search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் பா.ஜனதா உடன் பாமக கூட்டணி.
    • இன்று காலை நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    தமிழகத்தில் மக்களை தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்துள்ளது.

    அதிமுக, பா.ஜனதா கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர இருப்பதாக தகவல் வெளியானது. அதற்கு ஏற்ப இரு கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. நேற்று வரை அதிமுக கூட்டணியில்தான் பாமக இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதால் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என பாமக திடீரென அறிவித்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

     அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர ராமதாஸ் இல்லத்தில் இன்று காலை இரு கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்றனர். அண்ணாமலையை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார்.

    பின்னர் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் சில சந்தேகங்களை அண்ணாலையிடம் எழுப்பினார். இது தொடர்பாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தலாம் எனத் தெரிவிக்க அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர் டாக்டர் ராமதாஸ் உடன் தனிஅறையில் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் பா.ஜனதா- பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
    • டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் உயிரிழந்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பீரங்கிமேட்டை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 47). இவர் செஞ்சி நகர அ.தி.மு.க. செயலாளராக இருந்தார். இவருக்கும், செஞ்சியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் டீக்கடை நடத்தி வரும் காரை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(44), மனைவி கல்பனா(36) தம்பதிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் ராஜேந்திரன் டீக்கடை அருகில் உள்ள ஒரு தனியார் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக வெங்கடேசன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    இதைப்பார்த்த ராஜேந்திரன், வெங்கடேசனை வழிமறித்து மோட்டாா் சைக்கிளில் இருந்து அவரை கீழே தள்ளினார். பின்னர், அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதற்கு கல்பனாவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து வெங்கடேசனின் உறவினர் நாராயணன் செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார். தலைமறைவான கல்பனாவை தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட வெங்கடேசனுக்கு நித்யா (38) என்ற மனைவியும், கீர்த்தனா (15), தனுஸ்ரீ (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை.
    • கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது நடுக்குப்பம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த அனைத்து பொதுமக்கள் சார்பில் 10 நாள் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோவில் திருவிழாவை நடத்துவது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த இரு தரப்பினருக்கு கடந்த 7 வருடங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக அரசு அதிகாரிகள் இரு தரப்பினருக்கும் எவ்வித பிரச்சனையும் உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி விட்டனர். இதனால் கடந்த 7 ஆண்டு களாக திருவிழா நடைபெறவில்லை.


    இந்நிலையில் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் சார்பில் எங்கள் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவதை அரசு அதிகாரிகள் சட்டவிதிகளை பயன்படுத்தி தடுக்கின்றனர்.

    அரசு அதிகாரிகள் எங்களை தடுப்பதால் திருவிழா நடத்த முடியவில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கோவிலுக்கு வழக்கம்போல் திருவிழா நடத்த அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரசு அதிகாரிகள் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    மேலும் அரசு சார்பில் எங்களுக்கு வழங்கிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களையும் திரும்ப அரசிடமே ஒப்படைப்போம் என கோவில் வளாகத்தில் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதற்கட்டமாக அறிவித்து உள்ளனர்.

    • திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னையில் இருந்து அரியலூருக்கு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனை டிரைவர் பிரதீஸ்வரன்(42) ஓட்டி வந்தார்.

    திண்டிவனம் அருகே சாரம் பாஞ்சாலம் ஜங்ஷன் அருகே வந்த போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்த அரசு பஸ் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அரசு பஸ் டிரைவர் பிரதீஸ்வரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த 17-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுபவிக்கப்பட்டனர்.

    இதில் 9-க்கும் மேற்பட்டோர் சென்னை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
    • தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மிகவும் புகழ்பெற்றதும், பழமைவாய்ந்ததுமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் மாசிப்பெருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு சக்தி கரக ஊர்வலமும், மறுநாள் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும், 12-ந்தேதி தீமிதி விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து, தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலாவாக வந்து அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அங்காளம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவ அம்மன், சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதனைத்தொடர்ந்து பனை, புளி, காட்டுவாகை, சவுக்கு உள்ளிட்ட மரங்களைக்கொண்டு புதிதாக கோவிலின் மேற்கு வாசலில் தேர் வடிவமைக்கப்பட்டது. அந்த தேருக்கு பலவித பூக்களால் ஆன மாலைகள், பனங்குலை, தென்னங்குலை, ஈச்சங்குலை, வாழை மரங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 2 மணிக்கு மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு இழுத்து வந்து நிறுத்தினர்.

    பின்னர் கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த உற்சவ அம்மனை பூசாரிகள் பம்பை, மேள, தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தினர். அதன் பிறகு ஊரின் முக்கிய பிரமுகர்களுக்கு கோவில் சார்பில் மரியாதை செய்தவுடன் அம்மனுக்கும், தேருக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோவிந்தா... அங்காளம்மா... ஈஸ்வரி தாயே என்ற பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு ஏராளமான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்த தேர், பக்தர்களின் வெள்ளத்தில் கோவிலைச்சுற்றி அசைந்தாடியபடி நிலைக்கு வந்தது.

    தேர் சென்ற வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், தங்கள் வயல்களில் விளைந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றையும், சுண்டல், கொழுக்கட்டை, சில்லறை நாணயங்கள் ஆகியவற்றையும் தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

     அதுமட்டுமின்றி சில பக்தர்கள், திருநங்கைகள் பலவித அம்மன் மற்றும் சித்தாங்கு வேடமணிந்தும், கையில் தீச்சட்டி ஏந்தியும், நாக்கு, தாடைகளில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் அம்மன், வெள்ளை யானை வாகனத்தில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அப்போதே திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்து திருக்கோவிலூருக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

    ஏற்கனவே, விளவங்கோடு தொகுதிக்கும் விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாங்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
    • இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.

    விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.

    • அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு.
    • விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

    இதில், குற்றம்சாட்டப்பட்ட சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 4 பேர் ஆஜராகினர். மூன்று பேர் ஆஜராகாததை அடுத்து, இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.

    அதன்படி, இன்றைய வழக்கு மீதான விசாரணை நீதிபதி முன் வந்தது. இதில், மேலும் ஒரு முக்கிய சாட்சி , பிறழ் சாட்சியமானது.

    இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியம் ஆன நிலையில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளார். ஓய்வு பெற்ற விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பிறழ் சாட்சியம் அளித்ததால் பரபப்பு ஏற்பட்டுள்ளது.

    • ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார்.
    • நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாசை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் மாநிலங்களைவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் நேற்று இரவு சந்தித்து பேசியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்தது.

    இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தீவனூரில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சி.வி. சண்முகம் இன்று காலையில் வந்தார். நிகழ்ச்சி முடித்து அங்கிருந்த கிளம்பிய சி.வி. சண்முகத்திடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நான் யாரையும் சந்திக்கவில்லை என்றும், ஊடகங்களில் வருகின்ற செய்திகள் தவறானது என்று கூறிய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

    • சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது.
    • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார்.

    செஞ்சி:

    சென்னையை சேர்ந்த 9 பேர் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஆட்டோவில் வந்தனர். கிரிவலம் முடிந்து தங்களின் குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் இருந்த தங்களின் உறவினர் வீட்டிற்கு நள்ளிரவு 2.30 மணிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செஞ்சி அருகேயுள்ள கப்பை என்ற ஊர் அருகே சென்று கொண்டிருந்த போது, சாலை வளைவில் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர். இதில் ஆட்டோ டிரைவர் யுவராஜ், சத்யா ஆகியோர் உட்பட உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். யுவராஜின் மகன்கள் பிரதீஸ்வரன் (வயது 11), ஹரி பிரசாத் (வயது 7) ஆகியோர் கிணற்றில் மூழ்கி இறந்து போனார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் படுகாயம் அடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விபத்தில் இறந்து போன 2 சிறுவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவு பெற்றுள்ளதாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

    மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறும் அங்குள்ள டாக்டர்களுக்கு அறிவுருத்தினார். அப்போது செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், தாசில்தார் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

    • பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.
    • நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    சென்னை, கொளத்தூரை சேர்ந்த மாணவர் ரமேஷ் (வயது 21). இவர் சென்னையில் வேலை செய்து வந்த தனது காதலி பவித்ராஸ்ரீ (20) என்பவருடன் திருவண்ணாமலை கோவிலுக்கு கிரிவலம் செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே, மோட்டார் சைக்கிளை 2 பேர் வழிமறித்து மொபைல் போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை தேடி மாணவர் ரமேஷ் சென்றுள்ளார்.

    அவர் திரும்பி வந்து பார்த்த போது பவித்ராஸ்ரீ சாலையில் தலை நசுங்கி இறந்து கிடந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஓலக்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், கல்லூரி மாணவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். வழிப்பறி என்று மாணவர் நாடகமாடுகிறாரா? மாணவருக்கும், அவரது காதலிக்கும் இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டதில் வாகனத்தின் முன்பு ஓடிச் சென்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை வாகனத்தின் முன்பு தள்ளி விட்டு மாணவர் கொலை செய்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது, அனைத்து கேமராக்களும் பூமியை பார்த்தபடி தலைகவிழ்ந்து இருந்தது.

    இதனால் நடந்த உண்மை சம்பவத்தை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    • ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர்.
    • ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு மகன் யுவராஜ் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்திற்காக தனது மனைவி சத்யா (35) மகன்கள் பிரகதீஸ்வரன் (11), அரிப்பிரசாத் (7) மற்றும் உறவினர்களுடன் சென்றார்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் முடித்துவிட்டு, யுவராஜின் உறவினரான சென்னை குன்றத்துரை சேர்ந்த கலிவரதன் மகன் உத்தரகுமார் (30), அவரது மனைவி உறவினர்கள் என மொத்தம் 9 பேர் சென்னை செல்ல திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டனர். வீடு திரும்பும் வழியில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள புலி வந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டனர். இதனை தொடர்ந்து யுவராஜின் மாமியார் வீடு உள்ள கப்பை கிராமத்திற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் கப்பை கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு திருப்பத்தில் வந்த போது திடீரென ஆட்டோ நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் சென்ற அனைவரும் கிணற்றில் விழுந்தனர். இதில் ஒரு சிலர் பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து வந்து மேலே ஏறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, மீதம் இருந்தவர்களை கிணற்றில் இருந்து மீட்டு அவர்களை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் யுவராஜின் 2 குழந்தைகளை மீட்க முடியாததால், செஞ்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி இறந்த 2 குழந்தைகளின் உடலை மீட்டனர். தொடர்ந்து அங்கு வந்த செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கிணற்றில் மூழ்கி இறந்த பிரகதீஸ்வரன், அரிபிரசாத் ஆகியோரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ், அவரது மனைவி சத்யா, உத்தரகுமார், அவரது மனைவி பொன்னி (20), மற்றும் உறவினர்களான பாஞ்சாலி (50), அம்மச்சி (50), அம்மச்சியின் மகன் ஆகாஷ் (18) ஆகிய 7 பேரிடம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றுவிட்டு, குலதெய்வம் கோவிலில் வழிபட்டு வீடு திரும்பிய போது, ஆட்டோ கவிழ்ந்து 2 குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×