search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பி.எஸ். அணி முக்கிய தலைவர் வைத்திலிங்கம் கடும் அதிருப்தி- சமரச முயற்சிகள் தீவிரம்
    X

    ஓ.பி.எஸ். அணி முக்கிய தலைவர் வைத்திலிங்கம் கடும் அதிருப்தி- சமரச முயற்சிகள் தீவிரம்

    • ஓ.பன்னீர்செல்வம் எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.
    • டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் பலம்மிக்க தலைவராக இருப்பவர் வைத்திலிங்கம். தனி அணியாக ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து செயல்பட்டபோது அந்த அணியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதற்கு பாலமாக இருந்தவர்களில் வைத்திலிங்கமும் ஒருவர்.

    மீண்டும் ஒற்றை தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து பலர் விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தபோதும் அந்த அணியை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களில் வைத்திலிங்கம் முக்கியமானவர்.

    தஞ்சை மண்டலத்தில் செல்வாக்குடன் இருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். எடப்பாடி பழனிசாமி இல்லாத ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் வைத்திலிங்கம் அதிருப்தியுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் டி.டி.வி. தினகரனை, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அப்போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றிருந்தனர்.

    அந்த குழுவில் வைத்திலிங்கம் இடம்பெறவில்லை. அப்போதே ஏதோ கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அரசல்புரசலாக தகவல்கள் வெளியானது. ஆனால் தனக்கு தெரிந்து தான் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரனை சந்திக்க சென்றார் எனவும், தான் புறக்கணிக்கப்படவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார். ஆனால் உண்மையில் அவர் அதிருப்தியுடன் இருப்பதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். அதற்கு முக்கியமான சில காரணங்களையும் அவர்கள் தெரிவித்தனர். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தியபோது அந்த பொறுப்பை வைத்திலிங்கத்திடம் ஒப்படைத்திருந்தார்.

    தஞ்சை மண்டலத்தில் தனி செல்வாக்குடன் இருப்பதால் அவரால் தான் மாநாட்டை சிறப்பாக நடத்த முடியும் என்பதற்காகத்தான் அந்த பொறுப்பை அவரிடம் வழங்கி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எதிர்பார்த்தது போல் பணத்தை தண்ணீர்போல் செலவு செய்து மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்தார் வைத்திலிங்கம்.

    பின்னர் மாநாட்டின் செலவுகள் தொடர்பான கணக்கை வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்திருக்கிறார். அப்போது பணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்பதோடு சில நிகழ்வுகளையும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் நினைவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இது வைத்திலிங்கத்துக்கு பிடிக்காததால் உடனடியாக அங்கிருந்து கிளம்பி இருக்கிறார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கத்தை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் வைத்திலிங்கம் சமாதானம் அடையவில்லை என்றே கூறப்படுகிறது.

    மேலும் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்று டி.டி.வி.தினகரனுடன் கைகோர்த்து இருப்பதால் இனி ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கப்போவதில்லை. டி.டி.வி.தினகரனுக்கு கட்டுப்பட்டு தான் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவார் என்ற எண்ணமும் வைத்திலிங்கத்திடம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×