search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 24-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்: வைத்திலிங்கம்
    X

    வருகிற 24-ந்தேதி நடைபெறும் மாநாட்டில் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள்: வைத்திலிங்கம்

    • தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.
    • மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தனிப்பாதையில் பயணித்து வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து போராடி வருகிறார்.

    இந்த நிலையில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது பலத்தை காண்பிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ந்தேதி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இந்த மாநாடு தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார். மேலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், பிரபாகர், பி.எச்.மனோஜ் பாண்டியன், கொள்கை பரப்புச் செயலாளர்கள் மருது அழகுராஜ், புகழேந்தி மற்றும் 87 மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதுதொடர்பாக வைத்திலிங்கம் இன்று கூறியதாவது:-

    திருச்சியில் வருகிற 24-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, கட்சி பொன்விழா, மாநாடு ஆகிய முப்பெரும் விழா பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க.வின் தலைவரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை கட்சியின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தந்திருக்கிறார்.

    அந்த தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த மாநாடு நிரூபிக்கும். இதில் மாநிலம் தழுவிய அளவில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    கட்சி முழுமையாக எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றிருப்பதாக சொல்வதை நாங்கள் நம்பவில்லை. தஞ்சாவூரை எடுத்துக் கொண்டால் 75 சதவீதம் கட்சியினர் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் இருக்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பது வருகிற 24-ந்தேதி நிரூபணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சியில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செயலாளர் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.ஆர். ராஜ்மோகன், ரத்தினவேல் ஆகியோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×