என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயர சம்பவத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
- கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
- சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கரூர்:
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிக்கு மாற்றப்பட்டு கடந்த மாதம் 19-ந் தேதியிலிருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் உட்பட நிர்வாகிகள் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை மாவட்டத்தை சேர்ந்த இந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார், டெக்ஸ் தொழில் அதிபர் மற்றும் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுலக்கண்ணன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விசாரணைக்காக ஆஜராகினர்.
அதனை தொடர்ந்து கரூர் துயர சம்பவம் குறித்து நாமக்கல் மாவட்டம், ஓடு வந்தூர் தேசிய முற்போக்கு திராவிட கழக ஒன்றிய இணை செயலாளர் நவலடி என்பவர் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கும் அழைத்து சம்பவம் குறித்து விசாரணை செய்த நிலையில் தற்போது சிபிஐ விசாரணைக்காக ஆஜராகினர்.
குறிப்பாக கரூர் துயர சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட நபர்களுக்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.






