search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assets frozen"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்து வாங்கியதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து வருமான வரித்துறை சொத்துகளை முடக்கியுள்ளது.
    • இதுவரை 2000 கோடிக்கும் அதிகமான சசிகலா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. ஆட்சி காலத்தின் போது தமிழகம் முழுவதும் பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்தார். அவர் ஜெயலலிதாவின் பெயரை முறைகேடாக பயன்படுத்தி தனக்காகவும், தனது குடும்பத்தினருக்காகவும் பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.

    மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் பெரும்பாலான சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ளார்.

    அவர் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தொடர்பாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    தமிழகம் முழுவதும் இந்த அதிரடி சோதனைகளை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது சசிகலா முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்தது. இதையடுத்து சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் வாங்கி குவித்த சொத்துக்களை முடக்கும் அதிரடி நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடங்கினார்கள்.

    பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதுவரை பல்வேறு கட்டங்களாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

    முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவை உள்ளிட்ட இடங்களில் 9 சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள். 2-வது கட்டமாக போயஸ் கார்டன், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினார்கள்.

    3-வது கட்டமாக கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகிய இடங்களில் உள்ள சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி சொத்துக்களை நோட்டீஸ் ஒட்டி முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

    அதன் தொடர்ச்சியாக சென்னையை அடுத்த பையனூரில் இருக்கும் 49 ஏக்கர் நிலத்தை முடக்கி வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் சசிகலாவுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துக்களின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.

    இந்த நிறுவனம் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய பினாமி பெயரில் செயல்பட்டு வந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை தொடங்கினார்கள். அதன் படி இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து ரூ.15 கோடி மதிப்புள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் சொத்துக்களை முடக்கி உள்ளனர்.

    பினாமி சட்டத்தின் படி இந்த நடவடிக்கையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டனர். இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.

    பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா இழந்துள்ளார்.

    சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி இருப்பதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த பிறகே வருமான வரித்துறை இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்து அவரது சொத்துக்களை முடக்கி வருகிறது.

    ×