்து சோப்பு ஆயில் தயாரித்து வெளியிடங்களுக்கு அனுப்புகிறார்கள்.
இந்த ஆலையில்தான் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் சோதனை நடத்தியுள்ளனர். அவர்கள் 10 மணி நேரமாக சோதனை மேற்கொண்டனர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக மாதவராவின் உதவியாளர்கள் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதனை ஏற்று 4 பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் ரசாயன ஆலை தொடர்பாகவும், குட்கா ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல மாதவராவின் உறவினர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா ஊழலில் தொடர்புடையதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. காவலில் இருக்கும் நிலையில் மேலும் 6 பேர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் குட்கா வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam
தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார். அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில் சிலர் சிக்கினர்.
மேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும் சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில் தெரியவந்தது. அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகிய 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை பிரத்யேகமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமித்து உள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதிகள் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக ஐகோர்ட்டில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால் அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை. எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதற்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட்டது.
இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதற்கிடையே கடந்த வாரம் ஐகோர்ட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை, ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்தது. #IdolTheftCases
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் ஓடும் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் திருடப்பட்டு, அப்பகுதியில் உள்ள அழியா நிலை, கோங்குடி, அத்தாணி, நற்பவளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மணல் சேமிக்கப்பட்டு, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலுக்கு மணல் தராத மாட்டுவண்டிக்காரர்கள் குறித்து மணல் கடத்தல் கும்பல் வருவாய்த்துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து சிக்க வைத்து வந்தனர்.
இந்த நிலையில் அறந்தாங்கியை சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் குறித்தும், அவர் தினசரி பல லாரிகளில் மணல் கடத்துவதாகவும், மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அறந்தாங்கி பகுதியில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த துண்டு பிரசுரம் குறித்து தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அதிகாரிகளை போனில் அழைத்து எச்சரித்ததுடன், சட்டவிரோதமாக அறந்தாங்கி பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள மணலை கைப்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உத்தரவின்பேரில், அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா தலைமையில், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் செந்தில் முன்னிலையில் நற்பவளக்குடி, கோங்குடி அத்தாணி உள்ளிட்ட 2 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூனிட் மணலை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த மணலை, அரசு பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-
அறந்தாங்கியில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் மக்கள் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறார்களோ இல்லையோ தினசரி இரவு திருட்டு மணல் பிடிக்க கிளம்பி விடுகின்றனர். அவ்வாறு ரோந்து செல்லும் அதிகாரிகள் பெரிய மணல் கடத்தல் கும்பலை கண்டு கொள்ளாமல், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்களையும், டிராக்டர் மற்றும் சொந்த தேவைக்காக ஒரு லாரியில் மணல் அள்ளுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர். ஆனால் பெரிய மணல் கடத்தல் கும்பலோடு இணைந்து செயல்பட்டுள்ளனர். அதற்கு ஆதாரமாக துண்டு பிரசுரம் வெளிவந்த பின்பு,சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்ட மணலை பறிமுதல் செய்கின்றனர். இத்தனை நாள் இந்த இடங்களில் மணல் குவித்து வைக்கப்பட்டது இந்த அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். எனவே மணல் கடத்தல் கும்பலோடு தொடர்புடைய அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையும், சி.பி.சி.ஐ.டியும் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் அறந்தாங்கி இயற்கை வளத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அறந்தாங்கியில் மணல் கொள்ளை தொடர்பான துண்டு பிரசுரம் வெளியான பின்பு சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இனிமேலும் மணல் கடத்தலை தடுக்க வெளியூர் அதிகாரிகள் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews