search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaithilingam"

    • ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான்.
    • தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் தி.மு.க.- காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

    கடந்த 5 ஆண்டுகளில் மோசமான பாராளுமன்றத்தை சந்தித்துள்ளேன். மறுபடியும் போக வேண்டும் என்று நினைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மோடியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதற்காவே திரும்பவும் போக வேண்டும் என்று நினைக்கின்றேன்.

    ஜனநாயகத்தை முழுமையாக அழித்த கட்சி பா.ஜனதா தான். இன்றைய தினம் நாட்டை காக்க வேண்டும் என்றால் பா.ஜனதா இருக்கக்கூடாது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்து விட்டால், மீண்டும் தேர்தல் நடக்குமா என்பதே பெரிய விஷயமாகி விடும்.

    சட்டம் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றும் அளவுக்கு அவர்களுக்கு மன தைரியமும், பண தைரியமும் இருக்கிறது. இதனை மாற்ற வேண்டும் என்றால் ஒரு சுதந்திர போராட்டத்தை போன்று போராட வேண்டும்.

    தென்னிந்தியாவை ஆள வேண்டும் என பா.ஜனதாவினர் நினைக்கின்றனர். நிச்சயமாக தமிழகம், புதுவை அதனை ஏற்காது. தென்னிந்தியாவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.

    ஏனென்றால் இங்கு அதிகம் படித்தவர்கள், உழைப்பவர்கள், சிந்திக்கக்கூடியவர்கள் இருக்கின்றனர்.

    ஆகவே நாம் இந்தியா முழுவதும் துடைத்தெறிய வேண்டிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. அதனை நாம் இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்றார்.

    புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் தான் மீண்டும் போட்டியிட போகிறார். கட்சி தலைமையும் அவரைத்தான் வேட்பாளராக அறிவிக்கும் என்று உள்ள நிலையில் தொண்டர்கள் அவரை முன்னிறுத்தி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் அவரது இந்தந பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
    • வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதியடைந்துள்ளது.

    கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற அளவிலான தொகுதிகளை பெற காங்கிரஸ் கடும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும், புதுவை தொகுதியை பெற தனி கவனம் செலுத்தினர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேநேரத்தில் தி.மு.க. 6 தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

    இதன் மூலம் புதுச்சேரியில் இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக தி.மு.க. கருதுகிறது. இதனால் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என கட்சி தலைமையை வலியுறுத்தி வந்தது.

    அதே நேரத்தில் காங்கிரசார் புதுச்சேரியை தங்களின் கோட்டை என நிரூபிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதனால் புதுச்சேரி தொகுதியை பெறுவதில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

    சிட்டிங் தொகுதி என்ற முறையில் புதுச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க. தலைமை ஒதுக்கியுள்ளது.

    புதுச்சேரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட உள்ளார். காங்கிரசில் வைத்திலிங்கம் எம்.பி. தவிர முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சீட் கேட்டு வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வேட்பாளர் யார்? என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஆனால் சிட்டிங் எம்.பி. என்ற முறையில் கூடுதலான வாய்ப்புகளை வைத்திலிங்கமே பெற்றுள்ளார். இதனிடையே வைத்திலிங்கம் புகைப்படத்துடன் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு நகர பகுதியில் காங்கிரசார் சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.

    கிராமப்புறங்களில் கடந்த 10 ஆண்டுக்கு முன்புள்ள விலைவாசியையும், தற்போதுள்ள விலைவாசியையும் ஒப்பிட்டு காங்கிரசுக்கு வாக்களிப்பீர் என கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கை சின்னத்தை வரைந்து பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர்.

    • இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.
    • புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    பா.ஜனதா வேட்பாளர் யார்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் உள்ள பா.ஜனதா தலைவர்களில் பெரும் பாலானவர்கள் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவரும், புதுவையின் 4 பிராந்தியங்களிலும் அறிமுகமானவருமான அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என பரிந்துரை செய்கின்றனர்.

    அதே நேரத்தில் உள்ளூர் அரசியலில் தொடர விரும்புவதால் அமைச்சர் நமச்சிவாயம் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதோடு கட்சி மேலிடத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்றும், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற செய்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் கட்சி மேலிடம் அவரை வேட்பாளராக நிறுத்தத்தான் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனிடையே அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் பெயர்களும் பா.ஜனதா வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    ஆனால் புதுச்சேரியை சாராத இவர்கள் போட்டியிட்டால் எதிர்கட்சிகள் அதனை சாதகமாக வைத்து பிரசாரம் செய்வார்கள் என்பதால் பா.ஜனதா தலைமைக்கே தயக்கம் உள்ளது.

    இதுதவிர பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம், சுயேட்சை எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் வேட்பாளர் குறித்து கட்சி தலைமையின் முடிவுக்காக பா.ஜனதாவினர் காத்திருக்கின்றனர்.

    இதே போல எதிர்கூட்டணியான இந்தியா கூட்டணியில் காங்கிரசும், தி.மு.க.வும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியை பெறுவதில் தீவிரம் காட்டின.

    ஆனால் ஏற்கனவே காங்கிரசின் சிட்டிங் சீட் என்பதால் தமிழகத்தில் தொகுதிகளை குறைத்தாலும், புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்.பி.யாக உள்ள வைத்திலிங்கமே மீண்டும் போட்டியிடுவதற்கு அதிகமான சாத்தியக்கூறு உள்ளது.

    மாநில காங்கிரஸ் தலைவராக உள்ள வைத்தி லிங்கத்திற்கும், உள்ளூர் அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் உள்ளது. ஏனெனில் 2026-ல் சட்ட மன்ற தேர்தல் வரும்போது, மீண்டும் தனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என விரும்புகிறார்.

    இதனால் வெளிப்படையாக இதுவரை தான் எம்.பி. பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறவில்லை.

    அதேநேரத்தில் காங்கிரசில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும் போட்டியிட சீட் கேட்டு வருகிறார். கூட்டணியில் தமிழகத்தில் பேச்சுவார்த்தை முடிந்து, புதுச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் போதுதான் இதற்கு முடிவு கிடைக்கும்.

    உள்ளூர் அரசியலில் ஈடுபட புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து விருப்பம் காட்டி வருவதால் வேட்பாளர் தேர்வில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் எந்த கட்சிகள் சேரும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க. போட்டியிட்டால் 4 பிராந்தியத்துக்கும் அறிமுகமான புதுவை மாநில செயலாளர் அன்பழகன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

    ஒரு வேளை அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைந்தால் புதுவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் களமிறக்கப் படலாம். ஏனெனில் பா.ம.க.வும் புதுவை தொகுதிக்கு குறி வைக்கிறது.

    • அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை.
    • தடையை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு.

    அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி அளித்த இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.

    இது அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவரது அணியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளார்.

    அ.தி.மு.க. கட்சியை கைப்பற்றும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவது குறித்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் பதில் அளிக்கையில் ''ஹீரோ வில்லனிடம் அடிவாங்கிக் கொண்டிருப்பார். கடைசியில் ஒரே அடி. வில்லன் அவுட்டாகி விடுவார். இந்த கதை நடக்கும்.

    அ.தி.மு.க. நல்லா இருக்க வேண்டும். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணம். அதை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம். இந்த மனநிலையில்தான் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்'' எனக் கூறினார்.

    • காந்தியின் நாடு வேண்டுமா? கோட்சேவின் நாடு வேண்டுமா? என மக்களிடம் கேட்க வேண்டும்.
    • தமிழகத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்கள் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரசில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் 100 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். பிப்ரவரி 1-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட கஷ்டங்களுக்கு விடுதலை கிடைக்க 100 நாட்கள் நாம் கடுமையாக பணியாற்ற வேண்டும்.

    காந்தியின் நாடு வேண்டுமா ? கோட்சேவின் நாடு வேண்டுமா? என மக்களிடம் கேட்க வேண்டும். தற்போது நடக்கும் மோடியின் ஆட்சியின் தான் கோட்சே ஆட்சி. காந்தியின் கொள்கைக்கு எதிரான ஆட்சி. தமிழகத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்கள் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறது. மகளிர் உரிமை தொகையை பெற முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் ஒரு பெண்ணுக்கு கூட போய் சேரவில்லை.

    இதே தான் மோடி ஆட்சியின் நிலையும். இங்கே சின்ன மோடி. அங்கே பெரிய மோடி. இருவரும் பீலர்.. பொய்யர்.. இவர்களை தூக்கி எறிய எல்லா மட்டத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவாவில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றிருப்பதாக அவர் கூறினார்.
    • கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ. புதுவை திரும்புகின்றனர்.

    புதுச்சேரி:

    கோவா மாநிலத்திற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் என கட்சி வித்தியாசமின்றி புதுவை எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் 2 நாள் அரசு முறை பயணமாக சென்றனர்.

    கோவா சட்டமன்றத்தை நேற்றைய தினம் அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் கோவா கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசினர். இன்றும் அவர்கள் கோவாவில் முகாமிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை எம்.எல்.ஏ.க்கள் கோவா பயணத்தை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. விமர்சித்திருந்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள், கோவாவில் சூதாட்ட கிளப்புகளை பார்வையிட சென்றி ருப்பதாக கூறியிருந்தார்.

    இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவாவில் கட்டப் பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றி ருப்பதாக அவர் கூறினார்.

    இதனிடையே கோவாவுக்கு சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.

    நேற்றைய தினம் கவர்னர், முதல்- அமைச்சர் சந்திப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. புதுவை எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்திருப்பது

    எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்ப டுத்தியுள்ளது. இதனால் ஆரம்பத்தில் கோவா பயணத்தில் பெயர் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பயணத்தை வைத்திலிங்கம் விமர்சனத்தால் தவிர்த்தனர்.

    கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ.  புதுவை திரும்புகின்றனர்.  

    • காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளது.
    • புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக மக்களவை எம்பி வி.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு மாநிலங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்து அறிவிப்பு வெளியானது.

    அதன்படி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக மக்களவை எம்பி வி.வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

    குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக மாநிலங்களவை எம்பி ஷக்திசின் கோஹிலும், அரியானா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவராக தீபக் பபாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர்.
    • ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார்.

    ஓ.பி.எஸ் அணியின் பலம் வாய்ந்த தலைவர் வைத்திலிங்கம். சட்டப்போராட்டங்களை முன்னெடுத்த போது அ.தி.மு.க.வை கைப்பற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அணிவகுத்து நின்றார். ஆனால் இப்போது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் வசம் ஆகிவிட்டது. ஓ.பன்னீர்செல்வம் தொடுத்த அஸ்திரங்கள் அனைத்தும் வீணாகி போனது. அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாத நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தவித்துக்கொண்டிருக்கிறார்.

    தன் கையை கொஞ்சமாவது பலம் ஆக்கி கொள்ள டி.டி.வி.தினகரனோடு கைகோர்த்து இருக்கிறார். இது எந்த அளவுக்கு எதிர்காலத்தில் பலன் கொடுக்கும் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. வைத்திலிங்கத்தை பொறுத்தவரை தஞ்சை மண்டலத்தில் குறிப்பாக ஒரத்தநாட்டில் தனி செல்வாக்கு வைத்திருப்பவர். ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்தில் பலமான தலைவர்களாக அவர் வைத்திருந்தவர்களில் வைத்தி லிங்கமும் ஒருவராக இருந்தார். குறிப்பாக நால்வர் அணியில் இவரும் இடம் பிடித்து இருந்தார். இப்படி தனக்கென செல்வாக்கை வைத்திருந்தும் அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில்தான் இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வத்துடனும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கும் அவரால் செல்ல முடியாது. இந்த சூழ்நிலையை சமயோசிதமாக பயன்படுத்திக்கொள்ள தி.மு.க. திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே அந்த பகுதியில் தி.மு.க.வுக்கு பலமான தலைவர்கள் இல்லை. பழனிமாணிக்கம் இருந்தாலும் அவரது செயல்பாடு தீவிரமாக இல்லை என்ற கருத்து கட்சிக்குள்ளேயே நிலவுகிறது. இப்போது அந்த பகுதியை கவனித்து வரும் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திருச்சியை சேர்ந்தவர். அதேபோல் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் மன்னார்குடியை சேர்ந்தவர்.

    எனவே தஞ்சாவூர், ஒரத்தநாடு பகுதியில் தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்க வைத்திலிங்கம் கிடைத்தால் நல்லது என்ற எண்ணம் தி.மு.க.வினரிடையே ஏற்பட்டுள்ளது. இதற்காக வைத்தி லிங்கத்துக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதியில் உள்ள உடன்பிறப்புகள் உறுதிபடுத்தினார்கள். நிச்சயம் பாராளுமன்ற தேர்தல் வருவதற்குள் வைத்தி லிங்கம் தி.மு.க.வில் ஐக்கியமாவார் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

    • ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.
    • டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் பலம்மிக்க தலைவராக இருப்பவர் வைத்திலிங்கம். தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செயல்பட்டபோது அந்த அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கு பாலமாக இருந்தவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர்.

    மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பலர் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தபோதும் அந்த அணியை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களில் வைத்திலிங்கம் முக்கியமானவர்.

    தஞ்சை மண்டலத்தில் செல்வாக்குடன் இருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் வைத்திலிங்கம் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் டி.டி.வி. தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    அந்த குழுவில் வைத்திலிங்கம் இடம்பெறவில்லை. அப்போதே ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அரசல்புரசலாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனக்கு தெரிந்து தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க சென்றார் எனவும், தான் புறக்கணிக்கப்படவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார். ஆனால் உண்மையில் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்களையும் அவர்கள் தெரிவித்தனர். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தியபோது அந்த பொறுப்பை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.

    தஞ்சை மண்டலத்தில் தனி செல்வாக்குடன் இருப்பதால் அவரால் தான் மாநாட்டை சிறப்பாக நடத்த முடியும் என்பதற்காகத்தான் அந்த பொறுப்பை அவரிடம் வழங்கி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.

    பின்னர் மாநாட்டின் செலவுகள் தொடர்பான கணக்கை வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது பணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்பதோடு சில நிகழ்வுகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது வைத்திலிங்கத்துக்கு பிடிக்காததால் உடனடியாக அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் வைத்திலிங்கம் சமாதானம் அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்து இருப்பதால் இனி ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கப்போவதில்லை. டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    • ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான்.
    • அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவளரான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார்.

    ஆனால் நான், பிரபாகரன், மனோஜ்பாண்டியன் ஆகியோர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்திப்பதால் செல்லவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்து இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்பது தான். இதுதான் உண்மையான தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காக தான் அவர் பாடுபட்டு வருகிறார். மேலும் டி.டி.வி.தினகரனை சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.

    அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தால் தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காக தான் ஓ.பி.எஸ் பாடுபட்டு வருகிறார்.

    திருச்சி மாநாட்டை போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்பு விடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம்.
    • ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக.

    திருச்சி:

    ஓபிஎஸ் அணி நடத்தும் திருச்சி மாநாட்டில் அ.தி.மு.க. கொடி கட்சி பெயரை பயன்படுத்த அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இன்று காவல்துறையினரிடம் மனு அளித்தனர்.

    இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அணி இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று மாநாட்டு திடலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் சொந்தமாகவில்லை.

    சின்னம் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    அதிமுக கொடியில் விருப்பப்பட்டவர்கள் இரட்டை இலை சின்னத்தை வைப்பார்கள் அந்த அடிப்படையில் நாங்களும் வைத்திருக்கின்றோம். சட்ட சிக்கலுக்கு பயந்து வைக்கவில்லை. இரட்டை இலை சின்னம் அவர்களுக்கு இன்னமும் நிரந்தரமாக உறுதியாகவில்லை.

    கட்சி கொடி, கட்சியின் பெயர் எல்லாவற்றையும் பயன்படுத்தி வருகிறோம். பயன்படுத்துவோம். வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இல்லை என்று நீதிமன்றம் கூறவில்லை. இது போன்ற பல மாநாடுகளை தமிழ்நாட்டில் நடத்துவோம்.

    ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுகவே ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமிக்கு தான் இரண்டாவது இடம்.

    இவ்வாறு ஆவேசமாக அவர் கூறினார்.

    • தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
    • மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனிப்பாதையில் பயணித்து வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறார்.

    இந்த நிலையில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பலத்தை காண்பிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ந்தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாடு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி மற்றும் 87 மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக வைத்திலிங்கம் இன்று கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற 24-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார்.

    அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.ஆர். ராஜ்மோகன், ரத்தினவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    ×